இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நயன்தாரா இ.ஆ.ப..!

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நயன்தாரா இ.ஆ.ப..!

கதாசிரியர் மீஞ்சூர் கோபியை நினைவிருக்கிறதா..?

‘கத்தி’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் அந்தக் கதை தன்னுடையது என்றும், தான்தான் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் அந்தக் கதையைச் சொன்னதாகவும் கடைசியில் தன்னிடம் சொல்லாமலேயே தனக்கு ஊதியம் கொடுக்காமலேயே, தன்னுடைய அனுமதியைப் பெறாமலேயே, தன்னுடைய கதையை கத்தி படத்தின் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் தன் பெயரில் போட்டு படத்தைத் இயக்கியிருக்கிறார் என்று மிகப் பெரிய குற்றச்சாட்டினை சுமத்தி கோடம்பாக்கத்தை சில நாட்களுக்கு பதற்றமாகவே வைத்திருக்க உதவிய அன்பர்.

director-gopi-1

அதன் பிறகு ‘கத்தி’ பட ரிலீஸின் கடைசி நேரத்தில் சில திரைமறைவு சமாதான முயற்சிகளிலும் கோபி அடங்கிப் போனார். அதற்கு முதல் நாள்வரையிலும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மதிப்பளித்து தொடர்ந்து செல்போனில் பேசி வந்த கோபியை அதற்குப் பிறகு பிடிக்கவே முடியவில்லை. சரி.. ஏதோ அவருக்கு நல்லது நடந்திருக்கு போலிருக்கு. அவர் எங்கேயிருந்தாலும் நல்லாயிருந்தால் சரி என்ற பெரிய மனதுடன் மீடியா வட்டாரமும் அவரிடத்தில் இருந்து ஒதுங்கியது.

அவர் ஒதுங்கினாலும் சும்மா இல்லை.. அவர் சும்மா இருந்தாலும் ஒரு பெரிய கை அவரை சும்மாவிடாமல் கை தூக்கிவிட்டிருக்கிறது. அந்தப் பெரிய மனசுக்குச் சொந்தக்காரர் நடிகை நயன்தாரா.

nayanthara-1

‘கத்தி’ பட ரிலீஸ் சமயத்தில் நடந்த அந்தக் கதைக் களேபரத்தை கூர்ந்து கவனித்து வந்த நயன்தாரா கோபியை தானாகவே வலிய அழைத்து தன்னை முன்னிலைப்படுத்தி ஒரு கதையைத் தயார் செய்யும்படியும் அதில் நடிக்க தயாரிப்பாளரைகூட தானே உருவாக்கித் தருவதாகச் சொல்லியிருக்கிறார்.

அப்புறமென்ன..? அதற்காகத்தானே காத்திருந்தார் கோபி. மளமளவென ஏற்பாடுகள் ரகசியமாக நடைபெற்று அதன் படப்பிடிப்பும் காதும், காதும் வைத்தாற்போல் நடந்தேறியது. ராமநாதபுரத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இதன் படப்பிடிப்பே இப்போது நிறைவு பெற்றுவிட்டதாம்.

இந்தப் படத்திற்கு இன்னமும் பெயர் வைக்கவில்லையாம். அதிலும் படம் சம்பந்தப்பட்ட ஒரு ஸ்டில்கூட வெளியில் வராத அளவுக்கு ரகசியத்தைக் காத்து வருகிறார்கள் படக் குழுவினர்.

இந்தப் படம் பெண்களை முன்னிலைப்படுத்தும்விதமான கதையில் உருவாகியிருக்கிறதாம். நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் இந்த படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ‘காக்கா முட்டை’ சகோதரர்கள் விக்னேஷ் – ரமேஷ், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, இயக்குநர் ஈ.ராமதாஸ், சுனு லக்ஷ்மி மற்றும் ராம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 

கே.ஜெ.ஆர்.ஸ்டுடியோஸ் சார்பில் கோட்பாடி ஜெ.ராஜேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு – ஓம்பிரகாஷ், சண்டை பயிற்சி – பீட்டர் ஹெய்ன், படத் தொகுப்பாளர் – கோபி கிருஷ்ணா,  கலை  இயக்கம் – லால்குடி இளையராஜா என திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் இந்தப் படத்தில் பணியாற்றியிருப்பது மேலும் சிறப்பு.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலூகாவில் உள்ள ‘ஆப்பனூர்’ கிராமத்தில் தொடர்ந்து 24 நாட்கள் நடைபெற்ற இந்தப் படப்பிடிப்பில், ஏறக்குறைய நயன்தாராவின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

புகழ் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் கண்காணிப்பில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில், நயன்தாராவோடு ஆயிரத்திற்கும் மேலான சக நடிகர் – நடிகைகள் இணைந்து பணியாற்றியுள்ளனர்.  

கிட்டத்தட்ட முழுமையாக  நிறைவு பெற்று இருக்கும் இந்த படத்தில் இன்னும் சில கிராபிக்ஸ் வேலைகளும்,  மெருகேற்றும் பணிகளும்தான் மிச்சம் இருக்கிறதாம்.

வாங்க கலெக்டரம்மா..! காத்திருக்கிறோம்..!

Our Score