1982-ம் ஆண்டு ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில், இயக்குநர் எஸ்.பி.முத்துராமனின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சகலகலாவல்லவன்’.
படம் 175 நாள் விழா கொண்டாடி, சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்திற்குப் பின்னர்தான் நடிகர் கமல்ஹாசன் தனது சம்பளத்தை 10 லட்சமாக உயர்த்தினார்.
இந்தப் படத்தின் 100-வது நாள் விழாவின்போது படக் குழுவினர் அனைவருக்கும் பட்டு சேலை, பட்டு வேஷ்டியை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தாராம் கமல்ஹாசன்.
படத்தில் கமல்ஹாசனின் தங்கையாக நடித்த நடிகை துளசி, சமீபத்தில் ஹிந்து தமிழுக்கு அளித்த பேட்டியில் இதைக் கூறியிருக்கிறார்.
இது பற்றி துளசி பேசும்போது, “சகலகலாவல்லவன்’ படத்தில் நடிக்கும்போது நான் ரொம்ப சின்னப் பொண்ணுதான். விவரம் போதாத வயதுதான். கமல் ஸார் எனக்கு ‘அப்படி உக்காரணும்.’ ‘இப்படி நடிக்கணும்’ன்னெல்லாம் நிறைய அட்வைஸ் செய்வாரு. அதே மாதிரி நிறைய கலாட்டாவும் செய்வாரு.
படத்துல வர்ற ‘நிலா காயுது’ பாடலுக்கு முன்னாடி காட்சில வீட்ல எல்லாரும் வரிசையா படுத்திருப்போம். அப்போ கமல் ஸார் வந்து அம்பிகா அக்காவை ரகசியமா கூப்பிடுவாரு.
இந்தக் காட்சியைப் படமாக்கும்போது கமல் ஸார் என்கிட்ட ரகசியமா “நான் கூப்பிட்டவுடனே நீ எந்திரிச்சு வந்திரு…” என்றார். நானும் அவர் சொன்ன மாதிரியே அவர் கூப்பிட்டவுடனே எந்திரிச்சு வந்தேன்.
எஸ்.பி.முத்துராமன் ஸார் பதறிட்டாரு. “ஐயோ குரங்குகளே என்ன பண்ணித் தொலையறீங்க. உன்னை யார் வரச் சொன்னது..? நீ தங்கச்சிம்மா..! அவர் கூப்பிட்டது அம்பிகாவை.. கதையையே கெடுக்குற..” என்று திட்டினார். அப்பத்தான் எனக்கு கமல் ஸார் வேணும்ன்னே சொன்னாருன்னு தெரிஞ்சது. நான் அந்தளவுக்கு அப்பாவியாய் இருந்தேன்.
அதே படத்துல பிற்பாதில நான் மாடர்ன் கேர்ளா வருவேன். அதுக்கு நான் போட வேண்டிய டிரெஸ்ஸையெல்லாம் கமல் ஸார்தான் வாங்கிட்டு வந்து எனக்குக் கொடுத்தார்.
அதே மாதிரி அந்தப் படத்தோட 100-வது நாள் விழால எங்க எல்லாருக்கும் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை தன் சொந்தக் காசுல வாங்கிக் கொடுத்து எங்களை கவுரவப்படுத்தினாரு.. நான் என் வாழ்க்கைல மறக்க முடியாத படமா இன்னிக்கி வரைக்கும் ‘சகலகலாவல்லவன்’ இடம் பிடிச்சிருக்கு..” என்று சொல்லியிருக்கிறார் நடிகை துளசி.