full screen background image

“எல்லாரும் விஷால் பின்னால் ஒளிந்து நின்று பேசுகிறார்கள்..” – நடிகை ராதிகாவின் பேச்சு

“எல்லாரும் விஷால் பின்னால் ஒளிந்து நின்று பேசுகிறார்கள்..” – நடிகை ராதிகாவின் பேச்சு

நேற்று மாலை ராகவேந்திரா மண்டபத்தில் நடிகர் சரத்குமார் அணியினரின் அறிமுகக் கூட்டத்தில் நடிகை ராதிகா பேசியதில் இருந்து சில பகுதிகள் :

“விஷாலை ‘விஷால் ரெட்டி’ என்று அழைத்ததெல்லாம் ஒரு பிரச்சினையா..? இது தப்புன்னா மன்மோகன்சிங்கை எப்படி கூப்பிடுவீங்க..? அது மாதிரிதான். இதுவும். விஷாலோட அப்பா பெயர் ஜி.கே.ரெட்டி. அதனால்தான் அவரோட அப்பா பெயரை சேர்த்து ‘விஷால் ரெட்டி’ன்னு கூப்பிட்டேன். கார்த்தியை அவங்கப்பா சிவக்குமார் பெயரோட சேர்த்து ‘கார்த்தி சிவக்குமார்’ன்னு கூப்பிட்டேன். இதெல்லாம் ஒரு பிரச்சினையா..?

வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களை நாம் வாழ வைக்கலாம். ஆனால் சங்கத்தையே தாரை வார்த்துக் கொடுக்க முடியாது.

வடிவேலுவை எனக்கும் பிடிக்கும். என் மகனுக்கும் பிடிக்கும். அவரை கடைசியா விமானத்தில் சந்தித்தேன். அப்போ அவர்கிட்டே பேசும்போது சரத் நடிக்கப் போற படத்துல நடிக்கச் சொன்னேன். அதுக்கு அவர் ‘அரசியல்ல இருக்குறவங்களுக்கு உதவு செய்ய மாட்டேன்’னு சொன்னார். அதாவது அரசியல்வாதியா இருக்குறவங்க படத்துல நடிச்சு அவங்களுக்கு இவர் வாழ்வு கொடுக்குறாராம்.. இப்போ அவர் எங்கே? சரத் எங்கே..? வடிவேலுவை காணவில்லை என்று தமிழகம் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள்.

சிம்புவை மனதார வாழ்த்துறேன். ஹாட்ஸ் ஆப் சிம்பு. எங்களை புரிந்து கொண்டு எங்க அணிக்கு வந்திருக்கிறார். நான் நடிகர் சங்கத்துல உறுப்பினரா இருக்கேன். இப்போ நான் போட்டியிடலை. ஆனால் சங்கத்துல என்ன பிரச்சினைன்னாலும் உடனேயே ஓடி வந்து நிப்பேன். நீ வந்தியா..? செயற்குழு, பொதுக்குழுவுக்கெல்லாம் வந்தியா..? நான் ஒரு நாள்கூட உங்களை பார்க்கலியேப்பா..!

என்னை பார்த்தாலே ஓடுறாங்க. நான் கார்த்திகிட்டயே சொன்னேன்.. நீ எங்க ஓடுற.. இப்படி எவ்வளவு நாள்தான் ஓடுவ..? நான் அவர் வீட்ல உக்காந்துகிட்டே கேட்டேன். வா பேசுவோம்னேன்.. இல்ல.. அப்பாகிட்டயே பேசிக்குங்கன்னு சொல்லிட்டு ஓடினாப்புல..

பல பேரு இப்பவும் வெளிப்படையா சொல்லலைன்னாலும் போன் செஞ்சு பேசுறாங்க. வாழ்த்துறாங்க. சத்யராஜ், சூர்யால்லாம் கமிட்டில இருந்தாங்க. ஏதாவது பிரச்சனைன்னா விஜய்காந்த் வந்தாரு. பிரபு வந்தாரு. நீ வந்தியா..?

நடிகை ரோஜா இந்தப் பிரச்சினைக்காக நடுநிலமையோடு ஒரு அறிக்கை விட்டிருங்க. அதுக்காக அவங்களுக்கு நன்றி சொல்லிக்கிறேன். அவங்ககிட்ட நான் ஓட்டு கேக்கலை. நியாயத்துக்காக போராட வாங்க. பேச வாங்கன்னுதான் சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்.

1957-ல ஒரு பிரச்சினை வந்தப்போ கலைவாணர் வந்து, ‘ஏம்பா இப்படி சண்டை போட்டுக்குறீங்க. வெளில நாலு பேரு பார்த்தா என்ன நினைப்பாங்க?’ன்னு சொல்லி சமாதானப்படுத்தி வைச்சாரு.

இப்போ நீங்க என்ன பண்றீங்க..? எங்க இருக்கீங்க..? என்ன பேசுறீங்க..? அசிங்கமா இருக்கு. எதுக்கெடுத்தாலும் பிரஸ் மூலமாவே பேசுறீங்க. அங்கேயும் திரிச்சுப் போடுறதுக்கு பத்து பேர் இருக்காங்க. வேகமா எழுதுறாங்க.. ‘நோஸ் கட்’டுன்னு.. இதுல என்னங்க நோஸ் கட்டு இருக்கு..?

ஆச்சி மனோரமா ராத்திரி 11 மணிக்கு இறந்தாங்க. நியூஸ் கிடைச்சு நாங்க ரெண்டு பேரும் உடனேயே ஆஸ்பத்திரிக்கு போனோம். அங்கேயிருந்து வீட்டுக்குக் கொண்டு வந்துட்டு.. காலைல நாலரை மணிவரைக்கும் எல்லா ஏற்பாட்டையும் செஞ்சுட்டுத்தான் வீட்டுக்குப் போனோம்.

திரும்பவும் காலைல வந்தா அந்த அணியினர் அங்கேயே வாசல்ல உக்காந்துக்கிட்டு வாக்கு சேகரிக்கிறாங்க. என்னங்க நம்பர் கொடுங்க. எனக்கு ஓட்டுப் போடுங்கன்னு.. எனக்கு அசிங்கமா இருக்கு. அவமானமா இருந்துச்சு.. என்னது இது..? நம்ம ஆச்சி எத்தனை பேர்கூட நடிச்சிருக்காங்க. எத்தனை பேருக்கு பாட்டியா.. தாயா… அக்காவா… நடிச்சிருக்காங்க. நான் அன்னிக்கு சினிமாவை வெறுத்தேன். இது உண்மைங்க.

எங்கள் குடும்பத்தைப் பற்றி என்னென்னமோ பேசுகிறார்கள். வடக்கே ராஜ்கபூர் குடும்பம் மாதிரி தெற்கில் எம்.ஆர்.ராதா குடும்பம். எங்க குடும்பத்துல நிறைய ஆர்ட்டிஸ்ட் இருக்காங்க.. இதை எம்.ஆர்.ராதாவோட மகளன்ற திமிர்லயே சொல்றேன்..

ஒரு பிரச்சனை என்றால் எங்க குடும்பம் மொத்தமும் தெருவில் இறங்கி போராடுவோம். நீ வருவியா..? கார்த்தி நீ விஷால் பின்னாடி ஒளிஞ்சுக்கிட்டு நின்னு பேசுற..? பாவம் உன்னால அவன் திட்டு வாங்குறான். நீ முன்னாடி வா. வந்து பேசு..

நாசர் பாவம்.. எனக்கு நல்ல பிரெண்ட்டு. ஒரு வாக்கியம் கொடுத்தாலே அதுல பாதிதான் பேசுவார். கம்யூனிகேஷன் பிரச்சனை இருக்கு அவருக்கு. அவர் பாதி பேசினாலும் மீதியை நான்தான் பேசுவேன். ஆனால் எதிர்த்து பேசணும் என்கிற தன்மையுடையவர்.

எல்லாருமே விஷாலை முன்னிறுத்தி பேசுகிறார்கள். விஷால் பாவம். அந்தப் பையனுக்கு எதுவுமே தெரியாது. இது ஒண்ண மட்டும் நான் உறுதியா, அடிச்சுச் சொல்றேன். ஹீரோவாயிட்டாரு. கடைசியா அவர் நடிச்ச 3 படமும் ஓடலை. ஆரம்பிச்சிட்டோம். பொய்யை சொல்லிட்டோம். நம்மள நம்பி பின்னாடி ஒரு கூட்டமே வந்திருச்சு. அதுனால பேசணும்னு பேசுறாரு.

நாம கிரிக்கெட் விளையாட வரலை தம்பி. நடிகர் சங்கப் பிரச்சினையைப் பத்தி பேச வந்திருக்கோம்.  கிரிக்கெட் போட்டி ஆரம்பிச்சவே ராதாண்ணன் சொன்னார்.. ‘முட்டாள்தனமா பேசாதீங்க. இது நடக்காது’ன்னு.. உடனே சரத்.. ‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. நாங்களெல்லாம் ஒரே குடும்பம் மாதிரி.. ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருப்போம். கிரிக்கெட் ஆடுவோம்.. பிக்னிக்கா நினைச்சு போவோம்’ன்னாரு.. பிக்னிக்கா போனீங்க..? அந்த இரண்டு மாசமும் அவங்க படுத்தின பாடு..?

பாரம்பரியமான ஒரு மிகப் பெரிய குடுமப்த்துல இருந்து வந்தவர் சரத்குமார்.  சீனியர் நடிகர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா..? அந்த கிரிக்கெட் டீம்ல இருந்தவங்க நடிச்ச படங்களைவிடவும் அதிகமான வெற்றிப் படங்களை கொடுத்தவர் சரத்குமார். ஒரு மரியாதை தெரிய வேணாமா..?

நான் நிறைய தடவை கூப்பிட்டேன். ‘பேச வாங்க’ன்னு.. நாங்க வர மாட்டோம்ன்னுட்டாங்க. நிறைய பொய் சொல்லிட்டாங்க. முதல்ல ‘கட்டிடத்தைக் காணோம்’ன்னாங்க. அப்புறம் ‘இடத்தைக் காணோம்’ன்னா.. அவங்க சொன்னதுக்கெல்லாம் நாங்க கரெக்ட்டா பதில் சொல்லிட்டோம்.

இப்போ திடீர்ன்னு கமிஷனர் ஆபீஸ்ல போய் நிக்குறாங்க. ‘பாதுகாப்பு வேணுமாம்’.. எதுக்கு..? யார்கிட்டேயிருந்து..? என்கிட்டேயிருந்தா..? சரத்கிட்ட பயமா..? ராதரவியண்ணன்கிட்ட பயமா..? அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.. என்கிட்ட மரியாதையா பேசுனா நானும் மரியாதையா பேசுவேன். என்கிட்ட ஒரு மாதிரியா பேசுனா.. நான் உன்னைவிட ஜாஸ்தி பேசுவேன். யார்கிட்ட பயப்படுறீங்க..? ஒரு சங்கத் தேர்தலுக்கு இத்தனை பாடா..? இத்தனை அசிங்கமா..?

கண்டிப்பா நீங்க ஜெயிக்கப் போறதில்ல. உங்களைக் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்குறேன். இனிமேல் இந்தச் சங்கத்தைப் பிளவுபடுத்தி பார்க்காதீங்க. மனோரமா ஆச்சி இறந்தப்போ அந்த வீட்ல என்னைப் பார்த்தவங்க உடனேயே விலகி ஓடுறாங்க. பேசினால் நான் ஏதாவது சொல்லிருவனோன்னு நினைச்சு ஓடிட்டாங்க. இந்த நிலைமை இன்னொரு தடவை உருவாகக் கூடாது.

உங்களுக்கு உதவி செய்யக் கூடியவர்கள்தான் இங்கே போட்டியிடுகிறார்கள். எங்களை நம்பி வந்திருக்கீங்க. உங்களை நிச்சயம் இவர்கள் ஏமாற்றமாட்டார்கள். எனவே சரத்குமார் அணியில் இருக்கும் 29 பேர்களையும் வெற்றி பெறச் செய்யுங்கள்..” என்று கூறி முடித்தார்.

Our Score