ஆண்டனி புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் விடோ விவேக் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஆண்டனி’.
இந்தப் படத்தில் ‘சண்டக் கோழி’ புகழ் ‘லால்’, நிஷாந்த், வைசாலி, நடிகை ரேகா, சம்பத் ராம், ‘வெப்பம் ‘ ராஜா, சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆர்.பாலாஜி, படத் தொகுப்பு – குமார், கார்த்திக், இசை – ஆர்.ஷிவாத்மிக்கா, கலை இயக்கம் – சுராஜ், போஸ்டர் வடிவமைப்பு – மணிகண்டன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமத், இணை தயாரிப்பு – கிறிஸ்டோபர், தயாரிப்பாளர் – விடோ விவேக், தயாரிப்பு நிறுவனம் – ஆண்டனி புரொடெக்சன்ஸ், எழுத்து, இயக்கம் – குட்டி குமார்.
இந்தப் படத்திற்கு 19 வயது இளம் பெண்ணான ஷிவாத்மிக்கா இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் S.A.சந்திரசேகர் மற்றும் நடிகை ஜெயசித்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் S.A.சந்திரசேகர் பேசும்போது, “இந்தப் படக் குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள். படத்தின் டிரெயிலர் பிரமிக்க வைக்கிறது. படத் தொகுப்பு மிக அருமையாக உள்ளது. படம் மிகப் பெரிய வெற்றியடைய வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்…” என்றார்.
நடிகை ஜெயசித்ரா பேசும்போது “இந்தப் படக் குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்து உள்ளனர். இந்த படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும். தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கும் படக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்…” என்று வாழ்த்தினார்.
நடிகர் ‘வெப்பம்’ ராஜா பேசும்போது, ”படத்தில் அனைவருமே மிக சிறப்பாக அவர்களது வேலைகளை செய்து உள்ளனர். இயக்குநர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்து உள்ளார். 19 வயதான ஷிவாத்மிக்கா அருமையாக இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாலாஜி அற்புதமான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்.
படத்தின் நாயகன் நிஷாந்த் இந்தப் படத்திற்காக பட்ட கஷ்டங்கள் அதிகம். கண்டிப்பாக அவர் மிகப் பெரிய நடிகராக வருவார். ஒரு நடிகன் பத்து படங்களில் நடித்தால்தான் ‘ஆண்டனி’ படத்தில் இவர் நடித்து உள்ள கதாபாத்திரத்தை செய்ய முடியும். அந்த அளவுக்கு நிஷாந்த் மிக சிறப்பாக நடித்துள்ளார்…” என பேசினார்.
நடிகை ரேகா பேசும்போது, “மிகவும் சிரமப்பட்டு அருமையான படத்தினை கொடுத்திருக்கிறார்கள். படம் மிக பெரிய வெற்றியடைய வேண்டும். ஊடக நண்பர்களின் பங்களிப்பு எங்களுக்கு அவசியம் தேவை…” என்றார்.
இசையமைப்பாளர் ஷிவாத்மிக்கா பேசும்போது, “இந்தப் படத்தில் இசையமைக்க வாய்ப்பு தந்த குட்டி குமார் அவர்களுக்கு மிக பெரிய நன்றி. இந்த படத்தில் நாங்கள் அனைவரும் அறிமுகமாக கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம். வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்து உள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்…” என்றார்.
இயக்குநர் குட்டி குமார் பேசும்போது, “இந்தப் படத்தினை உருவாக்க காரணமாக இருந்த ஆண்டனி புரொடெக்சன்ஸ் நிறுவனத்திற்கு மிகப் பெரிய நன்றி.
இந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்து உள்ளோம். ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம். இரண்டு வித்தியாசமான காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. பூமிக்கு மேல், மற்றும் பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
உயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த். மேலும் படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். இசையமைப்பாளர் ஷிவாத்மிக்காவிடம் நிறைய இசைத் திறமை உள்ளது. அவர் மிகப் பெரிய உயரத்தைத் தொடுவார் என எதிர்பார்க்கிறேன்..” என்றார்.