விஜய் ஆண்டனி – அருண் விஜய் இணைந்து நடிக்கும் ‘அக்னிச் சிறகுகள்’

விஜய் ஆண்டனி – அருண் விஜய் இணைந்து நடிக்கும் ‘அக்னிச் சிறகுகள்’

தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தை தக்க வைத்திருக்கும் ‘அம்மா கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.சிவா தயாரிக்கும் 23-வது திரைப்படம் ‘அக்னிச் சிறகுகள்’.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் இருவரும் நடிக்க உள்ளனர். ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப் படத்தின் மூலம் இளம் ரசிகர்கள் இடையே மிக பிரபலமான ஷாலினி பாண்டே இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன் என்று ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.

கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்ய, நடராஜன் ஷங்கர் இசை அமைக்க, ‘மூடர் கூடம்’ படத்தின் இயக்குநரான நவீன் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார்.

‘அக்னிச் சிறகுகள்’ படம் பற்றிப் பேசிய இயக்குநர் நவீன், “இந்த ‘அக்னிச் சிறகுகள்’ என்கிற இந்த தலைப்பு எங்களுக்கு கொடுக்கும் உத்வேகம் விவரிக்க முடியாதது.  தலைப்பு தந்த  வீரியம் படம் முழுக்க வெளிப்படும்.

25 வருட கால பாரம்பரிய நிறுவனமான ‘அம்மா  கிரியேஷன்ஸ்’ நிறுவனத்துக்கு என்று ஒரு படம் இயக்குவது ஒவ்வொரு இயக்குனருக்கும் பெருமையே. நட்சத்திர தேர்வு, கதை கள தேர்வு என எல்லாவற்றிலும் தயாரிப்பாளர் டி.சிவா சாருடைய பங்களிப்பு அதிகம்.

இது விஜய் ஆண்டனிக்கென்றே பிரத்தியேகமாக செய்த கதை இல்லை இது. கதை உருவான பிறகுதான் இந்த கதாபாத்திரத்துக்கு விஜய் ஆண்டனி மட்டுமே பொருந்துவார் என தோன்றியது.

அருண் விஜய் இந்த படத்துக்கு பிறகு  தமிழ் திரை உலகில் தனக்கென்று தனி இடத்தை நிர்ணயம் செய்து கொள்வார். என்னுடன் தொடர்ந்து பணியாற்றும் அத்தனை தொழில் நுட்ப கலைஞர்களும் மீண்டும் இந்த  படத்தில் என்னுடன் இணைகின்றனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும், கொல்கத்தா மற்றும் கோவா ஆகிய இடங்களிலும் நடக்க உள்ளது. பிரத்தியேகமாக சண்டை காட்சிகள் வெளி நாட்டில் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்புடத்தக்கது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது…” என்றார் இயக்குநர் நவீன்.

படத்தின் முதல் கட்ட போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார்.!

 

Our Score