அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டி.சிவா அடுத்துத் தயாரிக்கும் திரைப்படம் ‘அக்னிச் சிறகுகள்’.
இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், அருண் விஜய் எதிர் நாயகனாகவும் நடிக்கின்றனர். ஷாலினி பாண்டே நாயகியாக நடிக்கிறார். மேலும் பிரகாஷ் ராஜ், நாசர், ஜெகபதி பாபு ஆகிய மூன்று முக்கிய நடிகர்களும் படத்தில் உள்ளனர். இதுவே படத்திற்கான முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘மூடர் கூடம்’ நவீன் இந்தப் படத்தை எழுதி, இயக்கவுள்ளார்.
இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் நவீன், “தற்போது விஜய் ஆண்டனி, அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரின் ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்து, முழுவீச்சில் ஒத்திகை நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும், தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் காட்சிகளை படமாக்குகிறோம்.
கதை அல்லது கதாபாத்திரங்களை பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. விஜய் ஆண்டனி ஒரு புதிய தோற்றத்தில் இருப்பார், முதல் முறை பார்ப்பவர்களால் அது அவர்தான் என அடையாளம் காண முடியாத அளவிற்கு அவர் தோற்றம் இருக்கும். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதல்ல, அவர் கதாபாத்திரம் இந்த மாதிரியான மாற்றங்களை கோரியது. எனவே, பல்வேறு தோற்றங்களை பரிசீலித்து, இறுதியாக சரியான ஒன்றைக் கண்டுபிடித்தோம்.
‘அக்னி சிறகுகள்’ எங்கள் முந்தைய திரைப்படங்களில் இருந்து மிகவும் வித்தியாசமான படமாக இருக்கும் என்று மட்டும் உறுதியாக சொல்வேன்..” என்றார்.