full screen background image

அந்தகன் – சினிமா விமர்சனம்

அந்தகன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை நடிகர் தியாகராஜனே தயாரித்துள்ளார். ப்ரீத்தி தியாகராஜன், சாந்தி தியாகராஜன் இணைந்து தயாரித்துள்ளனர்.

படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், நவரச நாயகன் கார்த்தி, சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார், லீலா சாம்சன், மனோபாலா, மோகன் வைத்யா, பெசண்ட் ரவி, லஷ்மி பிரதீப், ரேகா சுரேஷ் செம்மலர் உட்பட பலர் நடித்துள்ளனர். 

இயக்கம் – தியாகராஜன், ஒளிப்பதிவு – ரவி யாதவ், இசை – சந்தோஷ் நாராயணன், கதை, திரைக்கதை – ராம் ராகவன், படத்தொகுப்பு – சதீஷ் சூர்யா, வசனம் – பட்டுக்கோட்டை பிரபாகர், கலை இயக்கம் – செந்தில் ராகவன், சண்டை இயக்கம் – ராம்குமார், நடன இயக்கம் – கலா மாஸ்டர், பிரபுதேவா, சாண்டி மாஸ்டர், ஒலிப்பதிவு – ஏ.எஸ்.லஷ்மி நாராயணன், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன்.

2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி ஹிந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமே(க்)ட் படம்தான் இந்த ‘அந்தகன்’ திரைப்படம்.

ஹிந்தியில் 32 கோடி ரூபாய் செலவில் தயாராகி கிட்டத்தட்ட 457 கோடி ரூபாய்வரையிலும் சம்பாதித்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ‘அந்தாதூன்’. அந்த வருடத்திய ‘சிறந்த ஹிந்தி திரைப்படம்’, ‘சிறந்த திரைக்கதை’, ‘சிறந்த நடிகருக்கான’ தேசிய விருதுகளைப் பெற்றது இந்த ‘அந்தாதூன்’ திரைப்படம்.

தேசிய விருதுகள் மட்டுமில்லாமல் ஸ்கிரீன் அவார்ட்ஸ், பிலிம்பேர் விருதுகள், சர்வதேச விருதுகள் என்று பல விருதுகளையும் வாரிச் சுருட்டியது இந்த ‘அந்தாதூன்’ திரைப்படம்.

மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் ‘மேஸ்ட்ரோ’ என்ற பெயரில் நவீன், தமன்னா, நபா நடேஷ் நடிப்பிலும், மலையாளத்தில் ‘பிரம்மம்’ என்ற தலைப்பில் பிருத்விராஜ் சுகுமாரன், உன்னி முகுந்தன், ம்ம்தா மோகன்தாஸ், ராசி கண்ணா ஆகியோர் நடிப்பிலும் 2021-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றிருந்தது.

3-வது ரீமேக் படமாக தமிழில் ‘அந்தகன்’ என்ற பெயரில் இப்போது வெளியாகியுள்ளது. தமிழின் ‘டாப் ஸ்டார்’ நடிகரான பிரசாந்தின் நடிப்பில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் தமிழ்த் திரைப்படம் இதுவாகும்.

பியானோ கலைஞரான ‘கிருஷ்’ என்ற பிரசாந்த், பார்வையற்ற ஒரு மாற்றுத் திறனாளியாக பலருக்கும் தெரிந்தவர். சாலை விபத்தொன்றில் பிரசாந்தை சந்திக்கும் பிரியா ஆனந்த் தான் வேலை பார்க்கும் நைட் கிளப்பிலேயே பிரசாந்துக்கு பியானோ இசைக்கும் வேலையை வாங்கித் தருகிறார்.

அதே கிளப்புக்கு அடிக்கடி வந்துபோகும் நடிகர் கார்த்திக், தனது திருமண நாளையொட்டி நாளை மதியம் தன் வீட்டுக்கு வந்து பியானோ வாசிக்கும்படி சொல்லி அட்வான்ஸையும் கொடுத்துவிட்டுப் போகிறார்.

மறுநாள் கார்த்திக்கின் வீட்டுக்குப் போகும் பிரசாந்திடம் கார்த்திக்கின் மனைவியான ‘சிமி’ என்னும் சிம்ரன் கார்த்திக் பெங்களூர் போய்விட்டதாகச் சொல்கிறார். தன்னை வரச் சொன்னதே அவர்தான் என்று பிரசாந்த் சொல்ல அவரை வீட்டுக்குள் அழைத்து அமர வைத்து பியானோ இசைக்கச் சொல்கிறார் சிம்ரன்.

அந்த நேரத்தில் வீட்டுக்குள் நடந்திருக்கும் ஒரு அசம்பாவிதமும், அதைத் தொடர்ந்த சம்பவங்களும் பிரசாந்தின் வாழ்க்கையையே திருப்பிப் போடுகிறது. இதன் பின் விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படுகிறார் பிரசாந்த்.

அந்த விளைவுகள்தான் என்ன..? கார்த்திக் என்னவானார்..? அந்த வீட்டுக்குள் அப்போது நடந்திருந்ததுதான் என்ன..? என்பதுதான் இந்த சுவையான சஸ்பென்ஸ், திரில்லர் படத்தின் திரைக்கதை.

ஹிந்தி ஒரிஜினல் ‘அந்தாதூன்’ படத்தில் ஆயுஸ்மான் குரானா நடித்தக் கதாநாயகப் பாத்திரத்தில் பிரசாந்தும், தபு நடித்த வேடத்தில் சிம்ரனும், ராதிகா  ஆப்தே நடித்தக் கதாப்பாத்திரத்தில் பிரியா ஆனந்தும், அனில் தவான் நடித்த நடிகர் கதாப்பாத்திரத்தில் நவரசத் திலகம் நடிகர் காரத்திக்கும் நடித்துள்ளனர்.

2018-ம் ஆண்டு ‘ஜானி’ என்ற படத்திற்குப் பிறகு பிரசாந்த் நடித்திருக்கும் நேரடி தமிழ்ப் படம் இதுதான். அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களும் ரசிக்கும் வகையிலான கதை, திரைக்கதையில் உருவாகியிருப்பதால் 6 ஆண்டுகள் கழித்து ஒரு வெற்றிப் படத்தில் திரும்பவும் வந்திருக்கிறார் பிரசாந்த் என்று உறுதியாய் சொல்லலாம்.

ஏற்கெனவே பியானோவில் டிகிரி முடிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருக்கும் பிரசாந்துக்கு பியானோ வாசிப்புடன் கூடிய நாயகன் வேடம் என்பது அல்வாவுடன், குளோப் ஜாமூனையும் புசிக்கும் வேலை போல..! சிறப்பாகச் செய்திருக்கிறார்.

முதல்முறையாக சிம்ரனின் வீட்டில் அந்த அசம்பாவிதத்தைப் பார்க்கும் தருணத்தில் அவர் காட்டும் கட்டுப்படுத்தப்பட்ட அதிர்ச்சியும், திகைப்பும் சிறப்பு. இது போலவே போலீஸ் ஸ்டேஷனில் சமுத்திரக்கனியைப் பார்க்கும்போதும், தன் திருட்டுத்தனத்தை அந்த சின்னப் பையன் பார்த்துவிட்டதை உணரும்போதும், சமையலறையில் சிம்ரன் பேய் முகமூடி போட்டு திடீரென்று பயமுறுத்துவதும், விஷத்தை காபி கோப்பையில் சிம்ரன் கொட்டுவதைப் பார்த்தும் பார்க்காத்துபோல இருக்கும் காட்சிகளிலும் வெகு, வெகு இயல்பாக, “நம்மாளு அடுத்து என்ன செய்யப் போறாரு..?”, “எப்படி தப்பிக்கப் போறாரு..?” என்று நமக்குள்ளும் ஒரு சுவாரஸ்யத்தைத் தூண்டிவிடுகிறார் பிரசாந்த்.

ஏமாற்றியதே உண்மையாக நடந்த பின்பு அவர் சிம்ரனிடம் “ஏன்?” என்று கேட்கும் பரிதாபமும், ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு டீமிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் போதும் நம்மை பாவம் பார்க்க வைத்துவிட்டார்.

பிரசாந்தின் நடிப்புக்கு இந்தப் படம் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் பிரசாந்த் நடித்தால் அவருக்கும் நல்லது.. தமிழ்த் திரையுலகத்துக்கும் நல்லதுதான்..!

‘சின்ன இடையழகி’ என்றே பெயரெடுத்திருக்கும் சிம்ரன் இந்தப் படத்தில் ‘அதை’ மட்டும் காட்டாமல் தனது வில்லித்தனத்தை அளவெடுத்துக் காண்பித்திருக்கிறார். கணவரின் நிலைமை கண்டு கொஞ்சமும் வருத்தப்படாமல் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் சூப்பர்..! இதையடுத்து அவர் செய்யும் அனைத்து செயல்களும் அவரது வில்லித்தனத்திற்கு சான்றிதழ் வழங்கிவிட்டது.

தந்திரமாக பிரசாந்தின் உண்மை நிலையை அறிய சிம்ரன் போடும் நாடகமும், சமுத்திரக்கனியிடம் விரட்டி விரட்டி பேசும்போதும், ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிப்பதற்காக பிரசாந்தை நம்ப வைத்து ஏமாற்றும்போதும், கடைசியில் பிரசாந்தின் நல்ல மனதைக் கண்டு கண் கலங்கும்போதும் ரசிக்க வைத்திருக்கிறார் ‘சிமி’ என்ற சிம்ரன்.

நடிகர் கார்த்திக் அதே துள்ளல் நடை, பாவனை, நடிப்புடன் அதே நவரசத் திலகம் கார்த்திக்காகவே நடித்திருக்கிறார். அந்த ஆங்கில வசனங்களை மட்டும் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சமுத்திரக்கனி வில்லத்தனமான போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார். முதல் சந்திப்பில் இருந்தே பிரசாந்தை நம்பாமல் கடைசிவரையிலும் சுற்றிச் சுற்றி வரும் அவரது கேரக்டர் சுவையானது. கடைசியில் தனது மனைவி வனிதாவிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும்போது சிரிக்கவும் வைத்திருக்கிறார்.

வனிதா விஜயகுமாருக்கு அவரது கேரக்டருக்கேற்ற வேடம். அசால்ட்டாக செய்திருக்கிறார். துப்பாக்கியும், கையுமாக சமுத்திரக்கனியை விசாரிக்கும் இடம் தியேட்டரே கை தட்டுகிறது.

‘நடிப்பு ராட்சஸி’யான ஊர்வசி தான் வரும் காட்சிகளிலெல்லாம் குறையில்லாமல் ஸ்கோர் செய்திருக்கிறார். இறுதியில் யோகிபாபுவின் நிலைமை தெரிந்து அவர் பதறும் காட்சியில் மொத்தப் பாவத்தையும் தானே சேர்த்துக் கொண்டவராகவே தெரிகிறார்.

பிரியா ஆனந்த் மாடர்ன் கேர்ள் கேரக்டருக்கு நச் என்று பொருந்தியிருக்கிறார். கிடைத்த காட்சிகளில் இளைய ரசிகர்களின் கண்களுக்கு ஒரு பரவசத்தை உணர்த்தியிருக்கிறார்.

யோகிபாபுவும், கே.எஸ்.ரவிக்குமாரும் அவரவர் கதாப்பாத்திரத்திற்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் பாவம்.. சிம்ரனின் கையால் கத்திக் குத்துப் படும் அளவுக்கு சண்டை காட்சியிலெல்லாம் நடித்து அசத்தியிருக்கிறார்.

நடிகர், நடிகையர் அத்தனை பேரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

படத்தின் தொழில் நுட்பமும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் போட்டிபோட்டு படத்தில் பொருந்தி வருகிறது. ரவி யாதவ்வின் ஒளிப்பதிவில் படம் நெடுகிலும் ஒரே மாதிரியான காட்சிகளையே பார்க்க முடிகிறது. பாடல் காட்சிகளில் ஜிகினா வேலையை காட்டியிருக்கிறார். கார்த்திக்கின் வீடும், கிளப்பின் உட்புறக் காட்சியும் சூப்பர்ப். கலை இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.

சந்தோஷ் நாராயணன் ஹிந்தி மெட்டுக்கள் போலவே தமிழிலும் இசைத்திருக்கிறார். பின்னணி இசையை உசுப்பேற்றும்வகையில் செய்திருப்பது பாராட்டத்தக்கது. பிரசாந்தின் திருட்டுத்தனத்தை சிம்ரன் கண்டறியும் காட்சியில் நம்மை திடுக், திடுக் என்ற உணர்வோடு பார்க்க வைத்திருப்பது சந்தோஷின் பின்னணி இசையும், கச்சிதமான படத்தொகுப்பும்தான்.

இந்தப் படம் Remake or Remade என்று நாம் கேட்கும் அளவுக்கு பலவித சின்னச் சின்ன மாற்றங்களை, இந்தப் படம் கொண்டிருந்தாலும் மற்றைய மொழி படங்களைப் பார்க்கும்போது நமக்குள் தோன்றிய அதே உணர்வைத்தான் இந்தப் படமும் கொடுக்கிறது.

படத்தின் இறுதியில் தனக்கு நடந்த இத்தனை பெரிய கொடுமைக்குப் பின்பும் சிம்ரனை காப்பாற்றும் பொருட்டு பிரசாந்த் பேசும் வசனங்களும், இதற்கான கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் சிம்ரனின் எதிர்வினைதான் படத்தின் ஹைலைட்.

ஆனாலும் ஆண்டவன் பிரசாந்த் பக்கம்தான் இருக்கான் என்பதுபோல லண்டனில் இப்போது பிரசாந்த் எந்த லெவலில் உள்ளார் என்பதை அந்தக் கடைசி ஷாட்டில் இயக்குநர் காட்டுவது செமத்தியான டிவிஸ்ட். படத்தில் அடுத்தடுத்து நடைபெறும் சஸ்பென்ஸ் திரைக்கதை டிவிஸ்ட்டுகள்தான் படத்தை கடைசிவரையிலும் ஒரு எதிர்பார்ப்போடு நம்மை பார்க்க வைத்திருக்கிறது.

மொத்தத்தில் இந்த ‘அந்தகன்’ நம்மை வசீகரம் செய்திருக்கிறான்..!

RATING : 4 / 5

Our Score