full screen background image

“விஷால் செருப்போட வரட்டும்; நான் விளக்கமாறோட வர்றேன்..” – நடிகை ராதிகா கொந்தளிப்பு..!

“விஷால் செருப்போட வரட்டும்; நான் விளக்கமாறோட வர்றேன்..” – நடிகை ராதிகா கொந்தளிப்பு..!

இன்று இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்பாக நடிகை ராதிகா இன்று பேட்டியளித்தபோது நடிகைகளைத் தவறாகப் பேசும் யூடியூபர்களை அடிக்க விஷால் செருப்போட வந்தால், நான் விளக்கமாறோட வர்றேன்..” என்று கோபத்துடன் பேசினார்.

இது தொடர்பாக நடிகை ராதிகா பேசும்போது. “நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பது மலையாள சினிமாவில் மட்டுமில்லை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி இடங்களிலும் உள்ளது.

நான் மலையாள படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்தப் படப்பிடிப்பின் போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு போனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் அதைப் பார்த்துவிட்டு கடந்து சென்று விட்டேன். பிறகு விசாரித்தேன்.

அப்போதுதான் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடித்து வைத்துக் கொண்டு அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. இதனால் நான் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடை மாற்றினேன். இது குறித்து சக நடிகைகளுக்கும் சொல்லி எச்சரித்தேன். அதுமட்டுமின்றி கேரவன் ஆட்களை அழைத்து “செருப்பால் அடிப்பேன்” என்று எச்சரித்துவிட்டு வந்தேன்.

இந்த சினிமா துறையில் சிஸ்டமே தவறாக இருக்கிறது. அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனை என்பது மலையாளத்தில் மட்டுமல்ல; தமிழிலும் நடக்கிறது. சினிமாவில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் அது இருக்கிறது.

ஆனால் அதை வெளியே சொல்லும்போது பெண்கள் மீதுதான் மொத்த பழியும் விழுகிறது. எந்த விஷயத்தையும் வெளியே சொன்னால் அந்தப் பெண்ணின் தோள் மீது மொத்த பழியையும் சுமத்தி விடுகிறார்கள். என் கண் எதிரே பல நடிகைகளுக்கு இந்த பிரச்சனை நடந்திருக்கிறது.

சமீபத்தில் நடிகை பார்வதி, ஊர்வசியுடன் மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தாங்க. அந்தப் படத்தை பார்த்தேன். எனக்கு பார்வதியின் நடிப்பு அவ்வளவு பிடித்து இருந்தது. அப்போது “அவருக்கு ஏன் அவார்ட் கொடுக்கவில்லை..?” என்று நான் விசாரித்ததற்கு, “அவர் அதிகமாக பேசிட்டார். அதனால் அவருக்குக் கொடுக்காமல்  விட்டுட்டாங்க” என்றார்கள். இப்படித்தான் பல இடங்களிலும் இருக்கிறது.

நான் படப்பிடிற்கு சென்றிருக்கும்போது ரூமில் இருக்கும்போது என்னிடம் பல நடிகைகள் வந்து அழுது இருக்கிறார்கள். “எங்களுடைய ரூமில் இருக்க பயமாயிருக்கு. சிலர் தொந்தரவு செய்கிறார்கள். நீங்கள் தைரியமான ஆளு. அதனால உங்ககூட இருந்துக்கிறோம்” என்று அவங்களே சொல்லுவாங்க.

ஏன், எனக்கும் ஆரம்பத்தில் இது போன்ற பிரச்சனை நடந்திருக்கிறது. அரசியல்வாதிகள், பெரிய பெரிய ஆட்களெல்லாம் எனக்கு பிரச்சனை கொடுத்தார்கள். ஆனால், நான் அந்த இடத்தில் தைரியமாக எதிர்த்து நின்றேன்.

நடிகர் சங்கத்தில் பொறுப்பான பதவியில் இருக்கும் விஷால் “அட்ஜஸ்ட்மென்ட் கேட்கிறவர்களை செருப்பால் அடியுங்கள்” என்று பேசலாமா? பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று இவர்கள்தானே உறுதிப்படுத்த வேண்டும்? ஆனால் விஷால் இப்படி பேசியது சரிதானா?

ஏற்கனவே அவர் ஒரு பேட்டியில் ஒரு யூ டியூபர் தவறாக பேசுகிறார் என்றால் அது அவருடைய கருத்து என்று சொல்லி இருக்கிறார். ஆனால் தவறாக பேசும் அந்த யூ டியுபரை விஷால் சொன்னதுபோல செருப்பால் அடிக்க முடியுமா? விஷால் செருப்பை எடுத்துட்டு வந்தால் நான் விளக்குமாறு எடுத்துட்டு வரேன்.. வரச் சொல்லுங்க. பார்ப்போம்..!

சில வருடங்களுக்கு முன்பு பாடகி சின்மயி ஒருவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்தார். அது உண்மையா? பொய்யா என்று கூட யாரும் காது கொடுத்து விசாரிக்கவில்லை. அதற்கு பிறகு சின்மயியின் நிலைமை என்ன ஆச்சி.. அவருக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதே.. அப்போது யார் அவருக்கு உதவி செய்த்து.. உடன் நின்று கேள்வி கேட்டது..

இதுபோல ஒருவர் ஒரு பிரச்சனையை வெளியே சொன்னால் அவருடைய வாழ்க்கையை அப்படியே முடித்து விடுகிறார்கள். “தைரியமாக சொல்லுங்கள் உங்களுக்கு துணைக்கு நாங்க நிற்கிறோம்” என்றுதான் பெரிய நடிகர்கள், சங்கங்களின் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் சொல்ல வேண்டும். ஆனால், அதை தட்டி கழிப்பது போலப் பேசக் கூடாது.

சினிமா துறையில் யார், யார் எப்படி என்று நான் சொல்லவா? பல நடிகைகள் எனக்கெல்லாம் இது நடக்கவே இல்லை என்று இப்போது சொல்கிறார்கள். உண்மை அதுவல்ல. அவர்களுக்கும் இது போன்று நடந்திருக்கு. எனக்கும் தெரியும்.

ஆரம்பக் காலத்தில் எனக்கு நடந்த இந்தக் கொடுமைகளைப் பார்த்த பிறகு என்னையே மாற்றிக் கொண்டேன். என்னை ரொம்பக் கடுமையானவளாக மாற்றிக் கொண்டேன். டிவி சூட்டிங் டைம்லகூட நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருப்பேன். என்னிடமோ, என் சக பெண் கலைஞர்களிடமோ இப்படி யாரும் பிரச்சனை செய்யவிட மாட்டேன். ஏனென்றால், நான் அந்த இடத்திலேயே அவர்களை அடித்து விடுவேன். அல்லது அந்த பிரச்சனையை பெருசாக்கி விடுவேன். அதனால் என்னிடம் யாரும் எதுவும் கேட்டதில்லை. செய்ததில்லை.  

ஆனால் சின்ன நடிகைகளின் நிலைமை அப்படியல்ல. பலர் வயிற்றுப் பிழைப்புக்காக, குடும்பக் கஷ்டத்திற்காக இந்த சினிமாவை நோக்கி வருகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது சங்கங்களில் பதவியில் இருக்கும் பெரிய நடிகர்கள்தான். ஆனால் அவர்களே இப்படி பொறுப்பில்லாமல் பேசலாமா?

நான் நாசரிடம் போன் செய்து இது பற்றி பேசினேன். பெண் நடிகைகளின் பாதுகாப்பிற்கு நான்கு பேர் கொண்ட ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று சொன்னேன். அதில் ஒரு நீதிபதி, வழக்கறிஞர், போலீஸ், நடிகை போன்றவர்கள் இருக்கலாம். இது போன்ற ஒரு குழு உடனே அமைக்க வேண்டும். நான்கு வருடம் கழித்து எல்லாம் அமைத்தால் பிரயோஜனம் கிடையாது.

இப்போது ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி இருக்கிறது. இதில் பல பெண்கள் பல்வேறு குற்றங்களை சொல்கிறார்கள். ஆனால், இதை இன்னும் சில வருடங்கள் கழித்துதான் விசாரிப்பார்கள். அப்போது சம்பந்தப்பட்ட பெண்களிடம் நீங்கள் என்ன எவிடன்ஸ் வைத்திருக்கீர்களா? என்று காயப்படுத்துவார்கள். அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை நடக்கும்போது வீடியோ எடுத்துக் காட்டவா முடியும்..?

அதனால் எனக்கு இந்த கமிட்டிகளில் உடன்பாடு இல்லை. எந்த ஒரு பிரச்சனை நடந்தாலும் உடனுக்குடன் தீர்வு என்பது போன்ற ஒரு நிலை கொண்டு வர வேண்டும்...” என்றார் ராதிகா.

Our Score