full screen background image

நடிகை மோனிகா எம்.ஜி.ரஹீமாவாக மாறின கதை..!

நடிகை மோனிகா எம்.ஜி.ரஹீமாவாக மாறின கதை..!

இது மதம் மாறும் சீஸன் போலிருக்கிறது.. அதிலும் சினிமா நட்சத்திரங்கள்தான் அதிகமாக இதில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற மதத்திலேயே இருப்பவைகளையே முழுவதும் அறிய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது அடுத்த மதத்தை முழுமையாக புரிந்து கொண்டதாக நினைத்து மதம் மாறும் சிறுபிள்ளைத்தனம் இப்போது அதிகமாக அனைத்து மதங்களிலுமே நடைபெற்று வருகிறது.

இதில் லேட்டஸ்ட் வரவு ‘சிலந்தி’ புகழ் மோனிகா..!

monica_half_saree_cute_stills_photos_01

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த மோனிகா, ‘அழகி’, ‘சிலந்தி’ உள்பட ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்தார். ‘சிலந்தி’யில் அதிரடி கவர்ச்சி வேடத்தில் நடித்தார். இதைத் தொடர்ந்து தெலுங்கு படங்களிலும், மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். இடையில் தமிழ்ப் படங்களில் மட்டும் அவரைப் பார்க்கவே முடியவில்லை. இன்று திடீரென செய்தியாளர்களை ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் சந்தித்த மோனிகா தான் இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டதாக கூறி அதிர்ச்சியாக்கினார்.

அவர் கூறுகையில், “என் வாழ்க்கையில் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறேன். அது பற்றிச் சொல்லத்தான் இங்கே உங்களைச் சந்திக்க வந்தேன். நான் குழந்தை நட்சத்திரமாக ‘அவசர போலீஸ் 100’ படத்தில் தமிழ்த் திரையுலகத்துக்குஅறிமுகமானேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இதுவரையில் 69 படங்களில் நடித்து முடித்துவிட்டேன். 

என் அப்பா மாருதிராஜ் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அம்மா கிரேஸ். கிறிஸ்தவர். இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். என் அப்பா இறந்த பின் நான் நிறைய கஷ்டங்களை அனுபவித்தேன். ரேஷன் கடைக்குப் போவது, மின்சார கட்டணம் கட்டச் செல்வது.. என எ்ல்லா இடங்களுக்கும் நான் தனியாகப் போக வேண்டியிருந்தது. நான் பத்தாம் வகுப்புவரைதான் படித்திருக்கிறேன். ஒரு ஆண் துணையில்லாமல் வெளியில் செல்வது கஷ்டமாக இருந்தது. அதற்காக பர்தா அணிய ஆரம்பித்தேன். அது எனக்கு சவுகரியமாக இருந்தது.

அதன் பிறகு இஸ்லாம் மதம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆயிரம் பக்கங்கள்.. இரண்டாயிரம் பக்கங்கள் கொண்ட இஸ்லாம் மத புத்தகங்களைப் படித்தேன். அந்த மதத்தின் மீது எனக்கு அப்போதுதான் ஈர்ப்பு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டிலேயே நான் முஸ்லீம் மதத்துக்கு மாறிவிட்டேன். என் முடிவை எங்கள் வீட்டில் என் அம்மாவும், உறவினர்களும் ஏற்றுக் கொள்வதற்காக இத்தனை வருடங்கள் காத்திருந்தேன்.

பணத்துக்காகவோ, காதலுக்காகவோ நான் மதம் மாறவில்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்குப் பிடித்ததால் மதம் மாறினேன். என் பெயரையும் எம்.ஜி.ரஹீமா என்று மாற்றிக் கொண்டேன். அதாவது மாருதிராவ் கிரேஸி ரஹீமா. நான் இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டேன். சினிமாவை விட்டு விலகுகிறேன். உங்களையெல்லாம் வி்ட்டு பிரிவது எனக்கு பெரும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது..

எனக்கு இப்போது 26 வயது ஆகிறது. இயல்பாகவே நான் நேர்மையாக வாழ வேண்டும் என்ற கொள்கையுடையவள். பணத்துக்கு ஆசைப்பட்டு ஆண் நண்பர்களுடன் பப்புக்கு போனதில்லை. தவறான வழியில் சம்பாதித்ததில்லை. நடித்து சம்பாதித்த பணத்தில்தான் ஒரு வீட்டை வாங்கியிருக்கிறேன்.

நான் கூச்ச சுபாவம் கொண்டவள். கவர்ச்சியாக உடையணிந்து நடிப்பது.. கதாநாயகர்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது போன்றவைகளில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படி நடிக்க சங்கடமாகவும் இருந்தது. இதுவொரு சாதாரண பெண்ணுக்குரிய இயல்பான உணர்வுதான். அதனால்தான் சினிமாவை விட்டு விலகுகிறேன்.

எனக்கு ஹசன் என்ற மலேசிய நண்பர் உதவியாக இருந்தார். அவர் எனக்கு அண்ணன் மாதிரி. அவருக்கும் குடும்பம் இருக்கிறது. இந்த வருடத்துக்குள் நான் ஒரு இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்து கொள்வேன். அதற்கான ஏற்பாடுகளை என் அம்மாவும் மலேசியாவில் இருக்கும் என் நண்பர் ஹசனும் செய்து வருகிறார்கள். ரம்ஜான் பண்டிகை முடிந்ததும் என் திருமணம் நடக்கும். அது பற்றிய முறையான தகவல்களை உரிய நேரத்தில் வெளியிடுவேன்..”

இவ்வாறு நீண்ட, நெடிய விளக்கத்தை நடிகை மோனிகா என்னும் எம்.ஜி.ரஹீமா தெரிவித்துள்ளார்.

மோனிகா கடைசியாக சமீபத்தில் வெளியான ‘நதிகள் நனைவதில்லை’ என்னும் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இப்போது ‘நரன்’, ‘கன்னிகாபுரம் சந்திப்பில்’, ‘அமரன்’ ஆகிய படங்களிலும்  நடித்து வருகிறார். இதற்கு மேல் நடிப்பதில்லை என்று சொல்லியிருக்கிறார். சந்தோஷம்..

மதம் மாறுவது அவரவர் உரிமை.. அதில் யாரும் கேள்வி கேட்க முடியாது.. 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே தான் மதம் மாறிவிட்டதை இப்போதுதான் வெளியில் சொல்கிறார் மோனிகா. கடந்த 4 ஆண்டுகளிலும் அவர் சினிமாவி்ல நடித்துக் கொண்டிருந்தார் என்பதுதான் உண்மை. அப்போதெல்லாம் வராத கூச்சம், இனிமேல்தானா வரப் போகிறது..?

சினிமாவைவிட்டு விலகுவதாக அவர் சொல்லியிருக்கும் காரணம்தான் மிகுந்த நகைச்சுவையானது. இவ்வளவு கூச்ச சுபாவம் உள்ளவர்தான் ‘சிலந்தி’யில் அப்படி நடித்தாரோ..? சினிமா துறை என்பதே அதுதான் என்பதை உணர்ந்துதான் அனைத்து நடிகைகளும் அப்படி நடிக்கிறார்கள். இது பாவம், புண்ணியம், தப்பு, தவறு என்று யாரும் நினைப்பதில்லை. இதெல்லாம் தவறானது என்றால் இப்படியெல்லாம் படமெடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்களெல்லாம் குற்றவாளிகள் போலத்தான். மோனிகாவால் அவர்களையெல்லாம் இப்படி குற்றம் சொல்ல முடியுமா..?

“ஒரு ஆண் துணையில்லாமல் வெளியில் செல்வது கஷ்டமாக இருந்தது. அதற்காக பர்தா அணிய ஆரம்பித்தேன். அது எனக்கு சவுகரியமாக இருந்தது..” என்று சொல்கிறார்.. இந்து மதம், கிறித்துவ மதம்.. ஏன் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த பெண்கள்கூட பர்தா இல்லாமல்தான் வெளியில் சென்று வருகிறார்கள். வேலைக்குச் செல்கிறார்கள். பல முன்னணி நடிகைகள்கூட இங்கே பர்தா இல்லாமல்தான் வெளியில் நடமாடி வருகிறார்கள். இதெல்லாம் ஒரு கஷ்டம் என்று நினைத்தால் எப்படி..? இதற்காகவே பர்தா அணிந்தேன் என்று சொல்வதுதான் காமெடியாக உள்ளது..!

பின்பு எதற்கு இந்த டிராமா என்கிறீர்களா…? மலேசியாவைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் மோனிகா. அதுக்குத்தான் இந்த பில்டப்பு..!

காதலுக்கு மதமும், சினிமாவும் எப்படி குறுக்கே வரும்..? பட்.. எங்கிருந்தாலும் சகல செளபாக்கியங்களுடன் வாழ்க என்று மோனிகாவை வாழ்த்துவோம்..!

Our Score