full screen background image

நடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீர் மரணம் – இந்தியத் திரையுலகம் அதிர்ச்சி..!

நடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீர் மரணம் – இந்தியத் திரையுலகம் அதிர்ச்சி..!

இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரினி நடிகை என்று புகழப்படும் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு 11.30 மணிக்கு துபாயில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 54.

தன்னுடைய உறவினரான மோகித் மார்வாவின் திருமணத்திற்கு ஸ்ரீதேவி தனது குடும்பத்தினருடன் துபாய் சென்றிருந்தார். திருமணம் முடிந்த பின்பும் ஓய்வுக்காக ஸ்ரீதேவி தனது மகள் குஷியுடன் துபாயிலயே தங்கியிருந்தார்.

அவருடைய கணவரான தயாரிப்பாளர் போனி கபூர் நேற்று மாலை மும்பையிலிருந்து துபாய் சென்று ஸ்ரீதேவியை சந்தித்தார். இரவு உணவுக்காக தயாராக குளியலறைக்குச் சென்ற ஸ்ரீதேவி நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால் போனி கபூர் குளியலறை கதவைத் தட்டிப் பார்த்தும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.

குளியலறை தொட்டியில் தண்ணீருக்குள் மயங்கிய நிலையில் ஸ்ரீதேவி இருந்திருக்கிறார். உடனே அவசரமாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் அங்கே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஸ்ரீதேவியின் மரணச் செய்தி கேட்டு இந்தியத் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டது. தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்களும் நம்ப முடியாமல் திகைத்துப் போயினர்.

ஸ்ரீதேவி 1963-ம் ஆண்டு ஆகஸ்டு 13-ந் தேதி விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அய்யப்பன் – ராஜேஸ்வரி தம்பதிக்கு மகளாக பிறந்தார்.

தனது 4 வயதில், சாண்டோ சின்னப்பத் தேவர் தயாரித்து, எம்.ஏ.திருமுகம் டைரக்டு செய்த ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 1967-ம் ஆண்டு வெளியான அந்த படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா தென்னிந்திய மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை அவருக்கு பெற்று தந்தது. இதைத் தொடர்ந்து எம்ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த ‘நம் நாடு’ படத்தில் குழந்தை  நட்சத்திரமாக  நடித்தார். 

பிறகு 1975ம் ஆண்டு திரைக்கு வந்த, ‘ஜூலி’  இந்தி படத்திலும்  குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ‘என் அண்ணன்’, ‘குமார சம்பவம்’ உள்ளிட்ட  மேலும் பல படங்களில் அவர் குழந்தை  நட்சத்திரமாக நடித்தார்.

இப்படி பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவியை, 1976-ம் ஆண்டு ‘மூன்று முடிச்சு’ படம் மூலம் கதாநாயகியாக  அறிமுகப்படுத்தினார் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அறிமுகப்படுத்தினார்.

கதாநாயகியாக அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வெற்றி படமாக அமைந்ததால், ஸ்ரீதேவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது.

முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும், முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் அவர் இருந்தார். அவர்  நடித்த ‘16 வயதினிலே’, ‘மூன்றாம் பிறை’, ‘கல்யாண ராமன்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘பிரியா’, ‘ஜானி’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘வாழ்வே மாயம்’   போன்ற பல படங்கள் வெள்ளி  விழா கொண்டாடியதில் தமிழில் முன்னணி நடிகையானார்.

80-களில் தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள்  அனைவருடனும் அவர் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடத்திலும் ஏராளமான படங்களில் நடித்தார்.

1976-ல் தொடங்கி 82-கள் வரை தென்னிந்திய படங்களில்  ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீதேவி, புகழின்  உச்சிக்கு சென்றார். இதையடுத்து இந்தி பட வாய்ப்புகள் அவருக்கு வர துவங்கியது.

அவருடைய முதல் இந்தி படம், ‘சோல்வா சாவன்’ தோல்வியை தழுவினாலும், 2-வதாக வெளியான ‘ஹிம்மத்வாலா’ மாபெரும் வெற்றியை பெற்றது. ஸ்ரீதேவிக்கு இந்தி திரைப்பட உலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும், திருப்புமுனையையும் பெற்று தந்த படம், அது. 

நாகின்’, ‘சாந்தினி’, ‘சால் பாஸ்’, மிஸ்டர்  இந்தியா’, ‘லம்ஹே’ உள்பட இந்தியில்  இவர் நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றன.  ‘மூன்றாம் பிறை’ இந்தியில் ‘சத்மா’ என்ற பெயரில் உருவானபோது, அந்த படத்திலும் ஸ்ரீதேவி நடித்தார். அதில் அவருக்கு பெரும் புகழும், பாராட்டும் கிடைத்தது. 

அன்றைய  காலகட்டத்தில் நடிகை ஹேமமாலினிதான் பாலிவுட்டின் கனவுக் கன்னியாக திகழ்ந்தார். அந்த  இடத்தை ஸ்ரீதேவி மிக குறைவான காலத்திலேயே எட்டிப் பிடித்தார். இந்தியில் 25 படங்களுக்கு மேல் நடித்து நம்பர்-1 கதாநாயகியாக திகழ்ந்தார்.

தமிழ், தெலுங்கு உள்பட தென்னிந்திய சினிமாவில் 6  ஆண்டுகள் ஹீரோயினாக  நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். பிறகு 15 ஆண்டுகள் இந்தி  சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்தார்.  250-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி.

எம்.ஜி.ஆர்.,  என்.டி.ஆர்., சிவாஜி, கிருஷ்ணா, கமல், ரஜினி முதல் விஜய்வரையும் இந்தியில் அமிதாப்பச்சன்,  தர்மேந்திரா முதல் சல்மான்கான்வரையிலும் அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகர்களுடன்  இவர்  நடித்துள்ளார்.

ஸ்ரீதேவி தென்னிந்திய மொழி படங்களில் புகழின் உச்சத்தில் இருந்தபோது, அவருடைய தந்தையை இழந்தார். இந்தி பட உலகில் உச்சத்தில் இருந்தபோது ஸ்ரீதேவிக்கு ஆதரவாக இருந்தவர், நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. அவரைத்தான் ஸ்ரீதேவி திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று இந்தி பட உலகில் கிசுகிசுக்கப்பட்டது. மிதுன் சக்கரவர்த்தியின் முதல் மனைவி சம்மதிக்கவில்லை என்பதால் அந்தக் காதல் முறிந்து போனது.

பின்பு ‘மிஸ்டர் இந்தியா’ படத்தின் தயாரிப்பாளரும், நடிகர் அனில் கபூரின் அண்ணனுமான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

திருமணத்திற்கு பிறகு 14 ஆண்டுகள் கழித்து ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படத்தின் மூலம் ஸ்ரீதேவி திரையுலகுக்கு மறுபிரவேசம் செய்தார். சென்ற ஆண்டில் ‘மாம்’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார். இப்போது ஷாருக்கானுடன் இணைந்து ‘ZERO’ என்கிற ஹிந்தி திரைப்படத்தி்ல் நடித்து முடித்திருக்கிறார்.

பல வருடங்களுக்குப்பின் ஸ்ரீதேவி, ‘புலி’ என்ற தமிழ் படத்தில் நடித்தார். விஜய் கதாநாயகனாக நடித்த அந்த படத்தில், ஸ்ரீதேவி மகாராணியாக நடித்து இருந்தார். அதுவே அவர் நடித்த கடைசி தமிழ்ப் படம்.

தனது நடிப்புக்காக தமிழ்நாடு, ஆந்திரா மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், 4 முறை ‘பிலிம் பேர்’ விருதையும் பெற்றவர் ஸ்ரீதேவி. கலைத் துறையில் இவர் ஆற்றிய பணிக்காக, 2013-ம் ஆண்டு மத்திய அரசு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி கவுரவித்தது.

ஸ்ரீதேவி 50 வருடங்களாக இந்திய திரையுலகில் முடிசூடா ராணியாக வாழ்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருந்தார்.

அவருடைய மறைவுக்கு இந்திய திரையுலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது. 

Our Score