நடிகர் பரத்தின் நடிப்பில் கவிதாலயா தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படம் பற்றி சமீப காலங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு பதில் சொல்லும்விதமாக இன்று அந்தப் படத்தின் பிரஸ் மீட், ஒரு சில நிருபர்களை மட்டுமே அழைத்து நடத்தப்பட்டிருக்கிறது..!
இதில் பேசிய நடிகர் பரத், “ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படம் எனது 25–வது படம். நிறைய கதைகள் கேட்டுவிட்டு எதுவும் பிடிக்காமல் போயிருந்த நிலையில் இந்த இயக்குநர் என்னிடம் வந்து இந்தக் கதையைச் சொன்னார். கதை பிடித்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். முழுக்க, முழுக்க காமெடி படம் என்பதால் தயாரிப்பாளர்கள் மோகன், புஷ்பா கந்தசாமி போன்றோரிடம் இயக்குநரை அனுப்பி வைத்தேன். அவர்களுக்கும் பிடித்திருந்தது. உடனேயே துவக்கிவிட்டோம். மூன்று மாதத்தில் வேகமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளோம்.
‘எம் மகனுக்கு’ பிறகு நல்ல கதையாக இது அமைந்துள்ளது. 21 காமெடி நடிகர்கள் நடித்துள்ளனர். முதல் முறையாக இந்தப் படத்தில் முழுக்க, முழுக்க காமெடி செய்துள்ளேன். கிராமத்தில் சித்த வைத்திய பரம்பரையில் 5–ம் தலைமுறையாக வரும் சித்த வைத்தியர் கேரக்டரில் நடித்திருக்கிறேன். சித்த வைத்தியர்களை புண்படுத்தும் காட்சிகள் எதுவும் இதில் இல்லை. அவர்களை இழிவுபடுத்தவும் இல்லை. அதே நேரத்தில் இந்தப் படம் செக்ஸ் டாக்டர்கள் பற்றிய படமும் இல்லை. சித்த வைத்தியத்தை பெருமைப்படுத்துவது போலவே படம் இருக்கும்..” என்று சொல்லியிருக்கிறார்.
இதற்குப் பின்பும் சர்ச்சைகள் ஓயுமா என்று தெரியவில்லை..!