full screen background image

பல் டாக்டர் பேயாக நடித்த அனுபவம்..!

பல் டாக்டர் பேயாக நடித்த அனுபவம்..!

சமீபகாலமாக பெருகி வரும் பேய் படங்களின் வரிசையில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘ஜின்’. 

நகைச்சுவை மிளிர சொல்லப்படும் இந்த ‘ஜின்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் புதுமுக  நடிகை மாயா. தன்னுடைய மாறாத புன்சிரிப்பால் அனைவரையும் மயக்கும் வல்லமைக் கொண்ட இந்த மாயா, ஒரு பல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பல் சிகிச்சையளிக்க வேண்டியவர் இப்படி சினிமாவில் கால் பதித்திருப்பது ஏன் என்பது பற்றி விரிவாக பேசுகிறார் நடிகையான டாக்டர் மாயா.

“நான் படிச்சது பல் மருத்துவம் என்றாலும் எனக்கு நடிப்பென்றால் நிறைய ஆசை. சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பதும் எனது கனவுகளில் ஒன்று.

எனக்கு இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதும் ஒரு பெரிய விருப்பம். ‘கஜினி’ படத்தின் நாயகி கல்பனா போல் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்குள் இருக்கவே செய்கிறது. அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான சூர்யா சாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதும் கனவு.

எனக்கு பிடித்த கதாநாயகி ஜெனிலியாதான். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இயல்பாகவே  டீன் ஏஜ் இளம் பெண்கள் போலவே இருக்கும். அந்த நடிப்பை அவர்தான் பிரமாதமாக பிரதிபலிக்கிறார்.

Jinn-Movie-Poster

இந்த ‘ஜின்’ படத்திற்காக ‘காளி’   வெங்கட், ‘காதலில் சொதப்புவது எப்படி’  அர்ஜுனன், ‘முண்டாசுப்பட்டி’ முனீஸ்காந்த், ‘மெட்ராஸ்’ ஜானி என்ற வளர்ந்து வரும் நகைச்சுவை கலைஞர்களுடன் 40 நாட்கள் படப்பிடிப்பு என்றால் எப்படி இருக்கும்..? ஸ்பாட்டில் சிரித்து சிரித்து வயிற்று வலிதான்.

இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை கதாநாயகர்கள் ரமீஸ் ராஜாவும், ‘மெட்ராஸ்’  கலையரசனும். தொடர்ந்து 40  நாட்களும் சில்லிடும் இரவுகளில் நடுக்காட்டில் படப்பிடிப்பு என்றாலும்,  இவர்களின் கலாட்டாவால் படம்  முடிந்ததே தெரியவில்லை.

‘ஜின்’ படத்தை தொடர்ந்து என் அடுத்த படத்துக்காக நான் நிறைய கதைகளை கேட்டு வருகிறேன். பெயர் வாங்கும் அளவுக்கு பாத்திரம் இருந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். 

இந்த ‘ஜின்’ படத்தில் என்னுடைய அனுபவங்கள் ஏறத்தாழ படத்தின் மையக் கதையான பேய் கதை போலத்தான். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் எனக்குக் கிடைத்த ஒரு வித்தியாசமான அனுபவம் இதுதான்.

ஒரு நாள் நள்ளிரவு படப்பிடிப்பில் இருந்தபோது  ஒரு தெரியாத எண்ணில்  இருந்து எனது செல்போனுக்கு அழைப்பு வந்தது. தெரியாத எண் என்பதால் சற்றே தயங்கித்தான் அழைப்பை எடுத்தேன். யாராக  இருக்கும் என்று யோசித்துக் கொண்டே ‘ஹலோ’ சொன்னேன். எதிர் முனையில் நடுங்கும் குரலில் ஒரு பெண்.

என்னவென்று விசாரித்தால் ‘எனக்கு பல் வலி.  வைத்தியம் பார்ப்பிங்களா..?’  என்று கேட்டது அந்த பெண் குரல். ‘என்ன பிரச்சனை..?’  என்று கேட்டேன். ‘நான் ரத்தக் காட்டேரி.. எனக்கு பல் வலி.  இதனால் மற்றவர்கள் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருக்கு..” என்று சொல்லிவிட்டு கடகடவென சிரிக்க ஆரம்பித்தது.

அவ்வளவுதான்.. நான் ‘அம்மா…’ ‘அப்பா..’ என்று  கத்தியே  விட்டேன். பயத்தில் காய்ச்சலே வந்தே விட்டது. எங்க பட யுனிட்டிலேயே யாரோ விளையாட்டுக்கு இதைச் செய்திருப்பார்கள் என்பது புரிகிறது. ஆனால் அந்த நிமிடத்தில் வந்த பயம் நிச்சயம் மறக்க முடியாதது…” என்கிறார் டாக்டர் மாயா.

Our Score