full screen background image

அரபு நாட்டு அழகி ஹீரோயினாக நடிக்கும் புதிய தமிழ்ப் படம் ‘அரபு தாக்கு’..!

அரபு நாட்டு அழகி ஹீரோயினாக நடிக்கும் புதிய தமிழ்ப் படம் ‘அரபு தாக்கு’..!

Spell Bound Films Inc. நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய தமிழ்த் திரைப்படம் ‘அரபு தாக்கு.’

படம் பற்றி இயக்குநர் பிரான்ஸிஸ் பேசும்போது, “அரபு நாடுகளுக்கு சென்று திரும்புபவர்களுக்கு  ‘அரபு தாக்கு’ என்ற சொல் பல்வேறு கோணங்களில் பரிச்சயமாகியிருக்கும். அதையே படத்தின் டைட்டிலாக வைத்திருக்கிறோம்.

இதுவரை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் பின்னணியில் ஏராளமான தமிழ்ப் படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் அரபு நாடான துபாயின் பின்னணியில் எடுக்கப்படவிருக்கும் முதல் தமிழ்ப் படம் இதுதான்.

ZF1A6946 v2

தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமானவர்கள் வேலை தேடி துபாய்க்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் படும்பாட்டையும், கடினமாக உழைத்து எப்படி முன்னேறுகிறார்கள் என்பதையும், சந்திக்கும் சவால்களை எப்படி சாதனையாக்குகிறார்கள் என்பதைப் பற்றியும் இந்தப் படத்தில் அழகாக சொல்லவிருக்கிறோம்.

இயக்குநர் பரதன் இயக்கிய ‘அதிதி’ என்ற படத்தில் அறிமுகமான நிகேஷ் ராம் இதில் கதையின் நாயகனாக நடிக்கிறார். தமிழில் முதன்முதலாக தமிழே தெரியாத பெர்குஸார் கொரல்(Berguzar Korel)  என்ற  அரபு நடிகை  ஒருவரை கதையின்  நாயகியாக  அறிமுகப்படுத்துகிறோம்.

இந்தப் படத்தில் நடிகர் தம்பி ராமைய்யா வித்தியாசமான ஒரு காமெடி கேரக்டரில் நடிக்கிறார். அத்துடன் ரவி மரியாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

தமிழர்களேயில்லாத ஊரில், தமிழ் மட்டுமே தெரிந்த நாயகனின் அமர காவியம்தான் இந்த  ‘அரபு தாக்கு’ என்று சுருக்கமாகச் சொல்லலாம்.

துபாயில் தமிழ் மீது அளவற்ற பற்றுக் கொண்டிருக்கும் ஒரு அரபுப் பெண்ணை பார்த்து பிரமித்துப்போன நாயகன், அவளின் ஆசையை நிறைவேற்ற என்ன செய்கிறான்…? அரபு நாட்டுப் பெண்களை கண்கொண்டு பார்ப்பதற்கே கடுமையான தண்டணைகள் நடைமுறையில் இருக்க, அவை எதற்கும் கட்டுப்படாமல் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அப்பெண்ணின் ஆசைகளை நிறைவேற்ற நாயகன் எப்படி போராடுகிறான்? இறுதியில் அவளது ஆசையை நிறைவேற்றினானா இல்லையா என்பதே கதையின் மையக் கரு.

படத்திற்கு ரத்தீஸ் வேஹா என்ற மலையாள இசையமைப்பாளரை தமிழில் அறிமுகப்படுத்துகிறோம். படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றிருக்கிறது. ரசிகர்களை கவரும் வகையில் பெல்லி நடனம் ஒன்றும் இடம் பெறுகிறது. படத்தில் இரண்டு சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.

Berguzar_Korel-with-makeup  

துபாயின் நவீன அடையாளமான  புர்ஜ் கலிபாவை வித்தியாசமான கோணத்தில் படமாக்கவிருக்கிறோம். இதற்காக  ஆகாய விமானத்தை  பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடங்கள் மிகுந்து காணப்படும் துபாய் ஷேக் சாயீத் சாலையிலும் முக்கியமான காட்சிகளை படமாக்கவிருக்கிறோம். துபாயைத் தவிர்த்து ஷார்ஜா, அபுதாபி என ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள அனைத்து பகுதிகளிலும் காட்சிகளை படமாக்கவிருக்கிறோம். அத்துடன் ஒரு சில காட்சிகளை  தமிழ்நாட்டிலும் படமாக்க எண்ணியிருக்கிறோம்.

காமெடி, ஆக்ஷன், லவ், சென்டிமெண்ட் என அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் டோட்டல் பேமிலி எண்டர்டெயினராக இப்படம் தயாராகவிருக்கிறது. யாரும் ஊகிக்காத வகையில் படத்தின் கிளைமாக்ஸ் இருக்கும்.

படத்தை தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்கவிருக்கிறோம்…” என்றார் இயக்குநர் பிரான்ஸிஸ்.

இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் துவங்கவிருக்கிறது.

Our Score