இப்போதெல்லாம் கோடம்பாக்கத்தில் நடிகைகளுக்கு படம் கிடைப்பதைவிட பெரிய பிரச்சினை அவர்களது மேனேஜர்களை சமாளிப்பதுதான்..
ஒரு படத்தில் சம்பந்தப்பட்ட நடிகைக்காக பேசி புக் செய்து கொடுத்துவிட்டு கமிஷனை வாங்கிக் கொண்டு சமர்த்துப் பிள்ளையாய் நடையைக் கட்டும் மேனேஜர்கள் கோடம்பாக்கத்தில் ரொம்பவே கம்மி..
தயாரிப்பாளர் தரப்பு கொடுக்கும் கமிஷனைவிட நாயகிகள் கொடுக்கும் கமிஷன் கூடுதலாக இருக்க வேண்டும். இல்லையெனில் ஏதாவது ஒரு பொய்யைச் சொல்லி நாயகியின் வாய்ப்புக்கு வேட்டு வைத்துவிடுவார்கள்.. இதனாலேயே புதிதாக உள்ளே வரும் ஹீரோயின்கள் சிலர் எதுவாக இருந்தாலும் தாங்களே நேரடியாக பேசி வாய்ப்பு கேட்பார்கள்.
நடிகை இனியாவுக்கும் இதுதான் பிரச்சினையாம்.. யாரோ சிலர் இனியாவுக்கு மேனேஜர் தாங்கள்தான் என்று சொல்லி தயாரிப்பாளர்களிடம் பேரம் பேசுகிறார்களாம். இனியாவின் கால்ஷீட் நம்ம கைல இருக்கு. மொதல்ல நம்மளை கவனிங்க என்று கவர் கேட்கிறார்களாம். இதெல்லாம் இனியாவின் காதுகளுக்கு வந்துவிட்டதாம்..
இதனால் இன்றைக்கு நடந்த ‘நான் சிகப்பு மனிதன்’ பிரஸ் மீட் நிகழ்ச்சியில் தெளிவாக ஒன்றைச் சொல்லிவிட்டார் நடிப்புத் தாரகை இனியா. “எனக்கு மேனேஜர்ன்னு யாரும் இல்லீங்க. எல்லாமே எங்க அம்மாதான். பட விஷயமா பேசணும்ன்னா ஒண்ணு என்கிட்ட பேசலாம்.. இல்லைன்னா எங்கம்மாகிட்ட பேசலாம்.. வேற யாராச்சும் என் பெயரைப் பயன்படுத்திக்கிட்டு.. என் கால்ஷீட் வாங்கித் தரேன்னு சொல்லிட்டு பேசுனாங்கன்னா அதையெல்லாம் நம்பாதீங்க.. அதுக்கு நான் பொறுப்பில்லை”ன்னு பொறுப்பா சொல்லிட்டுப் போயிட்டாங்க..
இதே மாதிரிதான் ‘தெகிடி’ படத்தோட பிரஸ் மீட்ல அந்தப் படத்தோட ஹீரோயின் ஜனனி ஐயரும் புலம்பித் தள்ளிட்டுப் போனாங்க..
ஆக மொத்தம்.. யாரோ ஒரு கும்பல் இதுக்காகவே குரூப்பா கிளம்பி வந்திருக்காய்ங்க போலிருக்கு..! பிள்ளைகளை நாலு காசு சம்பாதிக்க விடுங்க ராசாக்களா..! புண்ணியமாப் போவும்..!