பெற்றோர்கள் யாரென்று தெரியாமல் வளர்கின்றவர்களுக்கு அந்தப் பாசம் கிடைக்காத சோகம் மட்டுமல்ல.. இந்தியச் சமூகத்தில் அது எவ்வளவு பெரிய பிரச்சனைகளை தரும் என்பதை அனுபவித்தால்தான் தெரியும்.. இதில் சாதாரண ஆள் என்றில்லை.. பெரிய பிரபலங்கள் என்றில்லை.. அனைவருக்கும் ஒன்றுதான்..
‘திவ்யா ஸ்பந்தனா’ என்ற அழகான இயற்பெயர் இருந்தாலும் ‘குத்து ரம்யா’ என்ற சினிமா அடைமொழியோடு அழைக்கப்படும் நடிகை ரம்யா கர்நாடகவைச் சேர்ந்தவர். தற்போதைய மாண்டியா தொகுதியின் காங்கிரஸ் கட்சி எம்.பி. தற்போதைய தேர்தலிலும் அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
சென்ற முறை போட்டியிடும்போதே அவரை எதிர்த்து போட்டியிட்ட சில வேட்பாளர்கள், “அப்பன் பெயர் தெரியாதவர்” என்று ரம்யாவை குறிப்பிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். இன்னொரு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினரான சீனிவாஸ் என்பவர் “ரம்யா முறைப்படி பிறக்கவில்லை. டெஸ்ட் டியூப் பேபியாக பிறக்க வைக்கப்பட்டவர். அவரால் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. எனவே அவருக்கு வாக்களிக்காதீர்கள்..” என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்.. தன்னுடைய பிரச்சாரக் கூட்டத்தில் ஒரு முறை இதையெல்லாம் சொல்லி மைக் முன்பாகவே அழுதுவிட்டார் ரம்யா.
சென்ற தேர்தலின்போது தன்னுடைய தந்தை யாரென்பதை வேட்புமனுவில் சொல்லாமல் விட்டிருந்த ரம்யா இந்த முறை ஆர்.டி.சீனிவாசன் என்பவர்தான் தனது தந்தை என்று சொல்லியிருந்தார். இதுதான் இப்போது வேறு மாதிரியான பிரச்சினையை அவருக்கு உருவாக்கியிருக்கிறது.
“நான்தான் நடிகை ரம்யாவின் உண்மையான அப்பா…” என்று கூறி வெங்கடேஷ்பாபு என்பவர் பெங்களூர் சிட்டி சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளாராம். அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில் “மாண்டியா தொகுதியில் போட்டியிடும் ரம்யா, தன்னுடைய தந்தை ஆர்.டி.நாராயணன் என்றும் அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். மறைந்த ஆர்.டி.நாராயணன் ரம்யாவை தத்தெடுத்து வளர்த்தவர் மட்டுமே. ரம்யாவின் உண்மையான தந்தை நான்தான். அதை மறைத்து தவறான தகவலை வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் என்னை தந்தையாக ஏற்க மறுத்தால் உண்மையான தந்தை யார் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இதுநாள்வரையில் தெரிந்த தகவலின் அடிப்படையில் ரம்யா தனது தந்தை ஆர்.டி.நாராயணன் என்றே கூறி வந்தார். ஆனால் அவர் வளர்ப்பு தந்தைதான் என்பது மீடியாவில் கசிந்தாலும் மரபு வழி தந்தை யார் என்பதை ரம்யா இதுவரையில் தெரிவிக்கவில்லை. அரசியலுக்கு வராதவரையில் இதுவொரு பிரச்சினையாகவே இல்லை. ஆனால் அரசியலுக்கு வந்தவுடன் எல்லாவற்றையும் உரித்துப் பார்க்கும் குணமுடைய அரசியல்வாதிகள் இதனையே ஒரு பெரும் ஆயுதமாக எடுத்து ரம்யாவை குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னாள் கர்நாடக முதல்வரும், முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா ரம்யாவின் தாத்தாவாம்.. அவர்தான் ரம்யாவை காங்கிரஸ் கட்சியில் சேர்த்து ஒரே நாளில் லைம் லைட்டிற்கு கொண்டு வந்தவர். இந்த விஷயத்தில் அவரே அமைதியாக இருக்கிறார். அப்புறம் என்ன சொல்வது..?
இது குறித்து ரம்யா கூறும்போது ” அந்த வெங்கடேஷ் யார் என்றே எனக்கு தெரியாது. இது எதிர்கட்சிகளின் சதி..” என்று மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்.
அரசியல்ன்னு வந்துட்டாலே வீட்டுப் பிரச்சினையை உரிச்சு உப்புக் கண்டம் போட்டிருவாங்க நம்மூர் அரசியல்வாதிகள்.. அதிலும் பெண்களென்றால் கேட்கவே வேண்டாம்..! இந்த லட்சணத்தில் பெண்கள் அரசியலுக்கு வருவதில்லைன்னு புலம்பல் வேற..!
கொடுமைடா சாமி..!!!