ஷோபோட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் படம் ‘ஆந்திரா மெஸ்’.
பல்வேறு விளம்பர நிறுவனங்களில் பணியாற்றிய விளம்பர பட இயக்குனர் ஜெய் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவு முகேஷ்.ஜி. இவர் பிரபல ஒளிப்பதிவாளர் P.S.விநோத்திடம் உதவியாளராக இருந்தவர். இசை பிரசாந்த் பிள்ளை. ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளரான இவர் ஹிந்தியில் வெளியான ’சைத்தான்’,’ டேவிட்’ மற்றும் மலையாளத்தில் வெளிவந்த ‘ஆமென்’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்.
“படத்தின் பெரும் பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இனி சில காட்சிகளும் ஒரு பாடலும் மட்டுமே படமாக்கபடவுள்ளது. அதற்காக படக் குழுவினர் இந்த மாத இறுதியில் புனே செல்கின்றனர். படத்தில் இடம் பெறும் பாடல் ஒன்று ஹிந்தியில் உள்ளது. அப்பாடல் ராஜ்பரத் மற்றும் தேஜஸ்வினி இருவரின் மீது படமாக்கப்பட்டுள்ளது. நெருக்கமான காட்சிகளைக் கொண்ட பாடலாகவும் அதேசமயம் மிக அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளது. டான்ஸ் மாஸ்டர் விஜி இதற்கு நடனம் அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் முகேஷின் ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்டர் செந்திலின் அழகான அரங்க வடிவமைப்பும் படம் பார்ப்பவர்களை சொக்க வைக்கும்.” என்கிறார் இயக்குநர் ஜெய்.
மேலும் அவர் சொல்கையில், “இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவை கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவிற்கான முக்கிய கூறுகளோடு அழகியல் சார்ந்து புதிய பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறேன். இது முழுக்க முழுக்க எப்படி ஒரு கதைசொல்லி, கேட்பவர்களுக்கு சுவைபட கதை சொல்வானோ அது போன்ற ஒரு முயற்சி. இதை ‘மேஜிக்கல் ரியலிசம்’ என்று சொல்வார்கள். இதில் வரும் இடங்கள் அழகியல் தன்மையோடு இருக்கும்.
யதார்த்த வாழ்வில் நாம் இது போன்று பார்த்திராத வகையில் இருக்கும் உடைகள் எந்தவொரு நிலபரப்பையும் சாராத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சம்பவங்கள், கதாப்பாத்திரங்கள் புதிதானவர்கள். ஆனால் இவர்களின் வாழ்வு நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளின் தொகுப்பு. அதைப்போலவே ஆந்திரா மெஸ் கதை சொல்லும் முறையும் இருக்கும்…” என்கிறார்.