நிஜமான அடியினால் மயங்கி விழுந்த நடிகை..!

நிஜமான அடியினால் மயங்கி விழுந்த நடிகை..!

‘கங்காரு’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பவர், நடிகை பிரியங்கா. இவர் இப்போது ‘லாரா,’ ‘கோடை மழை’ ஆகிய இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ‘கோடை மழை’ படத்தின் படப்பிடிப்பு இப்போது சங்கரன்கோவில் அருகே நடந்து வருகிறது.

இது, அண்ணன்–தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்ட படம். அண்ணனாக டைரக்டர் மு.களஞ்சியம், போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். தங்கையாக பிரியங்கா நடிக்கிறார். இவர்கள் இரண்டு பேர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சங்கரன்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் இன்று படமாக்கப்பட்டது.

கதைப்படி, பிரியங்கா ஒரு இளைஞரை காதலிக்கிறாராம். அந்த காதல், களஞ்சியத்துக்கு பிடிக்காமல்போய், இது தொடர்பாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு,  அப்போது களஞ்சியம் கோபத்துடன் பிரியங்காவின் கன்னத்தில் அறைவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இதற்காக பிரியங்காவும், களஞ்சியமும் மூன்று முறை ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். களஞ்சியம் ஓங்கி அறையும்போது, பிரியங்கா கன்னத்தை திருப்பிக் கொள்ள வேண்டுமாய் முன்பேயே சொல்லியிருக்கிறார்கள். ஒத்திகையின்போது சரியாக கன்னத்தை திருப்பிக் கொண்ட பிரியங்கா, ‘டேக்’கின்போது அதைச் செய்யாமல்விட, களஞ்சியம் விட்ட அறை, நிஜமாகவே பிரியங்காவின் கன்னத்தில் விழுந்திருக்கிறது.

அடி பலமாக இருந்ததால், பிரியங்கா உடனேயே மயங்கி விழுந்திருக்கிறார். தொடர்ந்து பற்களை கடித்தபடியே வலிப்பும் ஏற்பட்டிருக்கிறது. உடனேயே பிரியங்காவை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சிகிச்சை அளித்துள்ளார்கள்.

மயக்கம் தெளிந்த பிரியங்கா தனது காதுக்குள் ‘டொய்ங்’ என்று சத்தம் வருவதாக டாக்டர்களிடம் கூறினார். உடனே காது டாக்டர் வரவழைக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளதாம். பிரியங்கா இப்போது தொடர்ந்து மருத்துவமனையில்தான் இருக்கிறாராம். இதனால், ‘கோடை மழை’ படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இத்தகவலை வெளியிட்டுள்ள படப்பிடிப்புக் குழுவினர் நடிகை பிரியங்காவின் வலிப்பு நோய் சம்பந்தப்பட்ட தகவலை ஏன் வெளியிட்டார்கள் என்று தெரியவில்லை. இது நடிகை பிரியங்காவின் எதிர்கால வாழ்க்கையை கொஞ்சமேனும் பாதிக்குமென அவர்களுக்குத் தெரியாதா..?

படத்துக்கு பப்ளிசிட்டி கிடைக்கும் என்பதற்காக இதையெல்லாமா வெளியில் சொல்வது..?

Our Score