full screen background image

ஈழ அகதி முகாம்களின் அவல வாழ்க்கையைச் சொல்ல வரும் ‘அந்திமழை’ திரைப்படம்..

ஈழ அகதி முகாம்களின் அவல வாழ்க்கையைச் சொல்ல வரும் ‘அந்திமழை’ திரைப்படம்..

ஜி.கே.அறிவுச்சோலை திரைப்பட நிறுவனமும், அப்போலைன் ரியல்டர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆனந்த மழை’. சுப.தமிழ்வாணன் இயக்கும் இப்படம், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் ஈழத் தமிழர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் விதத்தில் உருவாகி வருகிறது.

இதில் கதையின் நாயகர்களாக இயக்குநர்கள் ஜெய் ஆனந்த், சுப.தமிழ்வாணன், மு.களஞ்சியம், சிவா, சிங்கமுத்து ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குநர் மு.களஞ்சியமும், சிங்கமுத்துவும் இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளனர்.  நாயகிகளாக விகீதா, சரோஜாதேவி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, ரமேஷ் விஸ்வநாதன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

கணேஷ்ராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்டீபன் ராயல் இசையமைக்கிறார். செல்வின் படத்தொகுப்பை கவனிக்க, ஸ்ரீமன் பாலாஜி கலையை நிர்மாணிக்கிறார். டாக்டர் கிருதயா, சினேகன், இளையகம்பன், கார்கோ ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ். கதை, திரைக்கதை, வசனம் எழுதி சுப.தமிழ்வாணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சரண்ராஜ் நடித்த ‘கரிசல்மண்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இது இவருக்கு இரண்டாவது படமாகும்.

படம் குறித்து கூறிய இயக்குநர் சுப.தமிழ்வாணன்…

“இலங்கையில் இருந்து வாழ்வதற்காக தமிழகத்துக்கு வரும் ஐந்து தமிழர்கள், இங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுகிறார்கள். அடிப்படை வசதிகூட இல்லாத சூழ்நிலையில், பல இன்னல்களுக்கு இடையே வாழும் அவர்களில் இருவர் மரணமடைகின்றனர். இதையடுத்து மற்ற மூன்று பேரும் முகாமிலிருந்து தப்பித்து, சென்னைக்கு வருகிறார்கள்.

சென்னையில் கவிஞர் ஒருவருடைய வீட்டில் தங்கும் அவர்கள், அந்த கவிஞரின் மூலம் முகாம்களில் உள்ளவர்களை மீட்கவும், முகாம்களில் உள்ள குறைகளையும், அங்குள்ளவர்கள் படும் கஷ்டத்தையும் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக செய்யும் முயற்சிகளும்தான் இந்த  ‘ஆனந்த மழை’ படத்தின் கதை.

இலங்கையில் தமிழர்கள் கஷ்டப்படுவது ஒரு பக்கம் இருந்தாலும், அங்கிருந்து வாழ்வதற்காக தமிழகத்துக்கு வரும் அவர்கள், இங்குள்ள முகாம்களின் மூலம் மேலும் கஷ்டப்படுகிறார்கள்.  இதைத்தான் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள 144 அகதிகள் முகாம்களுக்கும் சென்று, அவற்றை நேரில் பார்த்த பிறகே இப்படத்திற்கான வேலையை தொடங்கினேன். இலங்கையில் உள்ள முள்வேலியை அகற்றுவதற்கு முன்பு, தமிழகத்தில் உள்ள முள்வேலிகளை அகற்ற வேண்டும்.

‘அகதிகள் முகாம்’ என்றே சொல்லக் கூடாது, ‘புலம் பெயர்ந்த தமிழர்களின் முகாம்’ என்று அழைக்க வேண்டும் என்பதை, மு.களஞ்சியம் கதாபாத்திரத்தின் மூலமாக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளேன். யாரும் இல்லை என்றால்தான் அகதிகள், ஆனால் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் இங்கே இருக்கும்போது அவர்கள் எப்படி அகதிகளாக இருப்பார்கள், எனவே அவர்களை ‘அகதிகள்’ என்று சொல்லக்கூடாது, ‘புலம் பெயர்ந்த தமிழர்கள்’ என்று சொல்ல வேண்டும் என்பதை ரொம்ப அழுத்தமாக இப்படத்தின் மூலம் சொல்லியிருக்கிறோம். ஈழத் தமிழர்களின் புனிதப் போருக்கான பயணமாக உருவாக்கியுள்ள இப்படத்தை பல்வேறு இன்னல்களுக்கு இடையே படமாக்கியுள்ளோம்.

இப்படத்தின் மூலம் தமிழக அரசுக்கு முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து யாருடைய மனதும் புன்படாத வகையில் சொல்லியிருக்கிறோம். தமிழக முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்களின் சார்பாக, அவர்களுடைய வலிகளைச் சொல்லும் ஒரு படமாக இப்படம் இருக்கும்…” என்று இயக்குநர் சுப.தமிழ்வாணன் ஆதங்கத்தோடு கூறினார்.

கேட்க வேண்டியவர்களின் காதுகளுக்குச் சென்றால் நல்லதுதான்..!

Our Score