“உயரும்வரையிலும் உங்களைக் கைவிட மாட்டேன்…” – இயக்குநருக்கு உறுதியளித்திருக்கும் நயன்தாரா..!

“உயரும்வரையிலும் உங்களைக் கைவிட மாட்டேன்…” – இயக்குநருக்கு உறுதியளித்திருக்கும் நயன்தாரா..!

K.J.R. ஸ்டுடியோஸ் சார்பில் ராஜேஷ்  தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்திருக்கும் படம் ‘அறம்’.

நயன்தாராவுடன், ராம்ஸ், பாண்டியன், சுனு லட்சுமி, ரமேஷ், விக்னேஷ், பழனி பட்டாளம், தன்ஷிகா, வேல ராமமூர்த்தி, ஜீவா ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கியுள்ள இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லால்குடி இளையராஜா கலை இயக்கம் செய்திருக்கிறார். சண்டை பயிற்சியை பீட்டர் ஹெய்ன் செய்திருக்கிறார். மேக்கப் – ராஜூ, உடைகள் – ரவி, தயாரிப்பு நிர்வாகம் – செளந்தர் பைரவி, தயாரிப்பு – கொடப்பாடி ஜே.ராஜேஷ்.

முன்னதாக நாயகியை மையப்படுத்திய பல படங்களில் நயன்தாரா நடித்திருந்தாலும், இந்த படம் சமூக பிரச்சினைகளை பற்றி பேசும் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.

aram movie press meet

நிகழ்ச்சியில் நடிகர் பழனி பட்டாளம் பேசும்போது, “டிவி நிகழ்ச்சிகளில் காமெடியாக பார்த்த என்னை சினிமாவில் முதன்முறையாக சீரியஸான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் கோபி. நடிகர் நாகேஷ்கூட முதல் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில்தான் நடித்தார், நீங்க நல்ல வருவீங்க என்று சொன்னார் இயக்குநர். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பெரிய ரசிகன், அவருடன் நடித்தது என் பாக்கியம்…” என்றார்.

e.ramdoss

நடிகரும், இயக்குநருமான ஈ.ராம்தாஸ் பேசும்போது, “இந்தக் காலக்கட்டத்துக்கு தேவையான மிகவும் முக்கியமான படம். படம் பார்க்கும் ரசிகர்களின் மனதை இந்த ‘அறம்’ கனக்க செய்யும் படம். படத்தில் வரும் வசனங்கள் அனைத்தும் சாட்டையடியாக இருக்கும். கோபி பெரிய புரட்சிகர இயக்குநராக வருவார்…” என்றார்.

pandian

நடிகர் பாண்டியன் பேசும்போது, “ராஜா ராணி’ படத்தின் நயன்தாராவுடன் நடித்ததன் மூலம் நிறைய இளைஞர்களிடத்திலும் போய் சேர்ந்திருக்கிறேன். அவருடன் இரண்டாவது முறையாக சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி. கடும் வெயிலில் ஒரு பெருங்கூட்டம் மிகவும் கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கியிருக்கிறது…” என்றார்.

director gopi nainaar 

படத்தின் இயக்குநரான கோபி நைனார் பேசும்போது, “இந்த படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த துயரத்தின்போது எனக்கு மிகப் பெரிய ஆதரவாக இருந்தது பத்திரிக்கையாளர்கள்தான். அதன் மூலம்தான் இந்த மிகப் பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது என்பதுதான் உண்மை. இயக்குநர் சற்குணம்தான் தயாரிப்பாளர் ராஜேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

அதன் பின் நயன்தாராவுக்கு கதை சொல்ல வைத்தார்கள், சில மணி நேரங்களிலேயே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார்கள். எல்லாமே ஒரு கனவு போல வேகமாக நடந்தது. கதை ஓகே ஆன பிறகுகூட இந்த படத்தை தடுக்க நிறைய பேர் முயற்சி செய்தார்கள். ஆனாலும் நயன்தாரா மேடம் உறுதியாக இருந்து இந்த படத்தை முடிக்க துணை நின்றார்.

இந்த படத்தில் என்னை போலவே எல்லோருக்கும் சமூக அக்கறை இருந்தது, அதனால்தான் எல்லோரும் இந்த படத்துக்குள் வந்தார்கள். முதலில் பாடல்கள் வேண்டாம் என்றுதான் முடிவெடுத்திருந்தோம். பின்னர் படத்தை முடித்த பிறகு இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு போட்டுக் காட்டி, உமாதேவியின் வரிகளில் பாடல்களை சேர்த்தோம். 

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட என்னிடம் பேசிய நயன்தாரா, ‘நிச்சயம் படம் வெற்றி பெறும். அடுத்த கட்டத்துக்கு உங்களை நகர்த்தும்வரை நான் உடன் இருப்பேன்…’ என்றார். எங்களை போன்ற கலைஞர்களை பத்திரிக்கையாளர்கள் நீங்கள்தான் அடக்குமுறையில் இருந்து காப்பாற்ற வேண்டும்…” என்றார்.

இந்த சந்திப்பில் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், சௌந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Our Score