full screen background image

“லதா ரஜினிதான் பொய் சொல்கிறார்…” – ஆட் பியூரா நிறுவனம் மறுபடியும் குற்றஞ்சாட்டுகிறது..!

“லதா ரஜினிதான் பொய் சொல்கிறார்…” – ஆட் பியூரா நிறுவனம் மறுபடியும் குற்றஞ்சாட்டுகிறது..!

‘கோச்சடையான்’ கடன் விவகாரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினி பொய் சொல்வதாக சம்பந்தப்பட்ட ஆட் பியூரா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

‘கோச்சடையான்’ படத்தின் தயாரிப்புச் செலவிற்காக அதன் தயாரிப்பு நிறுவனமான மீடியா ஒன் நிறுவனம் தங்களிடத்தில் 10 கோடி ரூபாயை கடனாகப் பெற்றதாகவும், அந்தக் கடன் தொகை இப்போதுவரையிலும் முழுமையாகச் செலுத்தப்படவில்லை என்றும் இந்தக் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்திருந்த லதா ரஜினிகாந்த் இதில் இப்போது தலையிட மறுப்பதாகவும் சென்னை எழும்பூரை சேர்ந்த ஆட் பியூரா நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பே புகார் சொல்லியிருந்தது.

சில நாட்களுக்கு முன்பாக மீண்டும் பத்திரிகையாளர்களைச் சந்தித்த இந்த நிறுவனத்தின் உயரதிகாரிகள், இந்த விஷயத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தலையிட்டு தங்களுக்குரிய பணத்தை பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இவர்களின் இந்த பத்திரிகை பேட்டிக்கு பதிலடியாக லதா ரஜினிகாந்த் இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டார். அதில்,  “கோச்சடையான்’ படத்திற்காக மீடியா ஒன் நிறுவனத்திற்கு ஆட் பியூரா நிறுவனம், 10 கோடி ரூபாயை கடனாக அளித்தது. ஆனால் அப்போதே வட்டிக்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாயைக் கழித்துக் கொண்டுதான் தந்தது.

மேலும் 20 கோடி ரூபாய் கடன் கொடுப்பார்கள் என்ற உத்திரவாதத்தில் வாங்கிய கடனில் 2.4 கோடி பணம் ஆட் பியூராவுக்கு திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால் அவர்கள் சொன்னபடி அந்தக் கடனை கொடுக்கவில்லை. மேலும் முதலில் வாங்கிய கடனில் 5.6 கோடி ரூபாயும் திரும்ப செலுத்தப்பட்டுவிட்டது.

ஆட் பியூரா நிறுவனத்தினர் சமூகத்தில் எனக்கிருக்கும் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி வருகிறார்கள். அவர்கள் என் மீது சுமத்தியிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டும். தொடர்ந்து என் மீது வீண் பழி சுமத்தி எனக்கு அவப்பெயர் தேடித் தருவதால் அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போகிறேன்..” என்றும் எச்சரித்துள்ளார்.

லதா ரஜினியின் அறிக்கைக்கு பதிலளித்துள்ள ஆட் பியூரா நிறுவனம், லதா ரஜினிகாந்துதான் வேண்டுமென்றே பொய்களைப் பரப்புவதாகவும், அவருக்கெதிரான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இது பற்றி ஆட் பியூரா நிறுவனத்தைச்  சேர்ந்த நிர்வாகி அபிர்சந்த் நஹார் பேசும்போது, “லதா ரஜினிகாந்த் முதலில் என்னை தெரியவே தெரியாது எனக் கூறினார். ஆனால் தற்போது என் மீது வழக்கு தொடரப் போவதாகச் சொல்லியிருக்கிறார்.  ஏற்கெனவே அவர் கொடுத்த காசோலைகள் பவுன்ஸ் ஆகியுள்ளது. பிரச்சினையை சுமுகமாக பேசித் தீர்க்கவே நாங்கள் முயன்று வருகிறோம். வரும் 31-ஆம் தேதிக்குள் அவர்கள் தரப்பில் இருந்து பணம் தரவில்லையென்றால் நாங்கள் நீதிமன்றம் செல்வதற்கு தயாராக இருக்கிறோம்..” என்று கூறினார்.

மேலும் இது தொடர்பாக ஆட் பியூரா நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், “லதா ரஜினிகாந்த் மீடியா ஒன் நிறுவனம் எங்களிடம் வாங்கிய 10 கோடி பணத்தை திரும்பச் செலுத்துவதாக ஆட் பியூரா நிறுவனத்துக்கு உத்தரவாதக் கடிதம் அளித்துள்ளார். எங்களுக்குள் நாங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் அவர்களுக்கு மேற்கொண்டு 20 கோடி ரூபாயை கடனாகத் தருவது பற்றி நாங்கள் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

அதே போல படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை எங்களுக்குத் தருவதாகச் சொல்லியிருந்த நிலையில் எங்களுக்கே தெரியாமல் ஈராஸ் நிறுவனத்திற்கு விற்றுவிட்டார்கள். வாங்கிய 10 கோடி ரூபாயில், 2014 நவம்பர்வரை 4 கோடியே 70 லட்சம் ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளது. வட்டியுடன் சேர்த்து இன்னமும் 6 கோடியே 84 லட்சம் ரூபாய் தர வேண்டியுள்ளது.

இந்தப் பணத்தை திரும்பத் தராமல் லதா ரஜினிகாந்துதான் எங்கள் மீது பொய்களைப் பரப்புகிறார். முன்னதாக இது குறித்து லதா ரஜினிகாந்த் பெங்களூரு மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களிலும் தொடர்ந்த வழக்குகளில் அவருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

எங்களிடம் அவருக்கு எதிரான ஆவணங்கள் உள்ளன. கூடிய விரைவில் லதா ரஜினி இது சம்பந்தமாக பொய்யான தகவல்களை சொல்லி வருவதை நாங்கள் அம்பலப்படுத்துவோம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

படமே ஓடி முடிஞ்சிருச்சு..! அந்தப் படத்தைவிட இப்போ ஓடுற இந்தப் படமே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு..! சட்டுப்புட்டுன்னு கமுக்கமா பேசி முடிச்சுட்டுப் போங்கப்பா.. பிஸினஸ் விஷயத்தை ஏன் ரோட்டுக்கு கொண்டு வந்து அசிங்கப்படுத்துறீங்க.. அசிங்கப்பட்டுக்குறீங்க..?

Our Score