‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் டப்பிங் பேச மறுத்த நடிகை ஊர்வசி

‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் டப்பிங் பேச மறுத்த நடிகை ஊர்வசி

1990-ம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம் ‘மைக்கேல் மதன காமராஜன்’. நடிகர் கமல்ஹாசன் நான்குவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த இத்திரைப்படம் நகைச்சுவையில் கொடி கட்டிப் பறந்ததையடுத்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இதற்குப் பின்னர் வந்த அனைத்து நகைச்சுவை படங்களுக்கும் ஒரு டிரெண்ட் செட்டராக இத்திரைப்படம் அமைந்தது.

தற்போது இத்திரைப்படத்தின் உருவாக்கம் பற்றி நடிகர் கமல்ஹாசன் தனது அலுவலக முகநூல் பக்கத்தில் மிக நீளமாக எழுதியிருக்கிறார்.

இது பற்றி அவர் குறிப்பிடும்போது, “நீங்கள் குறிப்பிடும் ‘மைக்கேல் மதன காமராஜன்’ பற்றி சொல்வதானால் நகைச்சுவையை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் வணிகமாக்கலாம். ஆனால் அதற்காக நீங்கள், பல நேரங்களில் கண்ணீர் சிந்த தயாராக இருக்க வேண்டும். ஒருவேளை உங்களின் வியர்வை அதற்காக ரத்தமாகக் கூட மாறலாம்.

அப்படி செய்தால் உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்கள் உங்கள் நகைச்சுவையால் சிரிப்பார்கள். ஒரு கோமாளியைக் கேளுங்கள். சிரிக்க வைக்கத் தான் படும் வேதனையை அவர் உங்களுக்குச் சொல்வார். எதுவுமே இங்கு எளிதானது கிடையாது.

கொஞ்சம் சிம்பிளாக சொல்வதானால் ஒரு பந்தை சும்மா சமநிலைப்படுத்தினால் உங்களுக்கு கொஞ்சம்கூட கை தட்டல் கிடைக்காது. ஆனால், அதுவே சில தந்திரங்களைப் பயன்படுத்தி பாருங்கள்… உங்களுக்கு கைதட்டல்கள் கிடைக்கும். இது போன்ற எல்லாவற்றையும் அறிந்துகொண்டு இன்னும் தைரியமாக இருக்க வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு திரைப்படத்தை தயாரிப்பதில் சில நுட்பங்கள் கிடைக்கின்றன, நீங்கள் கூகிள் செய்து உங்கள் வழியைக் கண்டுபிடிக்கலாம் அல்லது வெளியேறலாம், ஆனால், இது வெறுமனே தேடினால் கிடைக்கக் கூடியது.

இந்தப் படத்தில் திரிபுரசுந்தரியாக நடித்திருக்கும் ஊர்வசி ஒரு மலையாளியாக இருந்தும் பாலக்காடு உச்சரிப்பை முழுமையாக அறிந்தவரில்லை. அவர் மலையாளத்தையும், தமிழையும் கலந்து பேசுவார். ஆனால் அந்த இரண்டுக்கும் நடுவில் வரும் அளவுக்கு பேச வேண்டும். அதைச் சொல்லிக் கொடுத்துதான் வரவழைத்தோம்.

படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாக திருவல்லிக்கேணியில் உள்ள அந்த வீட்டில் ஊர்வசியுடன் ஒத்திகையும் பார்த்திருந்தோம். அந்தத் திரிபு, காமேஸ்வரன் தொடர்பான காட்சிகள் இயக்குநர், நான், மற்றும் உதவி இயக்குநர்கள்.. குறைந்த கேமிராக்களுடன் இருந்த கேமிராமேன் இவர்களுடன்தான் அந்தக் குறுகிய இடத்தில் படமாக்கினோம்.

இதனால் ஊர்வசி முதலில் படத்தில் டப்பிங் பேசவே மறுத்துவிட்டார். நான்தான் அவரை வற்புறுத்தி டப்பிங் பேச வைத்தேன். டப்பிங்கின்போது ஒவ்வொரு நாளும் நான் அவருடன் இருந்து அவருக்கு வசனங்களை பேச வைத்தேன். அவர் நிச்சயமாக இதில் ஜெயிப்பார் என்று எனக்குத் தெரியும். இதனால்தான் அவர் எங்களது அடுத்த படமான ‘மகளிர் மட்டும்’ படத்தில் நாயகிகளில் ஒருவரானார்.

அந்த வீட்டில் ஒத்திகை நடந்து கொண்டிருக்கும்போது அந்த வீட்டில் ஒரு எலிப் பொறியைப் பார்த்தேன். அதைப் பார்த்தவுடன் எனக்கு ஒன்று தோண.. அதையும் புதிதாக ஸ்கிரிப்ட்டில் சேர்த்தேன்.

சில நேரங்களில் நான் செட்டுகளை அமைத்துதான் படமாக்க வேண்டி வரும். ஆனால் இந்தப் படத்திற்கு எனது சங்கீத வாத்தியாரின் வீட்டில்தான் படப்பிடிப்பு நடந்தது.

நான் மயிலாப்பூர் இந்து உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது எனக்கு சமஸ்கிருத ஆசிரியராக இருந்தவரின் வீடு அது. பள்ளியில் படிக்கும்போது சமஸ்கிருத ஆசிரியர்களைப் பார்த்து கிண்டல் செய்து கொண்டேயிருப்போம்.

அதற்கு முற்றிலும் முரண்பாடாக பல வருடங்கள் கழித்து அவருடைய வீட்டிலேயே நான் படப்பிடிப்பு நடத்த வேண்டி வந்தது. இது எனக்கு மிகவும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

இந்தப் படம் ஒரு மேஜிக் என்றால் அதற்கு காரணம் கிரேஸி மோகன், சிங்கீதம் ஸார், இளையராஜா, கடைசியாகத்தான் நான்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

Our Score