full screen background image

நடிகை ரேவதியின் இயக்கத்தில் கஜோல் நடிக்கும் புதிய படம்..!

நடிகை ரேவதியின் இயக்கத்தில் கஜோல் நடிக்கும் புதிய படம்..!

நடிகை, இயக்குநர் என்று பன்முகத் திறமை கொண்ட நடிகை ரேவதி நடிப்போடு இயக்கமும் செய்து வருகிறார்.

ஏற்கெனவே, ‘மித்ர்’, ‘மை பிரெண்ட்’, ’பிர் மிலேங்கே’, ’கேரளா கஃபே’, ’மும்பை கட்டிங்’ உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருக்கும் ரேவதி தனது 5-வது இந்தி படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கான அறிவிப்பினை இன்று அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தில், பாலிவுட் நடிகை கஜோல் நாயகியாக நடிக்கிறார். இதனை, கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உற்சாகமுடன் ரேவதியுடன் இருக்கும் புகைப்படத்துடன் தெரிவித்திருக்கிறார். படத்திற்கு ‘தி லாஸ்ட் ஹூர்ரே’ என்று பெயரிட்டுள்ளனர்.

தயாரிப்பாளர்கள் சூரஜ் சிங், ஷ்ரத்தா அகர்வால் இருவரும் இணைந்து பிலைவ் ப்ரொடக்‌ஷன்ஸ் மற்றும் டேக் 23 ஸ்டூடியோஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.

இது குறித்து நடிகை ரேவதி பேசுகையில், “இதுவொரு நிஜ சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் படம். சுஜாதா என்கிற ஒரு தாய் அவள் சந்திக்கும் போராட்டங்களை, எப்படி புன்னகையுடன் எதிர்கொள்கிறாள் என்பதைச் சொல்லப் போகிறது. 

இந்த சுஜாதா கதாபாத்திரத்தில் நடிக்க கஜோல்தான் சரியான தேர்வாக இருப்பார் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்தப் படத்தில் சுஜாதாவின் பயணம் என் இதயத்துக்கு நெருக்கமானது. படத்திற்குக் கிடைக்கவிருக்கும் புகழையும், பெயரையும் கதையின்போதே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

நானும் தயாரிப்பாளர்களும் இந்தக் கதையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தபோது எங்கள் மனதில் முதலில் வந்தது கஜோல்தான். அவரது மென்மையான, துடிப்பான கண்களும், அழகான புன்னகையும், எதுவும் சாத்தியம் என்று உங்களை நம்ப வைக்கும். அதுதான் சுஜாதா கதாபாத்திரமும்கூட. இந்தக் கூட்டணியில், கஜோலுடன் ஒரு மனதைத் தொடும் கதையைச் சொல்வதில் ஆர்வமாக இருக்கிறேன்…” என்று கூறினார்.

இந்தப் புதிய படம் குறித்து கஜோல் பேசும்போது, “இந்த அழகிய பயணம் அனைவருக்கும் பகிரப்பட வேண்டிய ஒன்று. ரேவதி மேடம் இந்தப் படத்தை இயக்குவது எனக்கு அதிக நம்பிக்கையைத் தருகிறது..” என்றார். 

Our Score