ஒளிப்பதிவாளர் லட்சுமண் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘மசாலா படம்’. மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, லக்ஷ்மி தேவி மற்றும் கௌரவ் நடிக்கும் இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் தயாரிக்கிறார்.
இந்த ‘மசாலா பட’த்தில் நடித்து வரும் இப்படத்தின் நாயகி லக்ஷ்மி தேவி அவரது மனதில் இருக்கும் மசாலா படங்களை பற்றி கருத்துகளை கூறியுள்ளார்.
“நல்ல படமோ, மொக்க படமோ.. பொதுவாகவே மசாலா படங்கள் நம்மை மகிழ்விக்க கூடியவை. நாம் வாழ கனவு காணும் அந்த கதாப்பாத்திரங்களை நம் கண் முன் நிறுத்துபவை. நாம் எதிர்பார்க்கும் வியப்புகளை மட்டுமே உள்ளடக்கியவை மசாலா படங்கள்..” என்றார் லஷ்மி தேவி.
என்ன ஒரு கதாநாயகி திரைப்படங்களின் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாரே என்று பார்த்தால். மசாலா படத்தின் திரைக்கதையையும் லஷ்மி தேவிதான் எழுதியுள்ளார் என்பது தெரியவந்தது.
“கவிதைகள், சிறு கதைகள், நாடகங்கள் இப்பொழுது சினிமா என எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும்.
இயக்குனர் லக்ஷ்மண், தயாரிப்பாளர் விஜய், நான் என அனைவரும் நல்ல நண்பர்கள். மசாலா படங்களை பற்றி ஒரு படம் எடுக்கலாம் என்று திட்டமிடவில்லை. பலரும் இங்கு மசாலா படங்கள் மற்றும் ஆன்லைன் சினிமா விமர்சகர்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். இதை அடிப்படையாய் வைத்தேதான் இக்கதையை எழுதினோம். இது பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
கேமரா முன்பு நடிப்பு, மற்ற சமயம் இயக்கம், தயாரிப்பு என ‘ மசாலா படம்’ எனக்கு ஒரு நேர்த்தியான சினிமாவை கற்றுக் கொடுத்துள்ளது. என்னால் இரவு, பகல் பாராமல் உழைக்க முடியும் என்பதை உணர்த்தியுள்ளது இப்படம்.
மிர்ச்சி சிவாவுடன் பொது இடங்களில் ஷூட் செய்யும்பொழுது அவரை சுற்றி ரசிகர்கள் சூழ்வதை பார்க்கும்போது அவ்வளவு உற்சாகமாய் இருக்கும். மறுப்பக்கம் பாபி சிம்ஹாவுடன் நடித்தத்து மறக்க முடியாத அனுபவம்..” என்றார் ஹீரோயின் லஷ்மி தேவி.










