‘கோச்சடையான்’ படத்தின் இந்திப் பதிப்பின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் இந்த விழாவில் கலந்து கொண்டு டிரெயிலரை வெளியிட்டார்.
அவர் பேசும்போது, “இந்தத் தருணம் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.. இந்தப் படத்தை இயக்கியிருக்கும் செளந்தர்யா இந்திய சாதனை பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாகச் சொல்லக்கூடிய அளவுக்கு இந்தப் படத்தினை இயக்கியிருக்கிறார். ஒரு பெண் சவாலான ஒரு தொழில் நுட்பத்தை கையில் எடுத்துக் கொண்டு, அதை சிறப்பாகவும் முடித்திருக்கிறார். ஒரு மகள், அவரது பாசமான அப்பாவுக்கு மிகவும் பெருமை சேர்த்துள்ளார். ஒரு அப்பா தன் மகள் மீதான நம்பிக்கைக்கு ஆதரவாக இருந்து மிகப் பெரும் சாதனை நிகழ காரணமாக இருந்திருக்கிறார்…
நானும் ரஜினியும் மிக நெருக்கமானவர்கள். ஒரே குடும்பம்போல பழகியிருக்கிறோம். பல படங்களில் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அவர் மிக எளிமையான மனிதர். திரைக்குப் பின்னால் நேரமிருக்கும்போதெல்லாம் எங்களுடைய சந்திப்பில் சினிமா, குடும்பம், வாழ்க்கையைப் பற்றி நிறைய பேசுவோம்.
‘எந்திரன்’ தயாரிப்பின்போது இந்த வாழ்க்கை தனக்கு மிகவும் போரடிப்பதாகச் சொன்னார் ரஜினி. ஆனால் நான் ரஜினியிடம் சொன்னேன், படங்களில் நடிப்பதை நிறுத்தி விடாதீர்கள் என்று.. இப்போது பாருங்கள்.. என்ன மாதிரியான ஒரு படத்தை உருவாக்கியிருக்கிறாரென்று..? இது அவருக்குள் இருக்கும் நம்ப முடியாத ஒரு மாயத்தை வெளிக்காட்டியிருக்கிறது. சினிமா ரசிகர்களுக்கு அவரால் இன்னமும் புதிய படைப்புகளை வழங்க முடியும். இந்திய சினிமாவின் வரலாற்றை எழுதுபவர்கள் நிச்சயமாக கோச்சடையானுக்கு முன்பும், பின்பும் என்றுதான் எழுத முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
ரஜினியின் ரசிகர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் நீங்கள் தென்னகத்திற்குத்தான் போக வேண்டும். ரஜினியின் படங்களின் முதல் நாள், முதல் ஷோவின் டிக்கெட்டுகளை உங்களால் வாங்கவே முடியாது. அது முழுக்க முழுக்க அவரது ரசிகர்களிடத்தில்தான் இருக்கும். அப்படியே டிக்கெட்டுகளை நீங்கள் வாங்கி தியேட்டருக்குள் நுழைந்தாலும் அங்கே உங்களால் எதையும் கேட்கவே முடியாது. அந்த அளவுக்கு கைதட்டல்களும், விசில் சப்தங்களும் ஒலிக்கும். ‘கோச்சடையான்’ தியேட்டர்களில் இது போன்ற உணர்வை நிச்சயமாக கொடுக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.
கோலாகமான இந்த விழாவில் லதா ரஜினி, படத்தின் இயக்குநர் செளந்தர்யா, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஐஸ்வர்யா ராய், இவருடைய தாயார், அமிதாப்பின் மனைவி ஜெயா பாதுரி, பாலிவுட் இயக்குநர்கள் சேகர் கபூர், சுபாஷ் கய், தயாரிப்பாளர் ரமேஷ் சிப்பி, நடிகர் அனுபம் கெர், இயக்குநர் பால்கி, நடிகை கஜோல் உட்பட பல பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொண்டார்கள்.
நேற்றைக்கே அனைத்து இந்தி, ஆங்கில சேனல்களும் கோச்சடையானுக்காக ஸ்பெஷல் நிகழ்ச்சிகளை தங்களது டிவிக்களில் நடத்தினார்கள். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்பதை கோச்சடையானின் இந்த இந்திப் பதிப்பை பைசா காசு செலவில்லாமல் அங்கேயிருக்கும் ஊடகங்கள் விளம்பரப்படுத்துவதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்..!