பாரதீய ஜனதா கட்சியின் மிக முக்கிய பிரமுகரும், திரைப்பட நடிகையுமான குஷ்பூவின் டிவீட்டர் பக்கம் இன்று ஹேக் செய்யப்பட்டுள்ளது.
நடிகை குஷ்பூ தற்போது பா.ஜ.கட்சியில் மிகத் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் சார்பான செய்திகளை தனது டிவீட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலைமையில் அவருடைய டிவீட்டர் பக்கத்தை சில விஷமிகள் இன்று ஹேக் செய்துள்ளனர். ஹேக் செய்த கையோடு குஷ்பூ இத்தனையாண்டுகளாக பதிவு செய்திருந்த அத்தனை பதிவுகளையும் அழித்துள்ளனர்.

மேலும் போலியாக briann என்ற பெயர் குறிக்கப்பட்டு அந்த டிவீட் பக்கம் இப்போதும் ஓப்பன் நிலையில் உள்ளது.
இது குறித்து நடிகை குஷ்பூ உடனடியாக டிவீட்டர் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். மேலும் இன்று மதியம் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து தனது புகாரை சமர்ப்பித்தார்.
அப்போது பத்திரிகையாளர்களிடத்தில் இது குறித்து பேசிய நடிகை குஷ்பூ, “சென்ற வருடமும் இதேபோல் எனது அக்கவுண்ட்டை ஹேக் செய்தனர். இப்போதும் அதை செய்திருக்கிறார்கள். விரைவில் தனது டிவீட் பக்கம் மீட்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..” என்று தெரிவித்தார்.
அவருடைய நம்பிக்கை வீண் போகாமல் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவரது டிவீட்டர் பக்கம் திரும்பவும் அவருக்குக் கிடைத்தது. ஆனால் இப்போது கிடைத்திருக்கும் பக்கத்தில் குஷ்பூ பா.ஜ.க.வில் சேர்ந்த காலக்கட்டத்தில் இருந்துதான் பதிவுகள் காணக் கிடைக்கின்றன. அதற்கு முன்னர் காங்கிரஸில் இருந்தபோது அவர் எழுதியிருந்த பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.