விஜய் ஆண்டனி – மியா ஜார்ஜ் நடிப்பில், ஜீவா சங்கர் இயக்கி இருக்கும் திரைப்படம் ‘எமன்’.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த ‘எமன்’ திரைப்படத்தை, லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜு மகாலிங்கம் மற்றும் விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.
‘அமரகாவியம்’ முதல் சமீபத்தில் வெளியான ‘ரம்’ திரைப்படம்வரை, முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை மியா ஜார்ஜ் பேசுகையில், “இந்த ‘எமன்’ படத்தில் நான் நடித்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறது. ஒன்று, என்னை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் ஜீவா சங்கர். மற்றொன்று, எப்போதுமே தனித்துவமான தரமான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஜய் ஆண்டனி.
ஜீவா சங்கரோடு நான் இணைந்து பணியாற்றியிருக்கும் இரண்டாவது படம் ‘எமன்’. இந்தப் படத்துக்காக ஜீவா சங்கர் ஸார் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசினார். ‘இப்படியொரு படம் இருக்கு. இதுல ஒரு கேரக்டர். நீதான் நடிக்கணும். ஓகேவா..?’ என்றார். அவர் கேட்டவுடனேயே நானும் ‘சரி’ன்னு சொல்லிட்டேன். ‘மார்ச், ஏப்ரல்ல ஷூட்டிங் ஆரம்பிக்கும்’ என்றார். ‘மார்ச்ல நான் ப்ரிதான் ஸார். வேற படம் எதுவும் இல்லை. நடிக்கிறேன்’னு சொன்னேன்.
எனக்கு ‘அமரகாவியம்’ படத்துல மிகப் பெரிய பெயரையே வாங்கிக் கொடுத்தவர் இயக்குநர் ஜீவா ஸார். அதுலேயே அவருடைய டைரக்ஷன் திறமையை நான் பார்த்திருக்கேன். அதுனால எந்த தயக்கமும் இல்லாமல் பட்டென்று இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன்.
அதுக்கப்புறம்தான் இன்னொரு நாள் போன் செஞ்சு 4 மணி நேரமா கதை சொன்னார். சீன் பை சீனாவே சொன்னார். அடுத்தடுத்த காட்சிகள்ல என் போர்ஷன் எப்படியிருக்கும்..? நான் இல்லாத காட்சிகள்ல அடுத்து என்ன நடக்கும்..? திரும்பவும் நான் எப்படி சீனுக்குள்ள வர்றேன்ற மாதிரியெல்லாம் திரைக்கதையை அவ்வளவு அழகா சொன்னார்.
‘அமரகாவியம்’ படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில்தான் இந்த ‘எமன்’ படத்தில் நான் நடித்திருக்கிறேன். அஞ்சனா என்னும் ஒரு நடிகையின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.
இந்த படத்தில் நான் முதல்முறையாக சோலோ டான்ஸும் ஆடியிருக்கேன். அந்த பாடல் காட்சி என்னை முற்றிலும் ஒரு மாறுபட்ட மியா ஜார்ஜாக ரசிகர்களுக்கு காண்பிக்கும்.
விஜய் ஆண்டனி ஸாரை பத்தி சொல்லணும்னா அவர் ரொம்ப, ரொம்ப எளிமையான மனிதர். நடிப்பிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு, 24 மணி நேரமும் உழைச்சுக்கிட்டே இருக்கார்.. அவரோடு இணைந்து பணியாற்றியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி..” என்று உற்சாகத்துடன் கூறினா ‘எமன்’ படத்தின் கதாநாயகி மியா ஜார்ஜ்.
அரசியலை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் ‘எமன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.