இயக்குநராகிறார் நடிகை சிம்ரன்..!

இயக்குநராகிறார் நடிகை சிம்ரன்..!

தனது 'சிக்'கென்ற இடையழகினால் முதலில் தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்த சிம்ரன், பின்பு தேர்ந்த நடிப்பாலும், தொழில் திறமையாலும் தமிழ்ச் சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் கோலோச்சி நின்றவர்.

நடிப்பின் மீது இருந்த அதீத ஆர்வத்தின் காரணமாக திருமணத்திற்கு பிறகும் நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்பொழுது சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிம்ரன். ‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் ‘Logo’வை இன்று வெளியிட்டார் சிம்ரன்.

இது தொடர்பாக பேசிய நடிகை சிம்ரன், “எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. என் கணவர் தீபக்குடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க அதுவே காரணமாய் இருக்கிறது. நான் நடிகையாக இருந்த அனுபவமும் எனது சின்னத்திரை நிகழ்ச்சிககளை தயாரித்த அனுபவமும் இந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணத்திற்கு உறுதுணையாய் இருந்தது.

எனது இந்த முயற்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் மற்றும் நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள். எனது ரசிகர்கள் எனக்களித்த ஆதரவிற்கும் நன்மதிப்பிற்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சினிமாவின் மீது எனக்கிருக்கும் ஆர்வமே என்னை படங்கள் தயாரிக்கவும் மற்றும் இயக்கவும் உந்துதலாய் உள்ளது. சினிமாவின் தரத்தை அடுத்த இடத்திற்கு முன்னேற்ற புது புது திறமைகள் அறிமுகப்படுத்த வேண்டியிருப்பதை உணர்கிறேன்.

எனது நிறுவனத்தின் சார்பில் இந்த வருடம் இரண்டு படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இவையிரண்டுமே ஒன்றிற்கு ஒன்று வித்தியாசமான கதை களத்தை உடையதாய் இருக்கும். எனது முயற்சிகளை எப்போதுமே ரசிகர்கள் ஆதரித்ததுண்டு. தயாரிப்பாளர், இயக்குநர் என்கிற எனது இந்த புதிய முயற்சியையும் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.." என்று தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.