திரைப்பட நடிகரும், இயக்குநருமான ச்சிகுமாரின் உறவினரான அசோக்குமாரின் தற்கொலைக்கு சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியன்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதையொட்டி காவல்துறையும் அன்புச்செழியன் மீது புகாரை பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகிறது.
இந்த நேரத்தில் அன்புச்செழியனுக்கும் ஆதரவாக தமிழ்த் திரையுலகில் பலரும் பேசி வருகின்றனர்.
அவர்களில் ஒரு சிலர் நேற்றைக்கு பிரசாத் லேப் தியேட்டரில் ஒன்றுகூடி அன்புச்செழியனுக்கு ஆதரவாக பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி.சிவா, “தமிழ் சினிமாவில் கந்து வட்டி என்பதே இல்லை. சினிமா உலகுக்கு பைனான்ஸியர் அன்புசெழியன் கண்டிப்பாகத் தேவை…” என்றார்.
நடிகை தேவயானி பேசும்போது, “ஆளை பார்க்காமலேயே பணம் கொடுக்கும் பைனான்சியர் என்றால் அது அன்புச் செழியன்தான். ‘காதலுடன்’ என்ற படத்துக்காக நாங்கள் அவரிடம் கடன் வாங்கினோம். ஆனால் படம் முடிந்து முதல் பிரதி தயாராகி குட்லக் திரையரங்கில் அதைப் பார்க்க அன்புச் செழியன் வந்தபோதுதான் நான் அவரை முதல் முறையாகப் பார்த்தேன்.
எனக்கு அவர் தொந்தரவு கொடுத்தார் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் எனக்கு மிகுந்த வருத்தைத்தை ஏற்படுத்துவதால் இந்த உண்மைகளை விளக்கவே நான் இங்கு வந்தேன்…” என்றார்.
நடிகர் மனோபாலா பேசும்போது, “சதுரங்க வேட்டை-2′ எடுக்க நான் பைனான்ஸ் விஷயமாக அன்பு செழியனிடம் பேசினேன். ‘நாளைக்கு அலுவலகம் வாங்க’ என்று சொன்னார். பேசுவற்குதான் வரச் சொல்கிறார் என்று நினைத்து நானும் சென்றேன். ஆனால், அங்கு போன பிறகுதான் தெரிந்தது அவர் பணம் கொடுக்கத்தான் வரச் சொல்லியிருக்கிறார் என்பது. இவரைப் போன்ற ஆட்களால்தான் எங்களால் படம் எடுக்க முடிகிறது…” என்றார் மனோபாலா.
அடுத்து பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “காசு கொடுத்தால்தான் டப்பிங் பேசவருவேன் என்று சொல்லும் நடிகர்கள், 30 நாட்களில் படப்படிப்பை முடிப்பேன் என்று சொல்லி 150 நாள்கள்வரை இழுக்கும் இயக்குநர்களும்தான் இப்போது தமிழ்ச் சினிமாவில் இருக்கிறார்கள். படம் வெளியாகும் நேரத்தில் தன் பணத்தை விட்டுக் கொடுத்துப் போகும் பைனான்ஸியர்கள் பலரும் இருக்கிறார்கள்…” என்றார்.
தயாரிப்பாளர் மன்னன் பேசும்போது, “உத்தம வில்லன்’ படத்துக்காக எல்லோரிடமும் பேசி 45 கோடி ரூபாயை விட்டுக் கொடுத்தவர்தான் அன்புச் செழியன். படம் எடுக்கிறேன் என்று சொல்லி பைனான்ஸியர்களிடம் 50 கோடி வாங்கிய அடுத்த நாளே ஆடி கார் வாங்கியவர்களும் தமிழ்ச் சினிமாவில் இருக்கிறார்கள்…” என்றார்.
அடுத்து பேச வந்த வாசன் பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே.எஸ்.சீனிவாசன், “20 கோடி, 30 கோடி செலவு செய்து படம் எடுத்தவன் நான். கிட்டத்தட்ட நானும் இப்போது அசோக்குமாரின் மனநிலையில்தான் இருக்கிறேன்.
மூன்றரை வருடங்களுக்கு முன்பு நான் தயாரித்த ‘நிமிர்ந்து நில்’ என்ற படத்தின் தோல்வியால், இன்றுவரை நிமிர முடியாமல் இருக்கிறேன். சமீபத்தில் நடைபெற்ற என் மகள் கல்யாணத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் உதவித் தொகை பெறும்போது கூனிக் குறுகி நின்றேன்…” என்றார்.
அடுத்து பேச வந்த சுப்பு பஞ்சு அருணாசலம், “என் அப்பாவின் காலத்திலிருந்தே நாங்கள் அன்புவிடம் வரவு செலவு வைத்திருக்கிறோம். ஆனால் இன்றுவரை அவர் எங்களிடம் ஒரு வார்த்தைகூட கடுமையாகப் பேசியதில்லை. படம் வெளியாகி இரண்டு நாள்கள் கழித்துகூட அவருக்குப் பணம் கொடுத்திருக்கிறோம்…” என்றார்.
இசையமைப்பாளர், தயாரிப்பாளர் விஜய் ஆன்டனி பேசும்போது, “என் படத்தின் இசை வெளியீட்டு விழாவில்கூட நான் அதிகம் பேசமாட்டேன். ஆனால் இன்று நான் மனம் திறந்து சில உண்மைகளைச் சொல்ல வேண்டும் என்றுதான் வந்திருக்கிறேன்.
நான் நடிகனாக அறிமுகமாகி தயாரித்த படத்துக்கு நிதியுதவி வேண்டிதான் நான் அன்புச் செழியனைப் பார்த்தேன். ஆனால் அப்போது அவர் எனக்கு சில அறிவுரைகளைச் சொன்னார். ‘இசைக் கருவிகள் வாங்கவோ… அல்லது ரெக்கார்டிங் ஸ்டுடியோவை விரிவுபடுத்தவோ என்றால் கடன் கொடுக்கத் தயார்’ என்று சொன்னார்.
ஆனாலும் என் மீது இருந்த நம்பிக்கை காரணமாக நான் நடித்து தயாரித்த படங்களுக்கு நிதியுதவி செய்தார். அதை நான் சரியாக திருப்பி செலுத்தி விட்டேன். தொடர்ந்து கடந்த ஆறு வருடங்களாக அவரிடம் நிதியுதவி பெற்று சரியாக திருப்பிச் செலுத்தி வருகிறேன்..” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய தயாரிப்பாளர் தாணு, “அன்புசெழியன் இந்த துறையில் முதலீடு செய்யவில்லை என்றால் நாங்கள் எல்லாம் இல்லை. சிறு படத் தயாரிப்பாளர்கள் ஒட்டு மொத்தமாக அழிந்தே போவார்கள். ஒவ்வொரு படத்தின் பிரச்சினையையும் சாதாரணமாக முடித்திருக்கிறோம். ‘ரஜினிமுருகன்’ படப் பிரச்சினையின் போது அனைவருடனும் பேசி, பணத்தையும் குறைத்துக் கொண்டு வெளியிட உதவி செய்தவர் அன்புசெழியன்.
‘உத்தமவில்லன்’ வெளியீட்டு பிரச்சினையின் போது, மதுரையிலிருந்து கிளம்பி வந்தார். ஒரு சாலையின் ஓரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்று மொத்த பிரச்சினையையும் சொன்னோம். என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என கேட்டு, அனைத்தையும் சரி செய்து கொடுத்தார். நான் தயாரித்த பெரிய படங்கள், சிறு படங்கள் என அனைத்துக்குமே அவர் தான் பணம் கொடுத்திருக்கிறார். அன்பு மீது இப்படியொரு பழியா என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.
இயக்குநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் என மூன்றிலுமே சசிகுமார் உறுப்பினார். அந்த மூன்று தலைவர்களையும் அழைத்து அன்புசெழியனிடம் பேசினால் பிரச்சினை எளிதாக முடிந்துவிடப் போகிறது. பல பைனான்சியர்களிடம் பேசி எத்தனை படங்களை வெளியிட்டு இருக்கிறோம். ஏதாவது ஒரு படம் அன்புவால் நின்றிருக்கிறதா என்றால் சத்தியமாக கிடையாது. அப்படிப்பட்டவர் மீது ஏன் இப்படியொரு பழி. இதற்கு பின்னணியில் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது.
அன்புசெழியனை தவறாக சித்தரித்து இந்த தொழிலை நசுக்கி விடக்கூடாது. நெக்டிவ் ரைட்ஸுக்கு கொடுக்கக்கூடிய பணம் சம்பளத்திற்கு போய்விடும். மீதி பணத்தைக் கொடுக்க கூடியவர் அன்பு. அவர் ஒதுங்கிவிட்டார் என்றால், இடைநிலை தயாரிப்பாளர்கள் யாருமே படம் எடுக்க முடியாது. நடிகர்களே பணத்தைப் போடு, படம் எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.
அன்பு பைனான்சியர் மட்டுமல்ல, அவர் ஒரு விநியோகஸ்தர். ‘தங்கமகன்’ பட நஷ்டமாகிவிட்டது என்பதற்காக ஸ்ரீகிரீன் நிறுவனத்திற்கு 2 கோடி விட்டுக் கொடுத்தவர் அன்பு. அப்படியொரு ஒரு ஈகை குணம் கொண்டவர். எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த திரையுலகை விட்டு அன்பு ஒதுங்கிவிடக் கூடாது. அன்பு ஒதுங்கினால், சினிமா இல்லை. அன்புசெழியன் என்பவர் அன்பானவர், பண்பானவர், பாசமானவர், நேசமானவர், உண்மையான ஒரு பையன்.
அசோக்குமாரின் குடும்பத்துக்கு உதவ வேண்டும் என்று சுரேஷ் காமாட்சி பேசினார். நான் முதலீடு செய்து படம் தயாரிக்கிறேன். சசிகுமார் அல்லது விஷால் நடிக்கட்டும். அந்தப் பணம் அசோக்குமாரின் குடும்பத்துக்கு போய் சேரட்டும்…” என்று முத்தாய்ப்பாகக் கூறினார்.
மேலும், இந்த விழாவில் இயக்குநர் ராஜகுமாரன், தயாரிப்பாளர் எல்ரெட் குமார், ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு அன்புச் செழியனுக்கு அதரவாக பேசினர்.