அரசியல்வாதிகளை பகைத்துக் கொண்டால் உச்ச நடிகராக இருந்தாலும் சரி, முகமே தெரியாத ஸ்டாராக இருந்தாலும் சரி.. கோடம்பாக்கத்தில் பிழைக்கவே முடியாது என்பது உண்மையானதுதான்..
ஆனானப்பட்ட ரஜினி, கமல், விஜய்வரைக்கும், பலருக்கும் பலவித அனுபவங்கள் உண்டு. இந்த நேரத்தில் மனுக்கண்ணன் என்பவர் ஒரு நல்ல நோக்கத்தோடு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பரப்புரை செய்யும் பொருட்டு, அதனை அடிப்படையான கதையை வைத்து ‘அங்குசம்’ என்றொரு படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.
இதில் ஸ்கந்தா என்பவர் ஹீரோவாகவும், ஜெய்குஹா ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்திருக்கிறார். படம் முடிந்து சென்சார் சர்டிபிகேட்டும் வாங்கியாகிவிட்டது. கிளீன் யு. சென்சாரில் படம் பார்த்த பிரபலங்களே ஆச்சரியப்பட்டு வாழ்த்தினார்களாம். இந்த மாதிரியான படம் இந்தக் காலத்துக்கு மிகவும் அவசியமானது என்றார்களாம்..
ஆனால் அடுத்து வரிவிலக்கு கேட்டு இவர்கள் அரசுக்கு மனு செய்த போதுதான் சிக்கலாகிவிட்டது. வரிவிலக்குக்காக லஞ்சம் கொடுக்க வேண்டுமென செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரின் பி.ஏ. கேட்க.. இதனை இவர்கள் எதிர்த்து போராடி.. முடியாத சூழலில் பத்திரிகையாளர்களிடம் சொல்லிவிட்டார்கள். செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகிவிட்டது.
இதனால் கோபமான தமிழக அரசு சுதாரித்து ‘அங்குசம்’ படத்திற்கு வரிவிலக்கு அளித்தாலும், மனுக்கண்ணன் மீதும் செய்தியை வெளியிட்ட ‘நக்கீரன்’ பத்திரிகை மீதும் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளது. இப்போது இந்த வழக்கை எதிர்கொண்டு வருவதால் இந்தப் படத்தைத் திரைக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கிறார் தயாரிப்பாளர் மனுக்கண்ணன்.
அரசையே எதிர்த்திருப்பதால் தியேட்டர்களைத் தர தியேட்டர் அதிபர்கள் தயாராக இல்லையாம்.. இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்கள் சங்கமும் இவருக்கு உதவிகள் செய்ய ஓடி வரவில்லை. ஆயினும் எப்படியும் இந்த மாதம் படத்தைத் திரைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் தயாரிப்பாளர்..
ஒரு சாதாரண தயாரிப்பாளரின் பிரச்சினையைத் தீர்த்து வைக்க வேண்டிய, சினிமா சங்கங்கள் அரசை பகைத்துக் கொள்ள விரும்பாமல் ஓடி ஒளிவதும், கண்டு கொள்ளாமல் செல்வதும் வஞ்சகத்தனமானது.. சினிமாக்காரர்களும் இந்த நாட்டின் மக்கள் பிரதிநிதிகள்தான்.. அவர்களுக்கும் இதில் பங்கு உண்டு. தங்களை மட்டுமே பாதுகாத்துக் கொள்ள அவர்கள் நினைப்பது வெட்கக்கேடானது..
இதில் சுவையான ஒரு விஷயம்.. படம் தயாரித்து, ரிலீஸாக முடியாமல் தவிக்கும் இந்த 2 வருடங்களில் தன்னுடன் பணியாற்றிய உதவி, துணை, இணை இயக்குநர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இப்போதுவரையிலும் மாதாமாதம் சம்பளத்தை கொடுத்து வருகிறாராம் தயாரிப்பாளர் மனுக்கண்ணன்..
அப்புறம் எப்படி தயாரிப்பாளர் சங்கம் உதவிக்கு ஓடி வரும்..?