மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரான மோகன்லால், மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தலைவராக 3-வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
‘அம்மா’ அமைப்பிற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம். கடந்த 2021-ம் ஆண்டு கடைசியாக தேர்தல் நடந்தது. அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் இந்தாண்டு முடிவடைவதால், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் முதலில் மோகன்லால் தலைவராக நீடிக்க விரும்பவில்லை என்று செய்திகள் பரவின. அதேபோல் சங்கத்தில் கடந்த 25 வருடங்களாக செயலாளராகப் பணியாற்றி வரும் நடிகர் எடவலா பாபு, தான் இந்த முறை தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றும் அறிவித்திருந்தார்.
இதனால் ‘அம்மா’ அமைப்பிற்கு புதிய தலைவர், செயலாளர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மலையாள திரையுலகத்தில் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக மோகன்லால் மீண்டும் தலைவராக இருப்பதற்கு சம்மதித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த இடைவெளியில் சங்கத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கலும் தொடங்கிவிட்டது. தலைவர் பதவிக்கு நடிகை குக்கூ பரமேஸ்வரன், நடிகர்கள் அனூப் சந்திரன், ஜெயன் சேர்தலா மூவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
மோகன்லாலின் மனமாற்றத்திற்குப் பிறகு இந்த மூவரும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் வாங்கியதால் மோகன்லால் எதிர்ப்புகளே இல்லாமல், போட்டியின்றி ‘அம்மா’ அமைப்பின் தலைவராக மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதேபோல், பொருளாளர் பதவிக்கு நடிகர் உன்னி முகுந்தன் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால் மற்றைய பதவிகளுக்குக் கடும் போட்டி நிலவுகிறது.
செயலாளர் பதவிக்கு நடிகர் சித்திக், நடிகை குக்கூ பரமேஸ்வரன், உன்னி சிவபால் மூவரும் போட்டியிடுகின்றனர்.
2 துணைத் தலைவர்கள் பதவிக்கு நடிகர் ஜெகதீஷ், நடிகை மஞ்சு பிள்ளை, நடிகர் ஜெயன் சேர்தலா மூவரும் போட்டியிடுகின்றனர்.
இணைச் செயலாளர் பதவிக்கு நடிகர்கள் பாபுராஜூவும், அனூப் சந்திரனும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகைகள் அனன்யா, அன்ஸிபா ஹாசன், சரயு மோகன், நடிகர்கள் டொவினோ தாமஸ், டினி டாம், வினு மோகன், ஜாய் மேத்யூ, கலாபவன் ஷாஜோன், ரமேஷ் பிஸ்ராடி, ரோனி டேவிட், சூரஜ் வஜ்ரமூடு, சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
‘அம்மா’ அமைப்பில் தற்போது 498 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் நடிகர்கள் 253 பேர். நடிகைகள் 245 பேர்.
இவர்களில் 120 பேர் ‘அம்மா’ அமைப்பு மாதந்தோறும் தரும் 5000 ரூபாய் நிதியுதவியைப் பெற்று வருகிறார்கள். இந்த நிதியுதவியைப் பெற்று வருபவர்கள் ‘அம்மா’ அமைப்பின் நிர்வாகத் தேர்தலில் எந்தப் பதவிக்கும் போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் ஜூன் 30-ம் தேதி நடைபெறவிருக்கும் ‘அம்மா’ அமைப்பின் பொதுக் குழுக் கூட்டத்தின்போது நடைபெறவுள்ளது.