full screen background image

அப்பாக்களின் கடமைகளைப் பற்றி பேச வருகிறது ‘அப்பா’ திரைப்படம்

அப்பாக்களின் கடமைகளைப் பற்றி பேச வருகிறது ‘அப்பா’ திரைப்படம்

நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியின் நாடோடிகள்  நிறுவனம் மற்றும் மதியழகனின் எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்டும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அப்பா’.

இதில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா, வினோதினி, பிரீத்தி, நமோ நாராயணன், வேல ராமமூர்த்தி, விக்னேஷ், ராகவ், யுவலட்சுமி, கேப்ரில்லா, நசாத், திலீபன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம்.நாதன், படத் தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ், கலை இயக்கம் – ஜாக்கி, தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.பி.சொக்கலிங்கம், உடைகள் – நட்ராஜ், மேக்கப் – டி.தினகர், ஸ்டில்ஸ் – ஏ.ஆர்.முருகன், பி.ஆர்.ஓ. – நிகில், ஒலிக்கலவை – டி.உதயகுமார், இசை – இசைஞானி இளையராஜா, எழுத்து, இயக்கம் – சமுத்திரக்கனி.

இந்த ‘அப்பா’ படம் வரும் ஜூலை 1-ம் தேதியன்று வெளியாகவுள்ளது. இதையொட்டிய சந்திப்பில் ‘அப்பா’ படம் பற்றியும், தனது அப்பா பற்றியும் நெகிழ்ச்சியுடன் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான சமுத்திரக்கனி.

“இந்த ‘அப்பா’ திரைப்படம் நான்குவிதமான அப்பாக்கள் பற்றிய கதை. பொதுவாக எனது முந்தைய படங்களிலெல்லாம் அம்மாக்களைவிடவும் அப்பாக்களை பற்றியே அதிகம் சொல்லியிருப்பேன். என்னுடைய சிறிய வயதிலேயே என் அப்பாவை இழந்துவிட்டதால் அப்பா மீதான பார்வை எனக்குள் அதிகமாகவே இருக்கிறது.

பொதுவாக அம்மாக்கள் பலருமே நம்ம அப்பாக்கள் எது சொன்னாலும் அதை அப்படியே ஏத்துக்குவாங்க. சிலர் எதையுமே ஏத்துக்காம சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. பிள்ளையை வளர்க்குற விஷயத்துல அம்மாக்கள் அதிகமா செல்லம் கொடுத்து கெடுப்பாங்க. இந்த நேரத்துல அப்பா சொல்றதை அம்மாக்களும், பிள்ளைகளும் கேட்காமல் அவரை அவமரியாதை செய்வாங்க. இன்னும் சில அம்மாக்கள் அப்பாவோடு இணைந்து வாழ்வார்கள்..  அப்பான்னாலே கொஞ்சம் பயந்து ஒரு வார்த்தைகூட எதிர்த்து பேசாமல் இருக்கும்  அம்மாக்களும் இருக்கிறார்கள்.

இவர்களால்.. பிள்ளைகளின் வாழ்க்கை  என்ன ஆகிறது என்பதை இந்தப் படம் பேசும். இதை ஒரு பிரச்சார படமாகச் சொல்லாமல் நாம் இப்போது உட்கார்ந்து பேசுவதுபோல் இயல்பாக சொல்லியிருக்கிறேன். 

தமிழகத்தில் நடந்த பல நிஜமான சம்பவங்கள்தான் இந்தப் படத்தை எடுக்கத் தூண்டியது. கிட்டத்தட்ட நான்காண்டுகளாக பல தேடுதல் வேட்டைகளெல்லாம் நடத்திதான் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளேன்.

அவரவர் பிள்ளைகளை அவர்கள் விருப்பப்பட்டபடியே தங்களுடைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க அவர்களின் அப்பாமார்கள் அனுமதிக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதைக் கரு.

இதில் நான்கு பெற்றோர்கள். நான்கு பிள்ளைகள். இதில் சுதந்திரமாக பிள்ளையை வளர்க்கும் அப்பாவாக நான் நடித்துள்ளேன். அதிக பாசம் காட்டி வளர்க்கும் அப்பாவாக தம்பி ராமையாவும், எந்த வித்தியாசமும் காட்டாத ஒரு மாணவனின் அப்பாவாக நமோ நாராயணனும் நடித்துள்ளார்கள்.

நான் பி.எஸ்.சி., பி.எல். முடித்தாலும் திரைத்துறை மீதான ஆர்வத்தில்தான் இதில் நுழைந்தேன். இப்போது எனது மகன் 9-ம் வகுப்பு படிக்கிறான். அவனே திடீர் என்று ஒரு குறும்படத்தை இயக்கினான். அதில் என்னையவே நடிக்க வைத்தான். இது அவனது அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. ‘அவனை நல்லா படிக்கச் சொல்லுங்க’ன்னு சொல்றாங்க.

இப்படித்தான் ஒவ்வொருத்தர் வீட்டிலும் அந்தப் பிள்ளைகளின் விருப்பத்தை பள்ளிக் கல்விதான் முக்கியம் என்று சொல்லி திசை திருப்புகிறார்கள். அவன் என்னவாக வேண்டும் என்று அவன்தான் முடிவெடுக்க வேண்டும். நாம் கட்டாயப்படுத்தக் கூடாது.

பிள்ளைகளை கண்டிப்புடன் வளர்ப்பதையும், தண்டிப்பதையும்விட்டுவிட்டு அவர்களது பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டு அதைத் தீர்த்து வையுங்கள்.

ஆயிரத்து இருநூறுக்கு, ஆயிரத்து நூற்று நாற்பது மதிப்பெண் வாங்கிய மாணவியொருவர்,  இந்த மதிப்பெண்ணே குறைவு என்று நினைத்து வடபழனி ஃபோரம் மாலின் மொட்டை மாடியில்  இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாள்.. ஏன்..?

அந்தப் பெண்ணுக்கு அந்த மதிப்பெண்ணும் சிறப்பானதுதான். இது மட்டுமே வாழ்க்கையில்லை என்று சொல்லி புரிய வைக்க யாருமில்லை. அவர்களது குடும்பத்தினர் அதைச் செய்ய முயலவில்லை. இதனால் விளைந்தது அந்தப் பெண்ணின் தற்கொலை. இதைத்தான் தடுக்க வேண்டும் என்கிறேன்.

வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளின் பிரச்சினைகளை பேச அனுமதித்து, அதற்கு தீர்வினை உடனேயே கண்டறிந்து சொல்ல வேண்டும். தேர்வு தோல்வியா.. சக மாணவருடன் பிரச்சினை..? டீச்சர்களுடன் பிரச்சினையா என்றால் உடனடியாக அதைக் கேட்டு அவர்களை ஆறுதல்படுத்த வேண்டும்.

நம்ம அப்பா இருக்கார்.. அம்மா இருக்காங்க. அவர்கிட்ட சொல்லிட்டால் போதும். பேசினால் போதும் என்கிற தைரியம் அந்தப் பிள்ளைகளுக்கு வர வேண்டும். வந்துவிட்டால் அதுதான் குதூகலமான குடும்பமாக இருக்கும்.

ஆனால் பல குடும்பங்களில் இதனைச் செய்வதில்லை. அப்பா என்றாலே பயம். அம்மா மூலமாகவே பலரும் அப்பாவிடம் பேசுவார்கள். அவரை புரிந்து கொள்ளக்கூட முயல மாட்டார்கள். அதேபோல் அப்பாக்களும் பிள்ளைகளுடன் நேரடியாக பேச மாட்டார்கள். எதுவாக இருந்தாலும் அம்மா மூலம்தான் பாஸாகும். இந்தப் பிள்ளைகள் வளர்ந்த பின்பு அவர்களுக்கும், தந்தைக்குமான உறவு எப்படியிருக்கும்..?

நமக்கு முந்தைய தலைமுறையில் அப்பா – பிள்ளை இடையே இடைவெளிகள் இருந்தாலும் குடும்பத்தில் மற்ற உறவுகளுடன் சுமூகமாக இருக்க முடிந்தது. ஆனால் இப்போது கூட்டுக் குடும்பமே சிதைந்துவிட்ட நிலையில், ஒரு படுக்கையறை கொண்ட வீட்டில் அப்பா, பிள்ளைகள் உறவு வலுப்பட வேண்டியிருக்கிறது. இவர்களிடையே இடைவெளியே இருக்கக் கூடாது என்பதை இந்தப் படம் அழுத்தமாகச் சொல்கிறது.

படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். உண்மையாக தனது இசையால் இந்தப் படத்துக்கே அப்பாவாகிவிட்டார் இளையராஜா. முதல்ல சந்திக்கும்போது எவ்வளவு சம்பளம்ன்னுகூட கேக்கலை. ‘ஏன் முன்னாடியே என்கிட்ட வரலை’ன்னு மட்டும்தான் கேட்டார். ‘அப்போ தோணலை ஸார். இப்போதான்.. இந்தப் படத்துக்குத்தான் தோணுச்சு’ என்றேன். நான் எடுத்திட்டு வந்த படத்தை இசைஞானிகிட்ட கொடுத்த பின்னாடி பார்த்தால், அந்தப் படமே ஒட்டு மொத்தமா வேற மாதிரி மாறியிருந்தது. அதுதான் இசைஞானியின் இசை.

நிச்சயமாக இந்தப் படம் கருத்து சொல்லும் படமல்ல. அதே சமயம் இந்தப் படம் துவங்கிய 15 நிமிடத்திலேயே நீங்கள் உங்களது அப்பாமார்களை நிச்சயமாக நினைக்க வைக்கும்.  உங்களுடைய வாழ்க்கையை அசைபோட வைக்கும். நான் இதுவரையில் இயக்கிய படங்களிலேயே சிறந்த படம் இதுதான் என்கிற உணர்வை இது எனக்கு ஏற்படுத்தியுள்ளது..” என்கிறார் உற்சாகமாக. 

Our Score