full screen background image

அம்…ஆ – சினிமா விமர்சனம்

அம்…ஆ – சினிமா விமர்சனம்

இந்த உலகத்தில் குழந்தைகள் யாரும் அனாதையாக வாழ்ந்து விடக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் இத்திரைப்படம் வந்துள்ளது.

குழந்தைகள் மீது உள்ள பாசத்தில் பெற்ற தாய்.. பெறாத தாய்.. தெரிந்த தாய் என்று எந்த வகையிலும் பாசத்தை அளந்துவிட முடியாது. அப்படி ஒரு பாசத்தை காட்டும் ஒரு பெறாத தாயின் கதைதான் இந்த ‘அம்..ஆ’ திரைப்படம்.

வாடகைத் தாய் முறையில் பெற்ற குழந்தையை அதற்குப் பிறகு இரண்டு தாய்களும் புறக்கணிக்கும் நிலையில் அந்தக் குழந்தையை இன்னொரு அம்மா எடுத்து வளர்க்கும் சூழலில்… அது இன்றைய அவசரகால யுகத்தில் அரதப் பழசான சட்டங்களை வைத்து ஆட்சி நடத்தும் அதிகார வர்க்கத்தின் முன்பு எப்படி சிக்கலை உருவாக்குகிறது என்பதை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தொடுபுழா என்கின்ற ஒரு அழகிய மலை கிராமத்திற்கு ஒரு நாள் காலையில் வந்து சேர்கிறார் சாலை காண்ட்ராக்டர் திலீஷ் போத்தன். அவரை வரவேற்கும் அந்தப் பகுதியின் வார்டு கவுன்சிலரான ஜாபர் இடுக்கி, திலீஷ் போத்தன்  தங்குவதற்காக மலையில் உச்சியில் இருந்த ஒரு சிறிய வீட்டை அடையாளம் காட்டுகிறார்.

அந்த ஊரின் பேருந்து நிலையத்தின் அருகில் இருக்கும் ஒரே ஒரு டீக்கடைதான் அந்த ஊர் ஜனங்கள் அனைவரையும் இணைக்கும் ஜங்ஷன். அந்த டீக்கடையில் இருக்கும் ஆசான் என்று அழைக்கப்படும் கண் பார்வை இல்லாத பெரியவர் ஒருவர் தான் அந்த ஊரைப் பற்றிய அத்தனை விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்.

அதே ஊரில் இன்னொரு பக்கம் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மணி என்ற தேவதர்ஷினி ஒரு நான்கு வயது பெண் குழந்தையை வளர்த்து வருகிறார். அந்த பெண் குழந்தைக்கு இன்னும் பேச்சு வரவில்லை. அருகில் இருக்க பால் வாடியில் அந்தக் குழந்தையை விட்டுவிட்டு தினக் கூலி வேலைக்கு சென்று வரும் அம்மணி அக்கம் பக்கம் யாரிடமும் பேச்சு வார்த்தையே இல்லாமல் எப்போதும் இறுகிய முகத்துடன், ஒரு இறுக்கமான மனநிலையில் வாழ்ந்து வருகிறார்.

சாலை போடுவதற்காக வந்த காண்ட்ராக்டர் திலீஷ் போத்தன் திடீரென்று டிராக் மாதிரி அம்மணியை தேடிச் செல்கிறார். அம்மணியின் வீட்டுக்கு சென்று அவரை ஏதோ ஒரு காரணத்திற்காக மிரட்டுகிறார். இதை அறியும் ஆசான், போத்தனை கொலை செய்ய பார்க்கிறார்.

அப்படியெனில் அம்மணியின் முன் கதை என்ன..? ஆசானுக்கும், அம்மணிக்கும் என்ன தொடர்பு..? உண்மையில் திலீஷ் போத்தன் யார்?.. இந்த கேள்விகளுக்கான விடை படத்தின் இரண்டாம் பகுதியில் கிடைக்கிறது.

எந்தக் கதாபாத்திரமும் மேக்கப் போடவில்லை. அனைவரும் அந்த மண்ணைப் போலவே இயல்பான தோற்றத்திலேயே தோன்றியிருக்கிறார்கள்.

பெற்ற தாய்.. பெறாத தாய்.. இனிமேல் வளர்க்கும் தாய் என்று மூன்று தாய்மார்களின் கதையையும் ஒருசேர பின்னிப் பிணைந்ததுபோல திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் தாமஸ் செபாஸ்டியனை மனதாரப் பாராட்டுகிறோம்.

பெற்ற தாயாக நடித்திருப்பவர் தன்னுடைய படபட பேச்சிலும், தன்னுடைய வாழ்க்கை அவருக்கு கொடுத்திருக்கும் சிரமங்களினால் அவர் படும் அழுத்தத்தினால் அவர் காட்டுகின்ற கடுமையும்… கணவர் மீது படும் எரிச்சலும், அந்தக் கோபத்தில் அவர் காட்டுகின்ற அந்த நடிப்பும்… பாவப்பட்ட ஜீவன்கள் நமது பெண்கள் என்று பரிதாபப்பட வைத்திருக்கிறது.

வளர்க்கப் போகின்ற தாயாக நடித்திருக்கும் மீரா வாசுதேவன் மெலிந்த நிலையில் மிகவும் அழகாக இருக்கிறார். அழகாக நடித்திருக்கிறார் அவருடைய அறிமுகக் காட்சியில் 14 வருடங்கள் கழித்து தான் தாய்மை அடைந்திருக்கும் அந்த உணர்வை அவர் வெளிப்படுத்துகின்றவிதமும் அந்த சந்தோஷத்தில் அவர் காட்டுகின்ற உணர்வுகளும் அட்டகாசம் என்று சொல்லலாம்.

தே சமயம் அடுத்த ஐந்து நிமிடத்தில் அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறுகின்ற பொழுது அவர் காட்டுகின்ற அந்த பரிதாப உணர்வு, ஐயோ பாவம் என்று நம்மை உச்சுக்கொட்ட வைத்து விட்டது.

பெறாத தாயாக நடித்திருக்கும் தேவதர்ஷினிதான் இந்தப் படத்தை முழுவதுமாக தாங்கி, நகர்த்தி இருக்கிறார். தானும் ஒரு அனாதை என்ற நிலையில் தங்குவதற்குகூட இடமில்லாமல் அலைபாயும் அவர் கடைசியாக அந்தக் குழந்தையின் பெற்ற தாயின் இருப்பிடத்தில் வந்து இந்த குழந்தையை பார்க்கின்ற அந்த தருணத்தில் இருந்து அவரும் ஒரு தாயாக மாறி போகிறார். அந்த உணர்வினை மிக எளிதாக பார்வையாளர்களுக்கு கடத்தி இருக்கிறார் தேவதர்ஷினி.

அற்புதமான மன ஓட்டத்தில் குழந்தையை எந்தக் காரணத்தை முன்னிட்டும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று பெற்ற தாயைவிடவும் முனைந்து செயல்பட்டு அந்த குழந்தைக்காக தன்னுடைய வாழ்க்கையை ஒரு நாடோடித்தனமாக மாற்றிக் கொண்டு ஊர் விட்டு ஒரு ஓடி வந்து அடைக்கலமாகி வாழ்க்கையை ஓட்டும் அந்த வைராக்கியத்தை தனது தேர்ந்த நடிப்பில் காண்பித்திருக்கிறார் தேவதர்ஷிணி.

தன் உடலில் இருக்கின்ற பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் குழந்தையை வளர்ப்பது மட்டுமே தன்னுடைய கொள்கையாக வைத்திருக்கும் அவருடைய நடிப்பும் அபாரம் என்றே சொல்லலாம்.

அந்தக் குழந்தையை பெற வைத்தவர்களின் வீட்டில் விட்டுவிட்டு திரும்பி பார்க்காமல் ஓடும் அந்த பெற்ற தாயும்… குழந்தை எப்படியாவது காப்பாற்றி ஆக வேண்டும் தனக்காவது வேண்டுமென்று சொல்லி ஓட்டமாக ஓடிவரும் தேவதர்ஷினியின் ஓட்டம்.. என இந்த இரண்டு ஓட்டங்களுமே நம்மை ஒரே சேர கலங்கடித்துவிட்டது.

சானாக நடித்திருப்பவர் எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தேவதர்ஷினிக்கு அடைக்கலம் கொடுத்து அவர் ஒரு கதையை கட்டி விட்டு தேவதர்ஷினி காப்பாற்றி இருப்பதும், கடைசியாக திலீஷ் போத்தன் யார் என்று தெரியாமல் அவரைத் தாக்குவதும் அவருடைய கேரக்டருக்கு ஒரு சிறப்புதான்.

கவுன்சிலராக நடித்திருக்கும் ஜாபர் இடுக்கியின் சரளமான பேச்சு நிச்சயம் பாராட்டுக்குரியது. அவரும் கடைசியாக வந்தது சப்-இன்ஸ்பெக்டர் என்பதை தெரியாமல் பேசிவிட்டதாக சொல்லி ஸ்டீபன் மன்னிப்பு கேட்டுவிட்டு பிறகு சரளமாக பேசுகின்ற அந்த இடத்தில் அவருடைய நடிப்பு சிம்ப்ளி சூப்பர்ப்!

காண்ட்ராக்டராக நடித்த திலீஷ் போத்தன் மலையாள சினிமாவில் சிறந்த குணசித்திர நடிகராக பல்லாண்டு காலமாக தொடர்ந்து நடித்து வருகிறார். சிறந்த கதாசிரியர்.. சிறந்த இயக்குநர்… இதையெல்லாம் தாண்டி ஒரு சிறந்த நடிகராக இந்த படத்தில் தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார்.

அவருடைய அறிமுகக் காட்சியில் இருந்து கடைசியாக அம்மணியை அவர் சந்திக்கின்ற வரையிலும் பார்த்த திலீஷ் போத்தன் வேறாக தெரிந்து… அம்மனியை பார்த்தவுடன் பேசுகின்ற பேச்சும், நடிப்பும் வேறாகத் தெரிய… அந்த இடத்திலேயே படத்தின் தன்மையும் மாறி நம்மையும் விசுக் என்று நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார் தன்னுடைய நடிப்பின் மூலமாக..!

ஆசான் உடனான சண்டையில் அவர் காட்டும் வெறித்தனமும், அம்மணியிடம் இருக்கும் குழந்தை யாருடையது என்பதை கண்டுபிடித்து விட வேண்டும் என்று அவர் காட்டுகின்ற துடிப்பிலும் தேர்ந்த நடிப்பை காண்பித்திருக்கிறார் திலீஷ் போத்தன்.

ஒளிப்பதிவாளர் அனிஷ் லாலின் கேமராவும் படத்தில் இன்னொரு கதாபாத்திரமாகவே திகழ்கிறது. அந்த இடத்தின் இயற்கையின் வனப்புகளையும் எழிலையும் பார்க்கின்றபொழுது என்றாவது ஒருநாள் அங்கே போய்விட்டு வர வேண்டும் என்ற ஒரு ஏக்கம் நமக்குள் ஏற்படுகிறது. அப்படி ஒரு அழகான இயற்கை சார்ந்த இடத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்தி இருக்கிறார்கள்.

திலீஷ், ஜாஃபர் இடுக்கியுடன் ஜீப்பில் பயணம் செய்து கரடு முரடான பாதைகளில் பயணித்து மலை உச்சிக்கு சென்று சமதளமான ஒரு இடத்தில் நின்று பார்க்கின்ற பொழுது உண்மையாகவே நமக்கே ஒரு பரவசம் ஏற்படுகிறது. அப்படி ஒரு அழகான ஒளிப்பதிவை காண்பித்து இருக்கிறார் அனிஷ் லால்.

கோபி சுந்தரின் இசையில் “கண்ணாத்தாள் மலை மேலே” என்று ஒலிக்கின்ற அந்தப் பாடலை கேட்பதற்கு ஒரு புத்துணர்ச்சியாக இருந்தது. பாடலுக்கான இசையும், பின்னணி இசையும் அழகு.. அபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். சில இடங்களில் டென்ஷனை ஏற்ற வேண்டிய இடத்தில் பின்னணி இசையே அந்த வேலையை செய்திருக்கிறது.

மழையும், மலை சார்ந்த பிரதேசமும் ஆக இருந்தாலும் ஒரு சினிமா படப்பிடிப்புக்காக போட்டிருக்கும் அந்த டீக்கடை, மலையில் இருக்கும் வீடு இரண்டுமே கலை இயக்குநர் பிரசாத் மாதவின் திறமையை காட்டுகிறது.

பொதுவாக மலையாள வசனங்களுக்கும், தமிழ் வசனங்களுக்கும் மில்லி மீட்டர் அளவில்தான் இடைவெளி இருக்கும். அந்த இடைவெளிகூட தெரியாத வண்ணம் மிகக் கச்சிதமாக தமிழுக்கு வசனம் எழுதி இருக்கிறார் எஸ்.ஆர்.வாசன். அவருடைய பல வசனங்கள் மலையாள சினிமாவில் இலக்கிய தரமான வசனத்தை நமக்கு காட்டி இருக்கிறது.

கோடிகளில் செலவு செய்து பிரம்மாண்டமாக படம் எடுத்துவிட்டு, கடைசியாக படத்தின் கதை என்ன என்று நம்மை கேட்க வைக்கும் அளவுக்குத்தான் தற்போது திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

பிரம்மாண்டமே இல்லாமல் ஒரு எளிமையான ஒரு கதையை நம்மிடம் இருந்து எடுத்து அதையும் அழகாக நாம் பார்க்கின்ற வகையில் கொடுத்து… குழந்தைகளின் மீதான பாசத்தையும், தாய்மையையும் போற்றுகின்றவிதமாக எடுத்துக்காட்டியிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் தாமஸ் செபாஸ்டியனுக்கு நம்முடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.

நல்ல படம் வரவில்லையே என்று ஏங்கி தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் ரசிகர்களுக்கு மலையாளத்திலிருந்து வந்திருக்கும் ஒரு நல்ல தரமான திரைப்படம் இது.

மிஸ் பண்ணிராதீங்க!!!

RATING : 4 / 5

Our Score