அங்குசம் படத்திற்கு ஏன் விருதுகள் கிடைக்கவில்லை..?

அங்குசம் படத்திற்கு ஏன் விருதுகள் கிடைக்கவில்லை..?

‘அங்குசம்’ என்ற திரைப்படம் சென்ற ஆண்டு தயாரிக்கப்பட்டு ரிலீஸாகத் தயார் நிலையில் இருந்தது. ஆனாலும் வரிவிலக்குக் கிடைக்காமல், தியேட்டர்கள் கிடைக்காமல் பல பிரச்சினைகள் சூழ்ந்ததால் தியேட்டர்களுக்கு வராமத் தவித்திருந்தது.

இந்த நிலைமையில் தேசியத் திரைப்பட விருதுகளுக்காக இந்தப் படத்தையும் அனுப்பி வைத்தார்களாம். “அங்குசம் படம் பரிசு எதையும் பெறவில்லை என்றாலும் அதனைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் நான் கேள்விப்பட்ட ஒரு விஷயம்தான் கொஞ்சம் வருத்தத்தைத் தந்தது…” என்கிறார் படத்தின் இயக்குநர் மனுக்கண்ணன்.

சேவ் தமிழ் என்கிற தமிழ் அமைப்பு ஒன்று சென்ற ஆண்டு சென்னை மெரீனா கடற்கரையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் சில காட்சிகளை இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பாடல் காட்சியில் 15 நொடிகள் மட்டுமே வந்து போகும் அளவுக்கு வைத்திருந்தார். இதற்கு சென்சாரும் கிடைத்துவிட்டது. ஆனால் இந்தக் காட்சி இந்தப் படத்தில் இருப்பதால் இந்தப் படம் பிரிவினைவாதத்தைத் தூண்டும் படமாக இருக்கிறது என்ற எண்ணம் தேர்வாளர்களின் மனதில் எழுந்ததாம்.. இதனாலேயே இந்தப் படத்திற்கு விருதுகள் கிடைக்கவில்லை என்று தன் காதுக்குச் செய்திகள் வந்ததாகக் கூறினார் மனுக்கண்ணன்.

உண்மையில் இந்தப் படத்தின் கதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் விதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. நல்லதொரு படிப்பினையோடு வந்திருக்கும் இப்படத்திற்கு விருதுகள் நிச்சயமாக கிடைத்திருக்க வேண்டும்.

அத்தோடு பாலசந்திரனின் மரணம் நாடு கடந்து, மொழி கடந்து, இனம் கடந்து அனைவராலும் கண்டிக்கத்தக்க விஷயம். ஒரு சிறுவனை போர்ச் சூழலில் பிடிபட்ட நிலையில் சுட்டுக் கொன்றது மனிதாபிமானமற்ற செயல். இதனைக் கண்டித்து காட்சிகளை வைப்பது எந்த வகையிலும் தரம் குறைந்ததல்ல. இதுவே பிரிவினைவாதம் என்றால் தவறு தேர்வாளர்களின் பார்வையில்தான் இருக்கிறது..!

Our Score