பல்வேறு வெற்றி படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முழுமையாக ஒரு படத்தினை வாங்கி வெளியிடும் முதல் திரைப்படம் இந்த ‘அஞ்சாமை’.
இந்தப் படத்தினை திருச்சித்ரம் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கார்த்திக் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ராகவ் பிரசாத் இசையமைக்க, கலா சரண் பின்னணி இசையமைத்துள்ளார். மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இப்படத்தினை இயக்கியுள்ளார்.
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராமத்தில் வசித்து வரும் கூத்துக் கலைஞர் விதார்த். இவருக்கு மனைவியும் மகன், மகளும் உள்ளனர். கூத்துத் தொழிலில் வருமானம் வராமல் குடும்பம் தவிக்கிறது என்பதால் மனைவியின் வற்புறுத்தலால் கூத்துத் தொழிலை கைவிடுகிறார் விதார்த். உடனேயே பூ வியாபாரம் செய்கிறார்.
இந்த நேரத்தில் அவரது மகன் அருந்தவம்(கிருத்திக் மோகன்) 10-ம் வகுப்பில் மாவட்டத்திலேயே முதல் மாணவராக வருகிறார். அவருக்கு மருத்துவராக வேண்டும் என்பது கனவு. அவரது கனவுக்கு உயிர் கொடுக்க நினைக்கிறார் தந்தை சர்க்கார். மேலும் 2 ஆண்டுகள் தனது மகனை கண்ணும், கருத்துமாகப் படிக்க வைத்து ப்ளஸ் டூ தேர்வை எழுத வைக்க.. மகனும் தேர்வில் வெற்றி பெறுகிறார்.
அந்த நேரத்தில்தான் இந்தியாவில் ‘நீட்’ என்னும் தகுதித் தேர்வு அறிமுகமாகிறது. அதன்படி நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார் விதார்த். ஆனால், அவரது மகனுக்கான தேர்வு மையம் ஜெய்ப்பூரில் ஒதுக்கப்படுகிறது.
இதனால் கடும் சிரமத்தையும் தாண்டி, விதார்த்தும், அவரது மகனும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்காக ஜெய்ப்பூர் செல்கிறார்கள். அங்கு நடக்கும் நடக்கும் ஒரு சம்பவம் விதார்த்தின் குடும்பத்தை புரட்டிப் போடுகிறது.
அந்தச் சம்பவம் என்ன..? விதார்த்தின் மகன் மருத்துவக் கல்லூரிக்குப் படிக்க தேர்வானானா..? ‘தகுதித் தேர்வு’வினால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன? அவைகள் மாணவர்களையும், பெற்றோர்களையும் எப்படி பாதிக்கிறது..? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
ஒரு எளிய, சாமான்ய மனிதனாக, பணம் சம்பாதிக்கவே முடியாத சூழலில் குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கும் மனிதராக ‘சர்க்கார்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் விதார்த், அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
கூத்துக் கலையை ஆத்மார்த்தமாக நினைத்து வாழ்ந்த நிலையில் தனது குடும்பத்துக்காக ஒரே நாளில் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு மனைவியிடம் பாசம் காட்டும் விதார்த்தின் நடிப்பு, அந்தக் கணத்தில் இருந்து துவங்குகிறது.
மகனுக்காக தனியார் பள்ளி மேனேஜரை கை நீட்டி அடித்துவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் அவமானப்பட்டு நிற்பது.. மகன் மீதுள்ள பாசத்தில் சீலிங் பேனை கழட்டுவது.. கிணற்றுக்கு மூடி போடுவது என்று இவர் காட்டியிருக்கும் அன்பும், பாசமும் விலை மதிப்பில்லாதது.
ரயிலில் பயணம் செய்கையில் உடன் வரும் ரேகாவுக்கும், அவரது மகளுக்கும் காட்டும் கரிசனம், ஜெய்ப்பூரில் மகனை அனுமதிக்கும்படி தேர்வு அலுவலர்களிடத்தில் காலில் விழுந்து கதறுவது என்று உச்சக்கட்ட பாசத்தையும் கொட்டித் தீர்த்திருக்கிறார் விதார்த். இந்தப் படத்திற்காக பல விருதுகளையும், பாராட்டுக்களையும் விதார்த் நிச்சயமாகப் பெறப் போகிறார்.
எந்தவொரு ஹீரோயினும் முன் வராத 2 பிள்ளைகளுக்கு அம்மா கேரக்டரை ஏற்று மிகச் சிறப்பான தனது நடிப்பை தந்துள்ளார் வாணி போஜன். விதார்த்துக்கு உறுதுணையாக இருந்து, அவரது இழப்பால் உடைந்து போகும் இடத்தில் வாணி போஜன் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
முதலில் நல்லதொரு இன்ஸ்பெக்டராகவும், பின்பு உண்மையான வழக்கறிஞராகவும் வேடம் ஏற்றிருக்கும் ரகுமான் இடைவேளைக்குப் பின்பு மொத்தக் கதையையும் தானே தாங்கியிருக்கிறார்.
நீதிமன்ற வழக்காடலில் ரகுமான் தனது அழுத்தமான நடிப்பினால் இந்தியா முழுமைக்கும் பிரச்சினைக்குள்ளாகியிருக்கும் இந்த ‘நீட்’ என்னும் தகுதி தேர்வை கிழித்தெடுக்கும் காட்சிகள் பரபரப்பானவையாக பதிவாகியிருக்கின்றன.
மேலும் மகனாக நடித்த க்ருத்திக் மோகன், ‘விஜய் டிவி’ ராமர், நீதிபதியாக நடித்த பாலச்சந்திரன், அரசுத் தரப்பு வக்கீலாக நடித்தவர், ரேகா நாயர் என்று அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் பல்வேறு ஊர்களின் அழகையும், ஒளியையும் பதிவாக்கியிருக்கிறார். ஜெய்ப்பூரின் பகல் நேர வெயில் கொடுமையைப் பதிவு செய்திருப்பதும், விதார்த்தின் கோர மரணத்தைப் பதிவு செய்த விதமும் உருக்கத்தைக் கொடுத்திருக்கிறது.
ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்கள் முழுமையாகக் கவரவில்லை என்றாலும், பின்னணி இசை பெரும்பாலும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது. அப்பாவை காணாமல் தேடி ஓடி வரும் மகன் அவரது ஒற்றை செருப்பை மட்டும் பார்த்துவிட்டு கதறுவதை சைலண்ட் மோடில் வைத்துவிட்டு, பின்னணி இசையால் அந்த சோகத்தை நமக்கு உணர்த்துவது அபாரம்..!
படத்தில் பேசப்பட்டிருக்கும் பல வசனங்கள் இந்தப் படத்தின் பெருமையை நிலை நாட்டியிருக்கிறது.
“சிலம்பம் கத்துக்கிட்டு வந்தவன்கிட்ட, கத்தி சண்டை போடச் சொன்னா எப்படி சார்?”
“இது ஆண்டவன் சதியா.. ஆண்ட, அவன் சதியா”
“நான் நல்லா படிச்சதுதான் சார் தப்பு!”
“கஷ்டப்பட்டுத்தான் படிக்கணுமா.. இஷ்டப்பட்டு படிக்கிற மாதிரி மாத்த முடியாதா”
”போட்டோவை ஸ்கேன் பண்ணனுமா..? அப்போ ஆஸ்பத்திரிக்குப் போகணுமா?”
“முக்கியமான செய்தின்னா, பத்திரிகையில சின்னதாத்தான் போடுவாங்க!”
“ரயில்ல டிக்கெட் எடுக்காம போனா அபராதம் போடறீங்க..? தொன்னூறு பேர் போக வேண்டிய கோச்ல நானூறு பேருக்கு டிக்கெட் கொடுக்கிறீங்களே.. அதுக்கு அபராதம் என்ன?”
”ரெட் கலர் சட்டை போட்டா, எக்ஸாம் எழுத முடியாது!”
“கிரிக்கெட் போட்டி பார்க்க மட்டும் தனி ட்ரெய்ன் விடறீங்க.. நீட் தேர்வுக்கு விட முடியாதா”?.
“மற்ற எல்லா மாநில மாணவர்களும் அவங்கவங்க மாநிலத்திலேயே எக்ஸாம் எழுதறாங்க.. தமிழ் நாட்டு மாணவர்களுக்கு மட்டும் ஏன் ஜெய்ப்பூர்ல எக்ஸாம்..?”
“ஜெய்ப்பூர்னு நாங்க போடலை… கம்ப்யூட்டர் தானா போட்டுருச்சு” என்று அரசுத் தரப்பு வக்கீல் சொல்ல.. “அப்படினா சம்பளத்தை கம்ப்யூட்டருக்கே கொடுத்திரலாமா” என ரகுமான் திருப்பிக் கேட்பது.
“ஓட்டுச் சாவடியை மட்டும் வீட்டுக்குப் பக்கத்துல வைக்கறீங்களே.. அடுத்த முறை அதையும் டில்லியில வைங்க.. நாங்க டெல்லிக்குப் போயி ஓட்டுப் போடுறோம்”
என்று படம் நெடுகிலும் பேசப்படும் வசனங்கள் படம் பார்ப்போரையும் சிந்திக்க வைத்திருக்கிறது.
இதையும் தாண்டி படத்தில் வைத்திருக்கும் பல குறியீடுகளும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன.
விதார்த்துக்கு ‘சர்க்கார்’ என்று பெயர் வைத்திருப்பது. இவருடைய மரணத்தின்போது “சர்க்கார் மரணம்” என்று போஸ்டர் அடித்து ஒட்டி கலகலப்பூட்டுகிறார்கள்.
சென்சாரில் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக ‘நீட்’ என்கிற வார்த்தைக்குப் பதிலாக, ‘தகுதி தேர்வு’ என்றே கடைசிவரையிலும் வசனத்தை வைத்திருக்கிறார்கள்.
ஒரு காட்சியில், “பாரத் நீட் தேர்வு பயிற்சி மையம்” என்கிற போர்டினையும், இன்னொரு காட்சியில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் போஸ்டரையும் பொருத்தமாக காட்டியிருக்கிறார்கள்.
மேலும் ரயிலின் ஒட்டிக் கொண்டிருக்கும் தேசிய கொடி… நீட் தேர்வு நடக்கும் மையத்தில் “ஸ்விச் பாரத்” குப்பைத் தொட்டி என்று பலவித குறியீடுகளில் நம் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.
நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை பரிசோதிக்கும் கொடுமை.. அவைகளை மாணவிகள் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கும் காட்சிகள் நம் கோபத்தைக் கிளறுகின்றன.
எதற்கு அஞ்ச வேண்டுமோ அதற்கு மட்டும்தான் அஞ்ச வேண்டும்.. எதற்கு அஞ்சக் கூடாதோ அதற்கு அஞ்ச கூடாது என்பதற்கு தமிழில் நிறைய திரைப்படப் பாடல்கள் இருக்கின்றன. ஆனால், இந்தப் படமோ நாம் எதற்கும் அஞ்சக் கூடாது என்பதை சொல்லும் படமாக உருவாகியுள்ளது.
இந்தப் படம் கல்வி குறித்து பேசுகிறது. ஒரு தனி மனித கடமையாக இருந்த கல்வி பின்னர், இந்த சமூகத்தின் மேம்பாட்டிற்காக, சமூகத்தில் இயங்கக் கூடிய தனி மனிதனின் அக முதிர்வுக்காகவும், வளர்ச்சிக்காகவும் பயன்படக் கூடியதாக மாறியது.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் கல்வி என்பது ஒரு அரசியல் உரிமையாக இருக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய கட்டத்தில் நாம் இருக்கிறோம். அதை ஒருவர் மட்டுமே எடுத்துச் செல்லக் கூடாது என்பதை காத்திரமாக பேசும் படம்தான் இந்த ‘அஞ்சாமை’.
இன்று இளைஞர்கள் முன் நிற்கும் காலம். இந்தப் படம் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் இடையில் நடக்கும் போராட்டத்தை சொல்கிறது. சட்டம், நியாயத்தை பரிந்துரைக்கவில்லை என்றால் நியாயத்தின் பக்கம் நிற்கவில்லை என்றால் சமுதாயத்தில் என்ன நடக்கும் என்பது பற்றி இத்திரைப்படம் பேசுகிறது.
சட்டத்தை இயற்றும் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர். அவரால் ஒரு சாதாரண மனிதன் எந்த விதத்தில் பாதிக்கப்படுவான் என்றுதான் பார்க்க வேண்டும். அப்படி பாதிக்கப்படும் ஒரு சாமானியனின் கதைதான் இது.
எல்லா பெற்றோர்களும் தனது குழந்தை ஒரு சான்றோனாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி பிள்ளைகளை சான்றோன் ஆக்குவதற்கு கல்வி ரொம்ப முக்கியம். அந்தக் கல்வி தற்போது எந்த நிலையில் இருக்கிறது.. அதற்காக பெற்றோர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதைத்தான் வாழ்வியலுடன் கலந்து ரத்தமும் சதையுமாக இந்தப் படம் பேசுகிறது.
அரசுப் பள்ளியில் படித்த எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தனது மருத்துவ கனவை அடைய, ‘தகுதித் தேர்வு’க்கு எத்தனை அழுத்தங்களுடன் தயாராக வேண்டியிருக்கிறது, ‘கோச்சிங் சென்டர்’ அதற்கான பணம், பெற்றோர்களுக்கான பொருளாதார நெருக்கடி, கடைசி நேர பதற்றங்கள், நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகள், தென் மாநிலத்தில் இருப்பவனுக்கு வட மாநிலங்களில் ஒதுக்கப்படும் தேர்வு மையங்கள் என யதார்த்தமான நடைமுறை சார்ந்த பல்வேறு பிரச்சினைகளை இந்தப் படத்தில் துணிச்சலாகப் பேசியிருக்கிறார் இயக்குநர் சுப்புராமன்.
ஒரு சட்டத்தை இயற்றும்போது அது மக்களுக்கு நல்லது செய்யத்தான் வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அந்தச் சட்டம் மக்களுக்கு எவ்வளவு பிரச்சனையை கொடுக்கிறது என்பதை சட்டமியற்றும் இடத்தில் இருப்பவர்களால் உணர முடிவதில்லை. ஆனால் சாதாரண பொது மக்களால் அதை எளிதில் உணர முடியும். அதைத்தான் இந்தப் படத்திலும் சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் அதே நேரம் இந்த அழுத்தமான கதையில் வலிந்து திணிக்கப்பட்ட செயற்கையான சென்டிமெண்ட் காட்சிகளும், நம்ப முடியாத அரசியல், அதிகாரம் சம்பந்தமான காட்சிகளையும் சேர்த்து வைத்திருப்பது படத்தின் மையக் கருத்தை சிதைத்துவிட்டது.
உண்மையான நிகழ்வை அடிப்படையாக கொண்ட படம் என்றாலும், கோர்ட்டில் நடக்கும் காட்சிகள் நாடகத்தனமாக மென்சோகத்துடன் இருப்பது படத்தின் பலவீனமாகத் தெரிகிறது.
இன்ஸ்பெக்டராக இருந்து வழக்கறிஞராக வாதாடிக் கொண்டிருக்கும் ரகுமானை திடீரென நீதிமன்றத்தில் வைத்து கைது செய்வது, மாணவனே தனக்காக வாதாடுவது, அமைச்சர், அதிகாரிகள் என்று அனைவரையும் நீதிமன்றத்திற்கு அழைத்து வருவது என்று பல கனவுக் காட்சிகளையே இதில் நிஜமானதுபோல காட்டியிருப்பதும் நம் மனதில் ஒட்டவில்லை.
கூடவே இந்த வழக்கினை கேள்விப்பட்டு மாணவர்கள் ஒரே நாளில் போராட்டத்தில் இறங்குவது, “எங்க பிள்ளைகளை நாங்கள் அரசு பள்ளியில்தான் சேர்ப்போம்’ என பெற்றோர்கள் பேட்டியளிப்பது என்று சில கிளிஷேவான காட்சிகள் படத்தின் தன்மையை குறைத்துவிட்டன.
“இந்த வழக்கு தகுதித் தேர்வு நடத்துவது சரியா.. தவறா.. என்பதைப் பற்றியதல்ல.. தகுதித் தேர்வினை நடத்துவதில் இருக்கும் குறைபாடுகளைப் பற்றி மட்டுமே பேசப் போகிறது…” என்பதனை நீதிபதியும், வக்கீல்களும் ஓரிடத்திலாவது சொல்லியிருந்தால் அந்தக் குழப்பம்கூட இல்லாமல் போயிருந்திருக்கும்.
எது எப்படியானாலும் இந்தப் படம் யாருக்கும் எதிரானது அல்ல. பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் இந்தச் சமூகத்துக்கான படம்தான்.
அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
மிஸ் பண்ணிராதீங்க..!
RATING : 4 / 5









