மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தேர்தலில் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் பட்டியலில் நடிகர் கமலஹாசனும் இடம் பெற்றுள்ளார்.
மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்புக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான புதிய தேர்தல் வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று கொச்சியில் நடைபெற உள்ளது.
இதுவரையிலும் ‘அம்மா’ அமைப்பின் தலைவராக இருந்து வந்த மோகன்லால் இந்த தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்ததை அடுத்து இந்த முறை அணிகளே இல்லாமல் தனித்தனியாக பலரும் பல பதவிகளுக்கும் போட்டியிடுகிறார்கள்.
தலைவர் பதவிக்கு நடிகை ஸ்வேதா மேனனும், நடிகர் தேவனும் போட்டியிடுகிறார்கள்.
பொதுச்செயலாளர் பதவிக்கு நடிகை குக்கூ பரமேஸ்வரனும், நடிகர் ரவீந்தரும் போட்டியிடுகின்றனர்.
பொருளாளர் பதவிக்கு நடிகர்கள் அனூப் சந்திரனும், உன்னி சிவபாலும் போட்டியில் உள்ளனர்.
இணைச் செயலாளர் பதவிக்கு நடிகை அன்சிபா ஹாஸன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு நடிகைகள் அஞ்சலி நாயர், ஆஷா அரவிந்த், நீனா குரூப், சஜிதா பேடி, சரயூ மோகன், நடிகர்கள் ஜாய் மேத்யூ, கைலாஷ். நந்து பொடுவல், டாக்டர் ரோனி டேவிட்ராஜ், சந்தோஷ் கீழாத்தூர், சுஜய் வர்கீஸ், டினி டாம் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகிறார்கள்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து பல்வேறு நடிகர்கள், இயக்குநர்கள் மீது நடிகைகள் கொடுத்த பாலியல் புகார்களினால் ‘அம்மா’ அமைப்பில் பெரும் சலசலப்பு எழுந்தது.
இதையொட்டி நடந்த சர்ச்சையில் அவ்வாறு புகாரை சந்தித்த கடந்த நிர்வாகத்தில் அம்மா அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த நடிகர் சித்திக்கும், துணைத் தலைவர்களில் ஒருவராக இருந்த நடிகர் பாபுராஜ் இந்த முறை தேர்தலில் நிற்கவில்லை.
மேலும் இதுவரையிலும் அம்மா அமைப்புக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்ததே இல்லை. இப்போதுதான் முதல்முறையாக தேர்தல் நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடையவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் நடிகர் கமலஹாசனின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
நடிகர் கமலஹாசன் 1970 காலகட்டத்தில் பல மலையாள திரைப்படங்களில் நடித்திருந்தார். அதனால் அவருக்கு அம்மா அமைப்பின் கவுரவ உறுப்பினர் என்ற பெயருடன் கூடிய உறுப்பினர் அட்டையை அம்மா அமைப்பினர் கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி கொச்சியில் வைத்து கமல்ஹாசனிடம் ஒப்படைத்தனர். அந்த வகையில்தான் நடிகர் கமல்ஹாசனுக்கு இத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமை கிடைத்துள்ளது.
கமல் மட்டுமல்ல.. நடிகர் அஜித்தின் மனைவியான ஷாலினிக்கும் ஓட்டு போடும் உரிமை உள்ளதாம். மேலும் பாலிவுட் நடிகை தபு, தமிழ் நடிகர்கள் பார்த்திபன், நெப்போலியன், நடிகை வசுந்தரா தாஸ் என்று வேறு மாநிலங்களில் இருப்பவர்களுக்கும் வாக்களிக்கும் தகுதி உள்ளதாம்.
வாக்களிக்கும் உரிமை இருந்தாலும் இவர்கள் எல்லாம் கொச்சிக்கு சென்று வாக்களிப்பார்களா என்பது வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று தெரியும்.









