full screen background image

அநீதி – சினிமா விமர்சனம்

அநீதி – சினிமா விமர்சனம்

விருதுநகரில் தன்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களான M.கிருஷ்ணகுமார், முருகன் ஞானவேல், வரதராஜன் மாணிக்கம் ஆகியோருடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளராக மாறியுள்ள இயக்குநர் வசந்தபாலனின் முதல் தயாரிப்பான இந்த ’அநீதி’ திரைப்படத்தை அவரே இயக்கியுள்ளதோடு, கதை, திரைக்கதையையும் எழுதியுள்ளார்.

’கைதி’, ’மாஸ்டர்’ படங்களில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்த அர்ஜூன்தாஸ் முதன்முறையாக கதையின் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகிறார். ’சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் மாரியம்மா’வாக நடித்து பெரும் கவனம் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் துஷாரா விஜயன், கதையின் நாயகியாக நடித்திருக்கிறார்.

மேலும் வனிதா விஜயகுமார், ’நாடோடிகள்’ பரணி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, விஜய் டிவி புகழ் ’அறந்தாங்கி’ நிஷா, காளி வெங்கட், சாரா, அர்ஜூன் சிதம்பரம், இயக்குநர் எஸ்.கே.ஜீவா, இயக்குநர் அருண் வைத்தியநாதன், இயக்குநர் சுப்பிரமணிய சிவா மற்றும் நாட்டிய கலைஞர் பத்மஸ்ரீ சாந்தா தனஞ்செயன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர் J.சதீஷ்குமார் மற்றும் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ T.சிவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இயக்குநர் வசந்தபாலனால் ’வெயில்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட ‘இசை அசுரன்’ G.V.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை கார்த்திக் நேத்தா, ஏகாதேசி எழுதியுள்ளனர்.

ஒளிப்பதிவு – எட்வின் சகாய், கலை இயக்கம் – சுரேஷ் கல்லேரி, படத் தொகுப்பு – M.ரவிக்குமார், வசனம் – இயக்குநர் எஸ்.கே.ஜீவா, நிர்வாகத் தயாரிப்பு: J.பிரபாகர், சண்டை பயிற்சி இயக்கம் – ‘டான்’ அசோக், ’பீனிக்ஸ்’ பிரபு, ஒலிக் கலவை – M.R.ராஜாகிருஷ்ணன், புகைப்படங்கள் – R.S.ராஜா, பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

‘வெயில்’. ‘அங்காடித் தெரு’, ‘அரவான்’, ‘காவியத் தலைவன்’, ‘ஜெயில்’ என ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமான கதைக் களங்களில் உருவாக்கிய இயக்குநர் வசந்த பாலன் இந்தப் படத்தையும், தன்னுடைய பாணியில் வித்தியாசமான கதையமைப்புடன்  உருவாக்கியுள்ளார்.

வசந்தபாலனின் கதை மாந்தர்களும், கதைக் களனும் எப்போதும் எளிய மனிதர்களாகவே இருப்பார்கள். அவர்களது வாழ்க்கை சூழலைப் பற்றியதுதான் கதைக் கருவாகவும் இருக்கும். இதிலும் அப்படியே..!

சிறு வயதில் தனது அப்பாவின் மரணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு மன நோயாளியாக வாழும் நாயகன் அர்ஜூன்தாஸ், சென்னையில் புட் டெலிவரி செய்யும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். யாரை பார்த்தாலும் கொலை செய்ய வேண்டும் என்ற மன நிலை அர்ஜூன் தாஸூக்கு..!

இவர் ஒரு நாள் உணவுப் பொருளை டெலிவரி செய்ய செல்லுமிடத்தில் நாயகியின் முகத்தைப் பார்க்காவிட்டாலும் அவரது குரலைக் கேட்டு மெய் மறக்கிறார். மீண்டும், மீண்டும் அந்தக் குரலை கேட்பதற்காகவே அந்த வீட்டுக்கு செல்கிறார். கடைசியாக நாயகியை பார்த்தும்விடுகிறார்.

இப்போது நாயகியும் தன்னைப் போல ஒரு பரிதாப வாழ்க்கையை வாழ்ந்து வருவதை அறியும் நாயகன் அவள் மீது இரக்கப்படுகிறான். பரிதாப்படுகிறான். இதுவே அவனுக்குள் நாயகி மீதான காதலாக உருவாகிறது. நாயகிக்கும் தனது குடும்பச் சூழல் காரணமாக யாராவது ஒரு ராஜகுமாரன் வந்து தன்னைத் தூக்கிச் செல்ல மாட்டானா என்ற கனவு உண்டு. அவளுக்கும் நாயகன் மீது காதலாகிறது.

நாயகி வேலை செய்யும் அந்த வீட்டின் உரிமையாளரான சாந்தா தனஞ்செயன். திடீரென்று ஒரு நாள் இறந்து போகிறார். அந்தம்மாவின் டெபிட் கார்டை நாயகியின் தம்பி எடுத்துச் சென்று 2 லட்சம் ரூபாயை களவாடி செல்கிறான்.

அமெரிக்காவில் இருக்கும் சாந்தாவின் மகனும், மகளும் போன் மேல் போன் செய்கிறார்கள். “சாந்தாம்மா உயிருடன் இல்லை” என்று சொன்னால் அவர்கள் உடனே ஓடோடி வருவார்கள். வந்தால் சாந்தாம்மாவின் கணக்கில் இருந்து 2 லட்சம் ரூபாய் எடுத்தது தெரிய வந்து, தன் குடும்பமே சிறைக்குள் போக வேண்டி வரும் என்று நினைத்து நாயகி… சாந்தா உயிருடன் இருப்பதாக பொய் சொல்லிவிடுகிறாள்.

இப்போது அடுத்தடுத்து நடக்கும் பிரச்சினைகளை அர்ஜூன் தாஸின் உதவியோடு சமாளித்து 2 லட்சம் ரூபாயை ரெடி செய்ய ஆலாய் பறக்கிறாள் நாயகி. இது நடந்தேறியதா..? சாந்தாவின் மகனும், மகனும் இந்தியா வந்தார்களா..? நாயகன், நாயகி திருமணம் நடந்ததா..? என்பதெல்லாம்தான் படத்தின் திரைக்கதை.

தனது கனமான, வித்தியாசமான கணீரென்ற குரலால் பார்வையாளர்களை மயக்குகிறார் அர்ஜூன்தாஸ். அவரது குரலே அவருக்கு முதல் பலம். சாதாரண தொழிலாளியாக முதலாளித்துவத்தின் அகங்காரத்தையும், ஆணவத்தையும் நேருக்கு நேர் சந்தித்தும் எதுவும் செய்ய முடியாமல் தவித்து நிற்கும் காட்சிகளில் நிறைவான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் அர்ஜூன் தாஸ்.

ஒரு காட்சியில் நிர்வாணமாகவும் நடித்துள்ளார். வீட்டில் தனது 6 பேக்ஸ் உடலை முறுக்கிக் காட்டும்போது நமக்கே ஒரு திடுக் உணர்வைக் கொடுக்கிறார். காதலியின் குரலைக் கேட்டு மயங்கியவர், நேரில் பார்த்தபோது தனக்குள் ஏற்படும் பிரமிப்பை அப்படியே தன் கண்களில் தேக்கி வைத்திருக்கும் காதல் பார்வையாலேயே காட்டியிருக்கிறார் அர்ஜூன் தாஸ்.

காதலி படும் துயரத்தைத் தாங்க முடியாமல் உதவி செய்யப் போய் கடைசியில் கொலைகாரன் பட்டத்தைத் தாங்கிக் கொண்டு போகும் தருணத்தில், ஒரு பரிதாப உணர்வு நமக்கே வருகிறது. கிளைமாக்ஸின் அந்தக் கொடூர வதங்களிடையே “எதுக்கு பொய் சொன்ன..?” என்று நாயகியிடம் கேட்கும் அந்தக் காட்சிதான் படத்தின் ஜீவன். “அதுவொரு விதியின் விளையாட்டு” என்பதை நாயகியால் சொல்ல முடியுமா என்ன..?

நாயகியான துஷாரா விஜயன் ஒரு டஜன் சோக ஸ்மைலிகளை முகத்திலேயே தேக்கி வைத்திருக்கிறார். கன கச்சிதமான பொருத்தமான தேர்வு. முகத்தைக் காட்டும் முதல் காட்சியிலும், பாடல் காட்சிகளில் மட்டுமே சிரிக்கிறார். மீதமான காட்சிகள் அனைத்திலும் ஒருவித சோகம் அவரது முகத்தில் இழைந்தோடுகிறது.

நாயகனுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார் துஷாரா. சாந்தாவின் சோதனையைத் தாங்கிக் கொள்ளாமல் சீறிவிட்டு, சட்டென்று பணிந்து போய் பேசும் காட்சியிலும், பெத்த அப்பனையும், தங்கை, தம்பியையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் காட்சியிலும், தம்பி செய்த திருட்டுத்தனத்தை எண்ணி அழுது, புலம்பும் காட்சியிலும் நாயகியாக இல்லாமல் அந்தக் கதாப்பாத்திரமாகவே மாறிவிட்டார் துஷாரா. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

பிளாஷ்பேக் கதையில் நாயகனின் அப்பாவாக வரும் காளி வெங்கட் பிரமிக்க வைக்கிறார். நெல்லை வட்டார வசனங்களை மிக வேகமாக பேசும் பாங்கும், மகனை பாசத்துடன் பல்வேறு பெயர்களில் அழைக்கும்விதமும் அருமை. ஒரு சின்ன சாக்லேட்டுக்காக முதலாளியுடன் மல்லுக்கட்டிவிட்டு பின்பு அவராலேயே அடிபடும் காட்சியில் பரிதாபமாகத் தெரிகிறார். தனது மகனை பார்த்தவுடன் “ஒன்றுமில்லை” என்று சொல்லி சமாளிக்கும்விதத்திலும் காளி வெங்கட் தனது இத்தனையாண்டு கால நடிப்பையும் ஒன்றுமில்லாததாக ஆக்கிவிட்டார்.

கடை முதலாளியான டி.சிவா, சாந்தா தனஞ்செயன், நாயகனின் நண்பர்களான சரா, நாடோடிகள் பரணி, லஞ்ச லாவண்ய இன்ஸ்பெக்டரான ஜே.சதீஷ்குமார் என்று படத்தில் இடம் பெற்றுள்ள அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

சாந்தாவின் பிள்ளைகளாக நடித்திருக்கும் வனிதாவும், அர்ஜுன் சிதம்பரமும் கொடுமைக்கார பணக்கார வர்க்கத்தினராக தங்களது நடிப்பை காண்பித்து பாராட்டுப் பெறுகிறார்கள்.

எட்வின் சகாயின் ஒளிப்பதிவு படம் அடுத்தடுத்த காட்சிகளில் காட்டும் மனநிலைக்கேற்ப அமைந்துள்ளது. இரவு, பகலுமாக மாறி, மாறி வரும் காட்சிகள் கோர்வையாக இடம் பெற்று நம் கண்களையும் பாதுகாத்துள்ளது. கிளைமாக்ஸில் நாயகன் சம்ஹாரம் செய்யும் காட்சியில் சண்டை இயக்குநரையும் தாண்டி, நடிப்பையும் தாண்டி படப் பதிவில் மிரட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

பாடல்களும், பின்னணி இசையும் இன்னொரு பக்கம் சிறப்பாக அமைந்துள்ளன. நா.முத்துக்குமாரின் கவிதை வரிகள் பலே.. பலே..! பாடல்களில் இருக்கும் எளிய வரிகள் கேட்பதற்கே சுகமாக இருந்தது.  பாடலின் இசையும், மாண்டேஜ் காட்சிகளும்கூட சிறப்புதான்.

கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி காட்சிக்குக் காட்சி தன் பெயரை பதிவு செய்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனை வடிவமைத்திருக்கும்விதம் பாராட்டுக்குரியது.

படத் தொகுப்பாளர் ரவிக்குமாரின் கத்திரிக்கோல் இடைவேளைக்குப் பின்பு இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

வசனகர்த்தா எஸ்.கே.ஜீவா எழுதியிருக்கும் “மழை பெய்யுது, நின்னுட்டுப் போங்கன்னு சொல்ற குரலும், தலை துவட்ட துண்டு குடுக்குற கையும் கண்டிப்பா ஒரு முதலாளியோடது இல்லைன்னு தெரியும்’ என்று நாயகியை “அவள் அந்த வீட்டு வேலைக்காரிதான்” என்று தான் அடையாளம் கண்டு கொண்டதாக நாயகன் சொல்லும் ஒரு வசனமே இவரது திறமைக்கு ஒரு சாட்சி. 

மேலும், “ஒரு காலத்தில் வேலை கிடைக்காமல் இருந்தது நமக்கு டிப்ரஷனாக இருந்தது. இப்போ வேலையே டிப்ரஷனாகிருச்சு..”, “போற போக்க பாத்தா இந்தியான்னு எழுதி கீழ பிரைவேட் லிமிடெட்ன்னு போட்ருவாங்க போலிருக்கு”, “தண்ணி விக்கிற விலைக்கு தண்ணி கேக்குதா?” போன்ற வசனங்களெல்லாம் கவனிக்க வைக்கின்றன.

படித்த படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் உணவு சப்ளை செய்யும் வேலைக்கு வந்திருக்கும் இளைஞர்கள், தங்களது வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை ஒரு பக்கம் பட்டவர்த்தனமாய் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இன்னொரு பக்கம் குடும்பக் கஷ்டத்திற்காக முதிய பெண்மணியை பார்த்துக் கொள்ள வேலைக்கு வரும் ஏழைப் பெண் எப்படி அவமானத்துடன், வெட்கத்தைக் களைந்து வாழ்கிறாள் என்பதையும் சொல்லியிருக்கிறார்.

இந்த இரண்டு புள்ளிகளையும் இணைக்கும்போதுதான் அதிகார பலம், பணத்துக்கு மயங்கும் அதிகாரிகள், பெற்ற தாயைவிடவும் பணமே பிரதானம் என்று நினைக்கும் பிள்ளைகள், பணம் கொடுத்தால் அப்பாவிகளையும் குற்றவாளியாக்குவோம் என்று நினைக்கும் போலீஸ் அதிகாரிகள், ஏழை தொழிலாளர்களை சக்கையாகப் பிழிந்தெடுக்கும் முதலாளித்துவம், தேவையில்லையெனில் ஒரே வார்த்தையில் மூலையில் தூக்கிப் போடும் கொடூரம் என்று அத்தனை பிரச்சினைகளையும் இந்த ஒரே படத்தில் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

படம் மொத்தமாய் பார்க்கப் போனால் உணர்வுள்ள கதைதான். ஆனால் அந்த உணர்வை பார்வையாளர்களுக்குக் கடத்துவதில்தான் சொதப்பிவிட்டது.

முதல் பாதி மெதுவாக சென்று எதை நோக்கி பயணிக்கிறது என்பதே நமக்குத் தாமதமாகத்தான் தெரிய வருகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் வேகம் கூடியிருந்தாலும் விவேகமாக காட்சிகளும், கதையமைப்பும் இல்லாததால் ஏற்க முடியாத மன நிலையை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கிறது ஒட்டு மொத்தத் திரைப்படம்.

துஷாரா போனில் “அம்மா இறந்துட்டாங்க” என்று சொல்லியிருந்தாலே பாதிப் படம் முடிந்திருக்கும். அப்படி சொல்லாமல் கதையை இழுத்துச் சென்றதால் நடக்கும் நிகழ்வுகளையும், கொடூரங்களையும் பார்த்து, “போனிலேயே சொல்லித் தொலைஞ்சிருக்க வேண்டியதுதானே…” என்ற அலுப்பும், சலிப்பும்தான் பார்வையாளர்களுக்கு ஏற்படுகிறது.

வனிதாவை கொடூரமானராகவும், கோபக்காரராகவும் காட்டலாம்தான். ஆனால் போலீஸ் ஸ்டேஷனுக்குள் வந்து துப்பாக்கியால் சுடும் அளவுக்கா காட்ட வேண்டும்..? இந்தப் பிரச்சினையை இன்ஸ்பெக்டரிடம் லஞ்சம் கொடுத்து முடித்துக் கொள்வதெல்லாம் நடக்கவே நடக்காத விஷயம் இயக்குநரே..!

அதேபோல் தன் சம்பாத்தியத்தில்தான் தனது குடும்பமே வாழ்ந்து கொண்டிருப்பதாகச் சொல்லும் நாயகி, தினம் தோறும் இரவு உணவை வெளியில் ஆர்டர் செய்து சாப்பிடுவாளா..?! கேள்வி கேட்கிறது நம் மனம்..!

வசந்தபாலனின் படங்களில் இதுவரையிலும் காணக் கிடைக்காத காட்சியாக இந்த சீரியஸ் திரைக்கதையில், அறந்தாங்கி நிஷாவின் காமெடி காட்சி ஒன்றும் இருக்கிறது. “யூ டூ வசந்தபாலன்..?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

வாழ்க்கையில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு ஏழை காதல் ஜோடி, தங்களுக்கு முன் பூதாகாரமாக நிற்கும் இந்தப் பிரச்சினையை எப்படி பாஸிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு அமைதியாக முடித்துக் கொடுக்கிறார்கள் என்றுதான் கிளைமாக்ஸை கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் இப்படியா இயக்குநரே..?!

பாட்டி திடீரென்று மனம் மாறி வீட்டை நாயகி பெயருக்கு எழுதி வைத்துவிட்டதான திரைக்கதையில் நம்பகத்தன்மையே இல்லை. வீட்டுக்குப் போகும் நாயகியின் உடைகளை கழட்டி சோதனை செய்யும் அந்தப் பாட்டி எதன் காரணமாக திடீரென்று இந்த முடிவையெடுக்கிறார்.. இதற்கு வலுவான ஒரு காரணம் வேண்டுமே?

அட்லீஸ்ட் பாட்டி எழுதி வைத்திருந்த கடிதம் கையில் கிடைத்தவுடனேயே, படத்தை முடித்திருந்தால்கூட காதலர்களை வாழ்த்திவிட்டு எழுந்து வந்திருப்போம். ஆனால் அதையும் தாண்டிய ஒரு கதையாக கொண்டு சென்று இத்தனை கொடூரத்தில் முடித்திருப்பது ஏற்கவியலாத சினிமாத்தனம் இயக்குநரே..!

நீதி கேட்டு நெடும் பயணம் செய்து போராடிய காதலர்களுக்கு கடைசியில் அநீதியைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குநர்..!

RATING : 3.5  / 5

Our Score