full screen background image

காலையில் சந்திப்பு; மாலையில் திருமணம்-நடிகை துளசியின் கல்யாண சுவாரஸ்யம்..!

காலையில் சந்திப்பு; மாலையில் திருமணம்-நடிகை துளசியின் கல்யாண சுவாரஸ்யம்..!

இப்போது பல படங்களில் அழகிய அம்மாவாக வலம் வருபவர் நடிகை துளசி. ‘சகலகலாவல்லவனி’ல் கமலின் தங்கையாகவும் ‘நல்லவனுக்கு நல்லவனி’ல் ரஜினியின் மகளாகவும் நடித்தவர் இவர்தான். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று சுமார் 300 படங்களில் நடித்திருக்கும் துளசி, மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோதே திரையில் முகம் காட்டியவர். 35 ஆண்டுகளுக்குப்பின் இப்போது வெளிவரவுள்ள ‘சங்கராபரணம்’ தமிழ்ப் படத்தின் அறிமுக விழாவுக்கு சென்னை வந்தவர் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தார்.

உங்களது முதல் திரைப் பிரவேசம் பற்றி..?

நான் நடித்த முதல் படம் ‘பாகரி’ அப்போது எனக்கு ஒரு வயதுகூட ஆகவில்லை. அப்போது நான் மூன்று மாத குழந்தை. சாவித்திரியம்மாவை என் அம்மாவுக்குத் தெரியும். தான் நடிக்கும் படத்தில் ஒரு குழந்தை தேவைப்பட்டதை சொல்லி என்னைக் கேட்டுள்ளார் சாவித்திரியம்மா. படத்திற்கு தேவைப்பட்டது ஆண் குழந்தை. ‘இது பெண் குழந்தையாயிற்றே’ என்று சொல்லியிருக்கிறார் என் அம்மா. ‘அதனால் என்ன பரவாயில்லை. ஜட்டி போட்டு, ஆண் குழந்தையாக்கி விடுவோம்..’ என்று வாங்கிப் கொண்டாராம் சாவித்திரியம்மா. அப்படி நான் நடித்த படம்தான் ‘பாகரி’. இதெல்லாம் என் அம்மா சொல்லித்தான் எனக்கே தெரியும். ஒன்றரை வயதில் அடுத்தப் படம். பாடல் காட்சியில் தோன்றினேனாம். பிறகு மூன்று வயதில் ஒரு படம். இப்படிப்பட்ட சூழலில் சற்று வளர்ந்த பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பிஸியான குழந்தை நட்சத்திரம் ஆகிவிட்டேன்.

IMG (13)

இதுவரையிலும் எத்தனை படங்களில் நடித்திருக்கிறீர்கள்?

நான் நடித்தவை 316 படங்கள் என்றால் சுமார் 100 படங்களில் குழந்தை நட்சத்திரம்தான். பிஸியாக இருந்தேன். எந்த அளவுக்கு என்றால் ஸ்கூலுக்குக்கூட போக முடியாத அளவுக்கு. பிஸியாக இருந்தேன். நிஜம்தான், நான் பள்ளிக்கூடமே போகவில்லை.

பின்னர் எப்படி படிக்கக் கற்றுக் கொண்டீர்கள்…?

என் சகோதரிகளும் அண்ணாவும் கற்றுக் கொடுத்ததுதான் எல்லாம். அவர்கள் எல்லாரும் ஸ்கூல் போய் வருவார்கள். நான் படப்பிடிப்புக்கு போய் வருவேன். அன்று காலை முதல் ஸ்கூலில் படித்ததை மாலையில் எனக்கு சொல்லித் தருவார்கள். இப்படியே தமிழ், தெலுங்கு, இங்கிலீஷ் எல்லாம் எழுதக் கற்றுக் கொண்டேன்.

குழந்தையாக கதாநாயகியாக.. எத்தனை மொழிகளில்..?

தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிகளிலும் குழந்தையாக நடித்திருக்கிறேன். தமிழில் மட்டும் குழந்தையாக சுமார் 40 படங்களில் நடித்திருக்கிறேன். கன்னடத்தில் மட்டும்தான் குழந்தையாக நடிக்கவில்லை. எல்லா மொழிகளிலும் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறேன்.

எப்போது அம்மாவாக நடிக்க ஆரம்பித்தீர்கள்?

எனக்குத் திருமணமாகி ஆண் குழந்தை பிறந்து அவன் சற்று வளரும்வரை நடிப்பதை நிறுத்தியிருந்தேன். அதன் பிறகு அம்மா வேடங்களில் நடிக்க தொடங்கினேன். நல்ல பெயரும் கிடைத்தது. தமிழில் நான் முதலில் அம்மாவாக நடித்த படம் ‘பிள்ளையார் தெரு கடைசி வீடு’ அதன் பிறகு’ஈசன்’ , ‘மங்காத்தா’ ‘ஆதலால் காதல் செய்வீர்’ ‘சுந்தரபாண்டியன்’ ‘பாண்டியநாடு’ போன்ற படங்களில் நடித்தேன்.

குறிப்பாக ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தில் நான் நடித்தது மறக்க முடியாதது. அதில் நான் ஏற்ற ‘செல்லம்மா’ கேரக்டர் பலராலும் பாராட்டப்பட்டது. எங்களுக்கு பாட்டெல்லாம் உண்டு.இப்போதெல்லாம் அப்பா, அம்மா கேரக்டரை யாரும் பெரிதாக காட்டுவது இல்லை. அதில் நான் படம் முழுக்க வருவேன். ரசிக்கும்படி பார்ப்பவர் நெகிழும்படி அன்பையே பொழியும் கேரக்டர் அது.

இப்போது நடித்துவரும் படங்கள்…?

தியாகராஜன் இயக்கும் ‘சாகசம்’ படத்தில் எனக்கு நல்ல வேடம். ‘ஜீரோ’வும் நல்ல வாய்ப்புதான். ஒரு ஃப்ளாட்டில் நடக்கும் கதை. சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலின் அம்மாவாக ‘ஆம்பள’ படத்தில் நடிக்கிறேன். மகேஷ்பாபு நடிக்கும் தெலுங்கு படத்தில் ஸ்ருதிஹாசனின் அம்மாவாக நடிக்கிறேன். ஸ்ருதிஹாசன் திறமையான நடிகை என்பதை நேரில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

கமல், ரஜினியுடன் நடித்த அனுபவங்கள்?

‘சகலகலா வல்லவன்’ படத்தில் நடித்தபோது நான் சிறு பெண். கமல் சாரின் தங்கையாக வருவேன். படத்தில் முக்கிய கேரக்டர். அதற்கு முன் குழந்தையாக பல படங்களில் நடித்திருந்தாலும் அவருடன் நடிக்கும்போது தயக்கம் பயம் இருந்தது. அவர் என் நடை, உடை, பாவனையெல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பெரிதும் ஊக்கம் தந்தார். உதவியாக இருந்தது.

அதேபோல ‘நல்லவனுக்கு நல்லவனில்’ ரஜினி சாருடன் நடிக்கும்போது பயந்தேன். முதல் நாள் ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்த அந்தப் படப்பிடிப்பை மறக்க முடியாது. அவர் ‘குட்டி’ என அழைத்து சகஜமாக்கிக் கொண்டு பழகினார். சௌகரியமாக்கி என் தயக்கத்தைப் போக்கினார். அது மறக்க முடியாதது.

உங்களது குடும்பம் பற்றி..?

நான் ஷீரடி சாய்பாபாவின் பக்தை. என் கணவர் பெயர் ஷிவமணி. கன்னடத்தில் பிரபல இயக்குநர். இதுவரை 26 படங்களை இயக்கியுள்ளார். எங்கள் திருமணம் மறக்க முடியாதது.

அவர் அப்போது சாதாரண நிலையில் இருந்தவர்தான். தேவராஜை வைத்து ‘மதர் இந்தியா’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். நிரோஷாதான் கதாநாயகி. நான் அந்தப் படத்தில் கதாநாயகனுக்கு சிறு வயது அம்மாவாக நடித்தேன். காலை 8 மணிக்கு படப்பிடிப்புக்குப் போனேன். 11 மணிக்கு ஷிவமணி ‘நாம திருமணம் செய்துக்கலாமா?’ என்றார்.

எங்களுக்குள் காதல் என்றெல்லாம் இல்லை. ‘முதலில் திருமணம் செய்துக்கலாம்.. பிறகு காதலிக்கலாம்’ என்றார். அவர் அவசரப்படுகிறவரோ உணர்ச்சிவசப்படுகிறவரோ இல்லை. அவரைப் பற்றி எல்லா உண்மையையும் பகிர்பவர். தன் அம்மா வீட்டு வேலை செய்பவர் என்பதைக்கூட மறைக்காமல் சொல்பவர். அவர் தன் விருப்பத்தைச் சொன்னபோது திரையுலகில் அவரும் வளர வேண்டிய அளவுக்கு ஆரம்ப நிலையில்தான் இருந்தார். பெரிய அளவுக்கு வசதிகளும் இல்லை. அவர் எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைப்பவர். அவரும் பாபா பக்தர். அதனால் என்னால் மறுக்க முடியவில்லை.

மாலையில் கோயிலுக்கு கூப்பிட்டார். அது மல்லேஸ்வரம் பாபா கோவில். அங்கேயே தாலி கட்டினார். இப்படி 1994 அக்டோபர் 28-ல் எங்கள் திருமணம் நடந்தது. இது ஒரு மாதம் கழித்துதான் வீட்டுக்கே தெரியும். வீட்டில் எல்லாரும் சந்தோஷப்பட்டனர். இந்தக் கதையை இப்போது சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ‘திருமணம், குடும்பம் என்பது ஒரு நாளில் முடிவு செய்கிற விஷயமா..?’ என்பார்கள். ஆனால் என் மனம் அன்று எடுத்த முடிவு இன்றும் சரியாகவேபடுகிறது. என மகன் சாய்தருண் பிபிஏ முதலாம் ஆண்டு படிக்கிறான். எனக்கு எந்த குறையும் இல்லை. திருமணத்துக்குப் பிறகு 20 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். எந்த சினிமாவிலும் வராதது எங்கள் கதை.

35 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்ப் படமாக வெளிவரவுள்ள ‘சங்கராபரணம்’ பற்றி?

‘சங்கராபரணம்’ படத்தில் நடித்தபோது எனக்கு 10 வயது இருக்கும். அதில் நான் ஒரு பையனாக வருவேன். க்ளைமாக்ஸ் வரும்வரை வருகிற முக்கிய கேரக்டர் அது. மீண்டும் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளிவருவது பற்றி மகிழ்ச்சி. உங்களைப் போல படத்தைப் பார்க்க நானும் ஆவலோடு காத்திருக்கிறேன் .

Our Score