full screen background image

‘அடுத்த சாட்டை’ – சினிமா விமர்சனம்

‘அடுத்த சாட்டை’ – சினிமா விமர்சனம்

2012-ம் ஆண்டு சமுத்திரக்கனி, யுவன், தம்பி ராமையா நடிப்பில் உருவான திரைப்படம் ‘சாட்டை’. எம்.அன்பழகன் என்னும் புது இயக்குநர் இயக்கிய இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், படைப்பு ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தது.

இப்போது இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘அடுத்த சாட்டை’ என்கிற பெயரில் புதிய படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி தனது ‘நாடோடிகள் புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்தின் சார்பிலும் டாக்டர் பிரபு திலக் தனது ‘11:11 புரொடெக்சன்ஸ்’ நிறுவனத்தின் சார்பிலும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, யுவன், தம்பி ராமையா, அதுல்யா, ராஜ் பொன்னப்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – டாக்டர் பிரபு திலக், பி.சமுத்திரக்கனி, இயக்குநர் எம்.அன்பழகன், ஒளிப்பதிவு – ராசாமதி, இசை – ஜஸ்டின் பிரபாகர், கலை இயக்கம் – விஜயகுமார், படத் தொகுப்பு – நிர்மல், சண்டை இயக்கம் – சில்வா, ஸ்டில்ஸ் – மணி, தயாரிப்பு நிர்வாகம் – ஏ.எஸ்.சிவச்சந்திரன், மக்கள் தொடர்பு – நிகில். மொத்த நேரம் – 2 மணி 08 நிமிடங்கள்.

2012-ல் வெளியான படம் ‘சாட்டை’ திரைப்படம் அரசுப் பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான உறவு நிலை பற்றியும், அரசுப் பள்ளிகளின் தரம் பற்றியும் பேசியது. பேசியவிதம் பிரமாதமாக இருக்கவே அத்திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது.

இப்போது இந்த ‘அடுத்த சாட்டை’ என்னும் திரைப்படம் ஒரு கலை அறிவியல் கல்லூரியின் வாழ்க்கைக் கதையைச் சொல்கிறது.

தயாளன் என்னும் சமுத்திரக்கனி அன்னை கலை அறிவியல் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய கல்லூரியின் முதல்வர் தம்பி ராமையா. ஆதிக்கச் சமூகத்தைச் சேர்ந்தவர். இவருடைய மகனான  பழனிமுத்து என்னும் யுவனும் அதே கல்லூரியில் படித்து வருகிறார்.

இவருடைய வகுப்பில் படிக்கும் போதும் பொண்ணு என்னும் நாயகி அதுல்யா ரவியை ஒருதலையாய் காதலித்து வருகிறார் யுவன். அதுல்யாவும் யுவனின் ஜாதிக்காரப் பொண்ணுதான். ஆனால் அதுல்யா வேறொரு ஜாதியைச் சேர்ந்த பையனுடன் பாசமாக பழகி வருகிறார். இது யுவனுக்குப் பிடிக்கவில்லை.

அதே கல்லூரியில் மாணவர்களிடையே ஜாதிப் பிரிவினை இருக்கிறது. தாழ்ந்த சாதி, உயர்ந்த சாதி என்பதைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் தங்களது கைகளில் கயிறு கட்டிக் கொண்டு திரிகிறார்கள். இதேபோல் தம்பி ராமையாவின் முட்டாள்தனமான நிர்வாகத்தால் பேராசிரியர்கள் சிலர் மாணவர்களை ஒரு பொருட்டாகவே கருதாமல் பாடங்களை ஏனோ தானோவென்று நடத்தி வருகிறார்கள்.

இதையெல்லாம் திருத்த நினைக்கிறார் கனி. ஆசிரியர்கள்-மாணவர்கள் இடையே ஒரு இணக்கமான சூழலை உருவாக்க முயல்கிறார். ஜாதிப் பிரிவினையை கல்லூரியில் இருந்து விரட்ட நினைக்கிறார். மாணவர்களை ஒன்றுபடுத்த முயல்கிறார்.

இந்த நேரத்தில் பொய்யான ஒரு குற்றச்சாட்டினால் கனி கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதிக்கிறார்கள். இதனை பயன்படுத்தி தம்பி ராமையா கனியை நிரந்தரமாக கல்லூரியில் இருந்து நீக்கிவிட நினைக்கிறார். தன்னால் மாணவர்களிடையே எந்த மோதலும் நடைபெறக் கூடாது என்று நினைக்கிறார் கனி. இந்தக் குழப்பத்தில் இருந்து அந்தக் கல்லூரி தப்பித்ததா… இல்லையா… என்பதுதான் இந்த அடுத்த சாட்டை திரைப்படத்தின் திரைக்கதை.

சமுத்திரக்கனி என்றாலே கருத்து சொல்பவர் என்னும் ஒருமித்தக் கருத்து திரையுலகம் மட்டுமில்லாமல் தமிழ்ச் சமூகம் முழுக்கவே பரவிவிட்டது. அவரும் இது ஒன்றையே தன்னுடைய பாணி என்று நினைத்து அடுத்தடுத்த படங்களில் கச்சிதமாகச் செய்து வருகிறார்.

இத்திரைப்படத்திலும் தன்னுடைய தயாளன் என்னும் கதாபாத்திரம் மூலமாக கல்லூரியில் படிக்கும் மாணவர், மாணவிகளுக்கு படிப்பிற்கான அட்வைஸ்களையும், நேர்மையாக வாழும் வழிகளையும், போராடும் குணத்தையும் தூண்டிவிடும் வகையில் பேசியிருக்கிறார். நடித்திருக்கிறார்.

கூடவே இவருக்கான லவ் போர்ஷன்கூட மிக நாகரிகமாக வைக்கப்பட்டுள்ளது. அது காதலா இல்லையா என்றே பலரும் யோசிக்கும்படியான நேர்மையாக இருக்கும் அந்தக் காதல் கல்லூரி ஆசிரியர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சாட்டையில் அரசுப் பள்ளித் தலைமையாசிரியராக கலக்கிய தம்பி ராமையா இந்தப் படத்தில் கல்லூரி முதல்வராக ஆட்டம் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு டயலாக் டெலிவரியிலேயும் தன்னை மிஞ்ச அந்த நடிகர் குழுமத்தில் வேறு யாரும் இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்திருக்கிறார். இறுதிக் காட்சியில் செத்த பொணம் போன்று நடந்து வந்து தனது அப்போதைய நிலைமையை யதார்த்தமாகக் காட்டியிருக்கிறார்.

யுவன் பள்ளி மாணவர் போஸ்ட்டில் இருந்து கல்லூரி மாணவர் போஸ்ட்டுக்கு பிரமோஷன் ஆகியிருக்கிறார். சொந்த ஜாதிப் பித்துப் பிடித்த நிலையில் வேறு ஜாதிக்கார மாணவர்களை எகத்தாளமாகப் பேசுவதும், தான் காதலிக்கும் பெண் மீது அதீத உரிமையெடுத்து பேசுவதும்.. பின்பு உண்மை உணர்ந்து மன்னிப்பு கேட்டு திருந்துவதும்.. இறுதிக் காட்சியில் ஏன் ஸார் எங்களை வெளில போகச் சொன்னீங்க என்று கேட்டுக் கதறும்போது பரிதாபத்தை வரவழைத்திருக்கிறார்.

இதேபோல் நாயகி அதுல்யா ரவியும் காதலிக்கவே இல்லை. வெறும் பிரண்ட்ஷிப்புதான் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் காட்சியில் அழகுற நடித்திருக்கிறார். கூடவே இருக்கும் பேராசிரியையான ராஜ் பொன்னப்பா கடைசிவரையிலும் அழகுப் பதுமையாகவே வந்து போகிறார். நடிப்பிற்கான சரியான ஸ்கோப் இல்லாமல் இவர் மட்டும் தனித்துவிடப்பட்டிருக்கிறார்.

‘பிச்சைக்காரன்’ மூர்த்தி ‘அத்தை எப்போ சாவா.. திண்ணை எப்போ காலியாகும்..?’ என்பதுபோல் முதல்வர் பதவி மீது குறி வைத்து ஒவ்வொரு சம்பவத்திற்கும் தம்பி ராமையாவைப் பற்றி புகார் சொல்லிக் கொண்டிருப்பதுகூட நகைச்சுவைதான். அனைத்துக் கல்லூரிகள் என்றில்லை.. வேலை பார்க்கும் இடங்களிலெல்லாம் இவரைப் போல யாராவது ஒருவர் நிச்சயமாக இருக்கத்தான் செய்வார்கள்.

ராசாமதியின் ஒளிப்பதிவு மிக அவசியமானதாக இல்லை. ஆனால் குறையில்லாமல் இருக்கிறது. ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். ‘வேகாத வெயிலில்’ பாடல் மட்டுமே ஞாபகம் இருக்கிறது. பின்னணி இசையில் அந்தந்த சூழலுக்கேற்றபடி இசையமைத்து நம்மைக் காப்பாற்றியிருக்கிறார்.

சமூகத்தில் நிலவும் ஜாதி பிரிவினைகள், பள்ளி கல்லூரிகளில் தலை தூக்கும் ஜாதிப் பேச்சுக்கள் இவற்றிற்கிடையே.. தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைகளையும் இத்திரைப்படம் சுட்டிக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது. அதே சமயம் படம் நெடுகிலும் அதீதமான பிரச்சார நெடி இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

இத்தனை அறிவுரைகளையும் கேட்கும் நிலையில் மாணவர்கள் இல்லையென்றாலும் சொல்ல வேண்டியது நமது கடமை என்பதால் இத்திரைப்படம் தனது சமூகப் பங்களிப்பை செய்திருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

காதல் என்பது எதற்காகவும், உறவுகள் என்பது எதற்காகவும் என்பது போல நாயகி ராஜ் பொன்னப்பாவின் வாழ்க்கையும், அவரது கூட்டுக் குடும்பமும் காட்டப்படுகிறது. கனி-ராஜ் பொன்னம்மாவின் மிக எளிய முறையிலான திருமணம் கவனத்தை ஈர்க்கிறது.. இதற்காகவே இயக்குநருக்கு ஒரு பாராட்டு..!

இறுதியில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள்.. பிணத்தை வைத்து பணம் சம்பாதிக்க முயல்கிறார்கள் என்பதுபோல இந்தப் படம் சுட்டிக் காட்டுவதுதான் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட். அந்தத் திரைக்கதையே இத்திரைப்படத்திற்குத் தேவையில்லாதது.

இதில்லாமல் தம்பி ராமையாவே மனம் திருந்தி பேசுவது போலவும், மாணவர்களே இந்தப் பிரச்சினையை சுமூகமாக பேசி முடிப்பது போலவும் வைத்திருந்தால் இதைவிட சிறப்பான கிளைமாக்ஸாக இருந்திருக்கும்.

Our Score