’கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘அமைதிப்படை 2’, ‘பரஞ்ஜோதி’ என பல வெற்றிப் படங்களில் நடித்து வரும் அன்சிபா நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ‘பாக்கணும் போல இருக்கு’.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தில் அன்சிபாவின் நடிப்பு அனைவரிடமும் பாராட்டு பெற்றுள்ள நிலையில், இப்படம் குறித்து அன்சிபா நம்மிடையே பகிர்ந்து கொண்டது இதோ :
“மலையாள ‘த்ரிஷியம்’ படத்தில் மோகன்லால் மகளாக நடித்த நான், எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்த ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானேன். எனது முதல் படத்திலேயே நடிப்பதற்கான ஸ்கோப் உள்ள படமாக இருந்ததால், நான் அனைவரிடமும் பாராட்டு பெற்றேன்.
இதற்கிடையில், துவார் ஜி.சந்திரசேகர் 5-வது படமாக ‘பாக்கணும் போல இருக்கு’ படத்தை தயாரித்தார். ஆனால், முதலில் இந்த படத்தில் நான் கதாநாயகி அல்ல, மும்பையைச் சேர்ந்த புதுமுகம் ஒருவர் நடித்துக் கொண்டிருந்தார். 15 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு, எடுக்கப்பட்ட காட்சிளை படக் குழுவினர் போட்டு பார்த்தபோது, இயக்குந எஸ்.பி.ராஜகுமார், தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர் உள்ளிட்ட யாருக்கும் திருப்தி ஏற்படவில்லையாம்.
இதனால் என்ன செய்வது என்ற நிலையில், தயாரிப்பாளர் பணம் போனால் போகட்டும், நன்றாக நடிக்கக் கூடிய நாயகியை வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தலாம், என்று கூறியவர், இயக்குநரிடம் என்னையும், எனது நடிப்பையும் பற்றி கூறியுள்ளார், அதன் பிறகுதான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
’பாக்கணும் போல இருக்கு’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, எனக்கு ‘அமைதிப்படை 2’ மற்றும் ‘பரஞ்ஜோதி’ ஆகிய படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இரண்டிலும் வெவ்வேறு வேடங்களாக இருந்தாலும், இரண்டு வேடங்களிலும் எனது நடிப்பு பாராட்டுப் பெற்றது. இதையடுத்து ‘பாக்கணும் போல இருக்கு’ படத்திலும் எனது வேடம் சேப்படும் அளவுக்கு நன்றாக வந்துள்ளது.
துறுதுறுப்பான பெண்ணாக இப்படத்தில் நடித்திருக்கிறேன். முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தாலும், காமெடியும் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். அதிலும், ஹீரோவுடன் டூயட் பாடுவதோடு அல்லாமல், இப்படத்தில் நான் நகைச்சுவைக் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளதாக அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.
குறிப்பாக சூரி, கஞ்சா கருப்பு, நாயகன் பரதன் ஆகிய மூன்று பேர்களுடன் நான் இணைந்து நடித்து காமெடிக் காட்சிகள் அனைவரையும் ரசிக்க வைக்க கூடிய அளவுக்கு மிகவும் சிறப்பாக வந்துள்ளதாக இயக்குநர் பாராட்டியுள்ளார்.
’பாக்கணும் போல இருக்கு’ படத்திற்குப் பிறகு பல வாய்ப்புகள் எனக்கு வந்துள்ளது. ஆனால், கதை தேர்வில் கவனம் செலுத்தும் நான், பாக்கணும் போல இருக்கு படத்திற்குப் பிறகு எனது அடுத்த படத்தை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளேன். விரைவில் வெளியாக இருக்கும் பாக்கணும் போல இருக்கு படம், கோடம்பாக்கத்தையே என்னை திரும்பி பார்க்க வைக்கும், என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு..” என்கிறார் நம்பிக்கையோடு..!