full screen background image

தி பினோமினல் ஷி’ விருது பெற்ற முதல் தமிழ் நடிகை லிசி ஆண்டனி

தி பினோமினல் ஷி’ விருது பெற்ற முதல் தமிழ் நடிகை லிசி ஆண்டனி

இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் சாதித்த தனித்துவமான பெண்களை கௌரவப்படுத்தும்விதமாக ‘தி பினோமினல் ஷி’ (THE PHENOMENAL SHE) அதாவது ‘தனித்துவமான பெண்’ என்கிற விருதை இந்திய தேசிய வழக்கறிஞர் சங்கம் (INBA) கடந்த 2018-ம் ஆண்டில் இருந்து வருடம் தோறும் 100 சாதனை பெண்களுக்கு வழங்கி வருகிறது.

இந்திய தேசிய வழக்கறிஞர் சங்கத்தின் (INBA) ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான செல்வி. வினாக்சி கதன் என்பவர் இதை 2018-ம் ஆண்டில் துவங்கினார். நாட்டில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களை உற்சாகப்படுத்தி கௌரவிக்க வேண்டும் என்பதே இந்த விருதுகளின் நோக்கம்.

கடந்த நான்கு வருடங்களாக வழங்கப்பட்டு வரும் இந்த விருதுக்கான பட்டியலில் பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள், மதிப்புமிகு உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், 500 முன்னணி நிறுவனத்தின் சிஇஓக்கள், மிகப்பெரிய தொழிலதிபர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் பல துறையை சேர்ந்தவர்களிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களில் நூறு பேர் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த விருது பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய ‘தி பினோமினல் ஷி’ (THE PHENOMENAL SHE) என்கிற புத்தகமும் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் இந்த 2023-ம் வருடத்தில் ‘தி பினோமினல் ஷி’ (THE PHENOMENAL SHE) விருது வழங்கும் விழாவில் 5-வது பதிப்பு வெளியீட்டுடன் கூடிய விருது வழங்கும் விழா மார்ச்-11 அன்று  நடைபெற்றது.

இந்த வருடம் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ரேகா பள்ளி, பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி லிசா கில், ராஜ்யசபா உறுப்பினரான டாக்டர் சசிகலா புஷ்பா ராமசாமி, பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற டாக்டர் சோமா கோஸ், பத்மா ஸ்ரீ வாட்த்சவா, ஐஏஎஸ் அதிகாரியான சௌமியா சர்மா, மாநில ஆதிவாசிகள் நலத்துறை அமைச்சரான திருமதி ரேணுகா சிங் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த சாதனை பெண்மணிகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

அந்த வகையில் இந்த முறை தமிழகத்திலிருந்து முதன்முறையாக நடிகை லிசி ஆண்டனி இந்த தனித்துவமான பெண் விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகில் கடந்த 2011-ம் ஆண்டில் வெளியான ‘தூங்கா நகரம்’ என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான லிசி ஆண்டனி, அதன் பிறகு ‘தங்க மீன்கள்’, ‘பேரன்பு’, ‘நாடோடிகள்-2’, ‘நெற்றிக்கண்’, ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ உள்ளிட்ட பல படங்களில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் வெளியான ‘கட்டா குஸ்தி’, ‘ராங்கி’, சமீபத்தில் வெளியான ‘பொம்மை நாயகி’ ஆகிய படங்களில் துணிச்சலும் தைரியமும் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பால் ரசிகர்களின் மனதிலும் ஆழ பதிந்துள்ளார்.

இந்திய தேசிய வழக்குரைஞர் சங்கம் (INBA) தனித்தன்மை வாய்ந்த பெண்களின் ஆதரவுடன், ஒவ்வொரு ஆண்டும் பெண்களின் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதுடன் நாட்டிலுள்ள பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச சட்ட உதவி மற்றும் வழிகாட்டுதலையும் வழங்கி வருகிறது.

தனித்துவமான பெண்களுக்கான கடந்த 3-வது பதிப்பு வெளியானபோது குடியரசுத்தலைவரிடமிருந்து கிடைத்த பாராட்டு செய்தி இந்திய தேசிய வழக்குரைஞர் சங்கத்தை (INBA) பெருமைப்படுத்துவதாகவும் மேலும் உற்சாகமூட்டுவதாகவும் அதற்கான ஒரு அங்கீகாரமாகவும் அமைந்தது.

Our Score