‘என்ஜாய் பிலிம்ஸ்’ மற்றும் ‘ஃபிரோ மூவி ஸ்டேஷன்’ ஆகியவை இணைந்து தயாரித்துள்ள படம், ‘அங்கம்மாள்’. இத்திரைப்படத்தினை, ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் வழங்குகிறது.
எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாகி உள்ள இத்திரைப்படத்தில், ‘அங்கம்மாள்’ என்ற முதன்மை கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் நடித்துள்ளார். அவருடன் சரண், பரணி, முல்லையரசி, தென்றல் ரகுநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைக்கதை எழுதி, இயக்கியிருக்கிறார், விபின் ராதாகிருஷ்ணன்.
ஒளிப்பதிவாளராக அஞ்சோய் சாமுவேல். இசையமைப்பாளராக முகமது மக்பூல் மன்சூர் பணியாற்றியுள்ளனர்.
இந்நிலையில் படம் குறித்து, அதன் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் பேசும்போது, “எனக்கு தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய கதைகள், சிறுகதைகளை நான் மலையாளத்தில் படித்திருக்கிறேன். அதில் கோடித்துணி என்ற சிறுகதை என் மனதில் ஆழமாகப் பதிந்தது. அதைத் திரைப்படமாக்கி, அப்போதைய கிராமத்து கலாச்சாரத்தை திரைப்படம் மூலமாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
இதற்கேற்ற களத்தை தேர்வு செய்ய பல ஊர்களிலும் அலைந்து கடைசியாக சத்தியமங்கலம், களக்காடு பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தினால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம். அதற்கு முன் அந்த ஊர் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள நானும் பட குழுவை சேர்ந்த சிலரும் நேராக அந்த கிராமத்திற்கு சென்று சுமார் நான்கு மாதம் வீடு எடுத்து தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி அவர்களது வாழ்வியலை அறிந்து கொண்டு அதன் பின் படமாக்கி இருக்கிறோம்.
’நட்சத்திரம் நகர்கிறது’ மற்றும் ’நவரசா’ சீரீசில் நடிப்பில் என்னை கவர்ந்த நடிகை கீதா கைலாசம் இந்த அங்கம்மாள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று முடிவு செய்து அவரிடம் இப்படத்தில் நடிக்க கேட்டோம். அவர் கதை முழுவதையும், தனது கதாபாத்திரத்தையும் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டார்.
ஆனால், கதாபாத்திரப்படி அவர் ரவிக்கை அணியாமல் நடிக்க வேண்டும், சுருட்டு, பீடி புகைக்க வேண்டும், என்ற விஷயங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டோம். சிறிய யோசனைக்கு பிறகு முழுவதுமாக அந்த பாத்திரத்தில் ஈடுபாடு காட்ட தொடங்கி விட்டார்.
அவரும் நாங்கள் தங்கி இருந்த கிராமப் பகுதிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பேயே வந்து அங்கேயே தங்கியிருந்து அந்தக் கிராமத்து மக்களிடம் சகஜமாக பழகி அவர்களின் பழக்க வழக்கங்கள், பேச்சு, பாவனை போன்றவற்றை புரிந்து கொண்டார்.
குறிப்பாக இப்படித்தான் இந்த பாத்திரம் இருக்க வேண்டும் என்று நான் முடிவு செய்த சுந்தரி என்ற மூதாட்டியுடன் நன்கு பழகி தனது கதாப்பாத்திரத்தை செம்மைப்படுத்தி இருக்கிறார். அவர்தான் இந்தப் படத்தின் உயிர் நாடி. மிகச் சிறப்பாக நடித்து கொடுத்துள்ளார். அவரது திரை வாழ்க்கையில் ‘அங்கம்மாள்’ ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
அங்கம்மாள் கதாபாத்திரம் ஒரு சுதந்திரமான பாத்திரமாக படைக்கப்பட்டிருக்கிறது. தான் என்ன நினைக்கிறேனோ அது நடக்க வேண்டும் என்று எண்ணுபவர். அவருக்கும் அவரது மகனுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் உள்ள பந்தத்தை இப்படம் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தும்.
சினிமாவுக்கு ஏற்ற சின்ன சின்ன மாற்றங்களுடன் சிறுகதை படிக்கும் உணர்வை இத்திரைப்படம் தர வேண்டும் என்பதால் படத்தின் ஒலிப்பதிவை லைவ்வாக செய்திருக்கிறோம்.
சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு கொண்ட ‘அங்கம்மாள்’, பல விருதுகளை பெற்றதுடன், இளம் பார்வையாளர்களின், பெரும் வரவேற்பினை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படம் ஃபோக்கஸ் சவுத் ஏசியா உள்பட 3 சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது. சமீபத்தில், ‘நியூயார்க்’ இந்திய திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது...” என்றார்.
அதேபோல் சுருட்டு பிடிக்க வேண்டும் என்று கூறியதால் அதற்காக நான் வீட்டு பால்கனியில் அமர்ந்து பீடி மற்றும் சுருட்டு பிடித்து பயிற்சி எடுத்தேன். வீட்டில் இருந்தவர்கள்கூட “அதற்கு நீ அடிமை ஆகிவிடாதே.!” என்று கிண்டல் செய்தார்கள். சுருட்டு பிடிப்பதைவிட பீடி பிடிப்பது எளிதாக இருந்தது.
சுந்தரி என்ற பெண்மணியுடன் என்னை இயக்குநர் பழக வைத்து அவரைப் போலவே நடிக்கச் சொன்னார். ஆனால் சுந்தரி போல்டு லேடி. காலை நாலு மணிக்கு எழுந்து வயலுக்கு சென்று விடுவார். பின்னர் இரவு 11 மணிக்குதான் உறங்கச் செல்வார். அவ்வளவு எனர்ஜி அவரிடம் இருந்தது.
அவரது அளவுக்கு என்னால் ஈடு கொடுத்து நடிக்க முடியாது என்றாலும் அவரது சாயல் வரும் அளவுக்கு நான் நடித்திருக்கிறேன். 20 வயதில் நான் ஓட்டிய டிவிஎஸ் ஃபிப்ட்டியை இந்த படத்துக்காக இன்னொரு முறை ஓட்டியது சந்தோஷமாக இருக்கிறது..” என்றார்.









