இந்தப் படத்தை, உலக நாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை–தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைந்துள்ளது.
இந்தப் படத்தினை எழுதி, இயக்கும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நீண்ட நெடிய ஆய்வுகளுக்குப் பிறகு, கவனமாக இந்த ‘அமரன்‘ திரைப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார்.
தமிழ்த் திரை நட்சத்திரமான சிவகார்த்திகேயன், நிஜ வாழ்வின் நாயகனான ஒருவரின், தனித்துவமிக்க கதாபாத்திரத்தை ஏற்று, அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும், மிகுந்த திறமைசாலியான சாய் பல்லவியுடன் அவர் இணைந்து நடித்திருக்கிறார். சாய் பல்லவி, இந்தப் படத்திற்கு இன்னொரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார்.
இந்த ‘அமரன்‘ திரைப்படத்தில் மிகச் சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் கலந்துள்ளது.
இசை – ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் – சி.ஹெச்.சாய், படத் தொகுப்பாளர் – ஆர்.கலைவாணன், சண்டைக் காட்சி இயக்குநர்கள் – அன்பறிவு, ஸ்டீஃபன் ரிச்டர், உடை வடிவமைப்பாளர்கள் அம்ரிதா ராம் மற்றும் சமீரா சனீஷ் ஆகியோர் இந்த தொழில் நுட்பக் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.
இதுவொரு வாழ்க்கை உண்மைக் கதை. 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதியன்று காஷ்மீர் மாநிலத்தில் புலமாவா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் உயிர்த் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதைதான் இத்திரைப்படம்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் ராஹுல் சிங் ஷிவ் அரூர் எழுதிய ‘இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்‘ தொடரிலிருந்து ஒரு அத்தியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.
சென்னையில் தாம்பரத்தில் பிறந்து வளர்ந்த முகுந்த் தாம்பரம் கிறிஸ்துவக் கல்லூரியில் படிக்கும்போது உடன் படித்த கேரளாவைச் சேர்ந்த இந்து ரெபெக்கா வர்கீஸ் என்பவரை தீவிரமாகக் காதலித்து கடும் எதிர்ப்புகளையும் தாண்டி திருமணம் செய்கிறார்.
சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்த முகுந்த் ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்து, லெப்டினென்ட் அதிகாரியாகத் தேர்வாகிறார். 22-வது ராஜ்புத் ரெஜிமென்டில் தன்னுடைய 23-ம் வயதில் ராணுவத்தில் இணைந்தார்.
இதைத் தொடர்ந்து பஞ்சாப், காஷ்மீர் மற்றும் லெபனானில் இருக்கும் இந்திய அமைதி காப்புப் படையிலும் பணியாற்றிவிட்டு கடைசியாக 2012-ம் ஆண்டு காஷ்மீரில் மீண்டும் பணியில் சேர்கிறார். இப்போது அவர் மேஜராக பதவி உயர்வு பெற்றுள்ளார். காஷ்மீரில் 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் என்ற படைப்பிரிவில் பணியமர்த்தப்பட்டார் முகுந்த்.
இப்போது முகுந்துக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நேரத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வந்த சூழலில் 2012 ஏப்ரல் 25-ம் தேதியன்று புலமாவா மாவட்டத்தில் இருக்கும் சேப்பியன் என்னுமிடத்தில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்க குழுவின் பிராந்திய தலைவன் அல்தாப் வானியை பிடிப்பதற்காகத் தனது சக வீரர்களுடன் சென்றார்.
தனித்த இடத்தில் பூட்டியிருந்த வீட்டுக்குள் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் நடந்த கடும் சண்டையில் கிரனைட் தாக்குதலினாலும், தீவிரவாதிகளின் துப்பாக்கி தாக்குதலினாலும் தன் உயிரை இழந்தார் மேஜர் முகுந்த் வரதராஜன்.
மேஜர் முகுந்த் வரதராஜனின் பூதவுடல் காஷ்மீரிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. பொதுமக்களின் அஞ்சலிக்குப் பிறகு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சாகும் தருவாயிலும் தன்னுடைய துப்பாக்கியினால் சுட்டு 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றார் மேஜர் முகுந்த் வரதராஜன். இதற்காக 2013-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு இந்திய அரசு அசோக சக்ரா விருது வழங்கி கெளரவித்தது.
இவருடைய வாழ்க்கைக் கதையைத்தான் கொஞ்சம் சினிமாத்தனத்தையும் சேர்த்து, எமோஷன்ஸ்களைக் கொட்டி சிறந்த நடிகர், நடிகைகளின் நடிப்புடன், தன்னுடைய சிறந்த இயக்கத்தையும் சேர்த்து ஒரு வாழ்க்கைக் காவியமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
தனது வழமையான கதாநாயக பிம்பத்தைக் காட்டி தனது ரசிகர்களைக் குஷிப்படுத்தும் நாயகனாகவே தொடர்ந்து நடித்து வரும் சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் இந்தியாவின் தேச பக்தர்களிடையே தேச பக்தியைத் தட்டியெழுப்பும் தேசப் பற்றாளானாக கூடுதல் பொறுப்பையுணர்ந்து நடித்திருக்கிறார்.
கல்லூரி கால சராசரி மாணவனாக நடித்திருப்பதைக் காட்டிலும், காதலிக்கும் தருணத்திலும், காதலில் விழுந்த பின்பும், அந்தக் காதலுக்காக இரு தரப்பு பெற்றோரிடமும் சண்டையிட்டு காதலை ஜெயிக்க வைத்திருக்கும் முகுந்தைக் காட்டிலும் ஒரு ராணுவ வீரனாக, லெப்டினென்ட்டாக, கர்னலாக, மேஜராக நடிக்கும்போது கூடுதலாக நம்மிடமிருந்து பெரும் பாராட்டைப் பெறுகிறார் சிவா.
உண்மையில் நடந்த நிகழ்வாக அடையாளப்படுத்தப்படும் அச்சமில்லை அச்சமில்லை பாடலை தனது மகளுடன் அவர் பாடிக் காட்டும் காட்சியைவிடவும், தாக்குதலுக்குச் சென்று கொண்டிருக்கும்போது ராணுவ வாகனத்தில் சக வீரர்களுடன் அதைப் பாடும் காட்சியில் மெய் சிலிர்க்க வைத்திருக்கிறார் சிவா.
மனைவி, மகளுடன் பேசுவதற்குக்கூட நேரமில்லாமல் தவிக்கும் நிலையிலும் நாட்டுப் பற்றாளானாக எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று மனைவிக்கு சொல்லிக் கொடுக்கும் தைரியத்திலும் ஒரு ராணுவ வீரனாக சிவாவுக்கு சல்யூட் செய்யலாம்.
தன்னுடைய இறுதிப் போரில் மரணம் உறுதியென்பது தெரிந்தும் நாட்டுக்காக உயிரைவிடத் துணிந்து தான் சாகும் தருவாயில் தன்னுடைய குடும்பத்தை நினைவு கூறும்போது ஒட்டு மொத்த ரசிகர்களின் அனுதாபத்தையும் பெற்றுவிட்டார் சிவா. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
படத்தின் ஹீரோ சிவகார்த்திகேயன் என்றாலும் படத்தை முழுவதுமாகத் தாங்கியிருப்பது சாய் பல்லவிதான். தன்னை மம்மூட்டி என்றழைக்கும் சிவாவிடம் செல்லமாகக் கோபிப்பதில் துவங்கி, இறுதிக் காட்சியில் சொட்டுக் கண்ணீர்விடாமல் சிவாவின் ராணுவ சீருடையைக் கையில் வாங்கும் வரையிலும் தன்னுடைய தேர்ந்த நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுவிட்டார் சாய் பல்லவி.
அவருடைய சிவந்த, பூரித்த கன்னக் குழிகளும், மைதானம் போன்ற அகலமான கண்களும், வட்டமயமான முகமும் சேர்ந்து மயக்கும் அதே வேளையில், தனது நடிப்பினால் ஒட்டு மொத்தக் கூட்டத்தையும் தன் பக்கம் ஈர்த்திருக்கிறார் சாய் பல்லவி. நிஜத்தில் இந்து ரெபெக்கா வர்கீஸூடன் ஒப்பிடும்போது சாய்பல்லவி சாலப் பொருத்தம்தான்..!
தன் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கும் தன் குடும்பத்தாரிடம் மல்லுக் கட்டும் காட்சிகளிலும், மிரள வைக்கும் வகையில் பேசும் தன் மாமியாரை சமாளிக்கும் காட்சியிலும் தன் நடிப்பாலேயே காதலுக்கு நம் மனதில் ஓகே சொல்ல வைத்திருக்கிறார் சாய் பல்லவி.
போனில் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று ஏற்படும் மோதலின் சப்தங்கள் கேட்டு அவர் காட்டும் பதட்டமும், பயமும், அழுகையும் நம்மையும் தொற்றிக் கொண்டு அந்தக் காட்சியோடு நம்மை ஒன்றவைத்துவிட்டது.
எதற்காகாவும், யார் முன்பாகவும் அழுகக் கூடாது என்ற முகுந்தின் அட்வைஸ்படி இருக்க நினைத்து அது முடியாமல் முகுந்தின் மரணச் செய்தியை அவர் எதிர்கொள்ளும்விதம் சாய் பல்லவியின் நடிப்பின் உச்சக்கட்டம்..! வாவ்.. கை தூக்கி வணங்குகிறோம்..! வாழ்க வளமுடன்..!
வழக்கமான அம்மாவாக சிவாவின் அம்மா கீதா கைலாசமும், வழக்கமான அப்பாவாக நடித்திருக்கும் சாய்பல்லவியின் அப்பாவும் நடிப்பில் ஒன்றுபோல் நடித்து அவரவர் தரப்பு நியாயத்தை முன் வைத்திருக்கிறார்கள்.
ராணுவ அதிகாரியாக நடித்திருக்கும் ராகுல் போஸின் அடக்கமான அட்வைஸ் நடிப்பும், உடன் நடித்திருக்கும் சக ராணுவ வீரர்களின் நடிப்பும் இயக்குநரின் தேர்ந்த இயக்கத்தால் அப்பழுக்கில்லாமல் கிடைத்திருக்கிறது.
நடிப்பைத் தாண்டி தொழில் நுட்பத்திலும் இந்தப் படம் சிறப்பான வகையில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. சி.ஹெச்.சாயின் ஒளிப்பதிவு சண்டை காட்சிகளிலும், காஷ்மீர் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் உலகத் தரமானது.
சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கும் மாஸ்டர்கள் இருவருக்கும் ஒரு கோடி பூக்கூடைகளை பரிசாகத் தரலாம். துப்பாக்கிச்சூடு சண்டையும், கிரனெட் தாக்குதலையும், மக்கள் கல்லெறிவதையும் தத்ரூபமாக நடந்தது போலவே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
எமோஷன்ஸுடன் கூடிய ராணுவ மோதல் கலந்த திரைப்படம் என்பதால் அதற்கேற்றாற்போலவே படத்தொகுப்பையும் செய்து நம்மையும் அந்தப் பதைப்பதைக்குள்ளாக்கியிருக்கிறார் படத் தொகுப்பாளர். குறிப்பாக சண்டை காட்சிகளைத் தொகுத்தளித்திருக்கும்விதம் அருமை.
ஜி.வி.பிரகாஷின் இசையில் காதல் பாடல்கள் அதன் மாண்டேஜ் காட்சிகளால் பெரிதும் நம் கவனத்தை ஈர்த்துவிட்டது. சண்டை காட்சிகளின் ஒலியையும் தாண்டி பின்னணி இசையை குறைத்து வைத்து நமக்குப் பெரிதும் உதவியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் நம் மனதை உருக வைக்கும்விதமாய் பின்னணி இசையைத் தந்து மொத்தப் படத்தின் பாரத்தையும் அந்த ஒரு காட்சியிலேயே வாசித்தளித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். வெல்டன்..!
படம் ஒட்டு மொத்தமாய் நமக்குத் தரும் அனுபவம் சோகம்தான் என்றாலும் ஒரு அன்பான தம்பதிகளின் வாழ்க்கை அவன் சார்ந்த தொழில் காரணமாய் அழிந்து போவதை சாதாரணமாக உணர்த்தினால் நமக்குள் அது பெரிதாக பாதிக்காது.
ஆனால் தேசம், தேசப்பற்று, ராணுவ வீர்ர்கள், தீவிரவாத்த் தாக்குதல் இவையனைத்தையும் ஒன்று சேர்ப்பிக்கும்விதமாய் மேஜர் முகுந்தின் வாழ்க்கைக் கதை அமைந்திருப்பதால் இதைப் படமாக எடுத்திருப்பது பெரும் பாராட்டுக்குரியதுதான்.
இந்தப் படம் தேசத்துக்காக வீர மரணம் அடைந்த ஒரு ராணுவ அதிகாரியின் கதையாகவே படமாக்கப்பட்டிருப்பதால் காஷ்மீர் பிரச்சினைகளுக்கு யார் காரணம்..? எது தீவிரவாதம்..? யார் தீவிரவாதிகள்..? இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்?.. என்ற பிரச்சினைகளுக்கெல்லாம் போகாமல் தவிர்த்திருப்பதும் நல்லதுதான். இப்படியாக படத்தின் மையக் கரு சிதைந்துவிடாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!
எத்தனையோ கமர்ஷியல் கதைகள் காத்திருக்கும் நேரத்தில் இப்படியொரு கதையைப் படமாக்கத் துணிந்திருக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும், சோனி நிறுவனத்துக்கும் நமது பாராட்டுக்கள்..!
அத்திப்பூத்தாற்போலத்தான் இது போன்று அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் திரைப்படங்கள் வெளிவரும். அந்த வகையில் இந்த ‘அமரன்’ படம் தமிழ்த் திரையுல வரலாற்றில் என்றும் அழியாப் பேருடன் அமரத்துவம் வாய்ந்தது என்பதை உறுதியாகச் சொல்லலாம்..!
அனைவரும் குடும்பத்துடன் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது!
மிஸ் பண்ணிராதீங்க..!
RATING : 4.5 / 5









