தமிழ் சினிமாவில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ஐம்பது அறிமுக கதாநாயகிகளாவது வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், இதில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு அடுத்தடுத்த படிகளில் ஏறி செல்பவர்கள் மிகவும் குறைவே.
ஆனால், ஒரு சில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி சட்டென ஒரு புகழ் வெளிச்சத்திற்குள் வந்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் அறிமுக நடிகையாக களம் இறங்கியுள்ள அக்மார்க் தமிழ் பொண்ணுதான் இந்த தீப்ஷிகா.
ஆம். தமிழ்நாட்டை சேர்ந்த பெண்கள் திரையுலகில் நுழைவதே அரிது, அப்படியே நுழைந்தாலும் அவர்களுக்கு இங்கே பெரிய வரவேற்பில்லை என்கிற வாதத்தை எல்லாம் உடைத்து நொறுக்கி, கடந்த ஒரு வருடத்திற்குள் தமிழில் மூன்று, தெலுங்கில் மூன்று என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை தீப்ஷிகா.
சென்னையிலேயே பிறந்து வளர்ந்து படித்த தீப்ஷிகா, தானாக விரும்பி சினிமாவில் நுழைவதற்கு முன்னதாக சினிமாவே அவரை தேடி வந்துவிட்டது என்றுகூட சொல்லலாம்.
‘ரேணிகுண்டா’, ‘கருப்பன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பன்னீர்செல்வம் தான் இயக்கும் படத்திற்கான நடிகைகள் தேடலில் வைத்த ஆடிஷனில் கலந்துகொண்ட தீப்ஷிகா, இப்போது அந்தப் படத்தில் நடித்து முடித்தும் விட்டார்.
இந்தப் படத்தில் ஒரு பட்டாம்பூச்சி போல அவரது கதாபாத்திரம் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டு உள்ளதாம்.
இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ‘மாயா’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கிறார் தீப்ஷிகா. இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் சர்ப்ரைஸ் மற்றும் ட்விஸ்ட் கலந்த ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே தெலுங்கில் பிரபல நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட தீப்ஷிகா, அந்தப் படத்திற்கான வெளிநாட்டு படிப்பிடிப்பில் நடித்துவிட்டு, தற்போது ஹைதராபாத்தில் நடக்கும் ஷெட்யூலில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இது காதல் கலந்த உணர்வுப்பூர்வமான படமாக உருவாகிறது.
இது தவிர தெலுங்கு ஹீரோ நவீன் சந்திராவுடன் ஒரு படத்தில் நடித்து முடித்தும் விட்டார். கைவசம் இன்னொரு தெலுங்கு படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது சிறப்புச் செய்தி.
இப்படி ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே 5 படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்து நடிப்பதென்பது நிச்சயமாக அதிர்ஷ்டம்தான். தீப்ஷிகாவுக்கு இந்த அதிர்ஷ்டம் நிறையவே இருக்கிறது போலும்..!