full screen background image

“கடைசி நாள் படப்பிடிப்பில் அழுதேன்…” – சொல்கிறார் நடிகை அதிதி ராவ் ஹைதாரி

“கடைசி நாள் படப்பிடிப்பில் அழுதேன்…” – சொல்கிறார் நடிகை அதிதி ராவ் ஹைதாரி

துல்கர் சல்மான், அதிதி ராவ் ஹைதாரி மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ஹே சினாமிகா’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் மார்ச் 3-ம் தேதி வெளியாக உள்ளது.

ஜியோ ஸ்டுடியோஸ் க்ளோபல் ஒன் ஸ்டுடியோஸுடன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடன இயக்குநரான பிருந்தா ‘மாஸ்டர்’ இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்த ‘ஹே சினாமிகா’ படத்தில் பணியாற்றிய  அனுபவம் குறித்து நடிகை அதிதி பேசும்போது, “பிருந்தா மாஸ்டரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் பணியாற்றுவதை நான் மிகவும் விரும்புகிறேன். அவர் இயக்கும் முதல் படத்தில் நானும் துல்கரும்தான் நடிக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 

நானும் துல்கரும் இந்தப் படத்திற்கு முன்பே நண்பர்கள். இந்தப் படத்தில் ஒன்றாகப் பணியாற்றியது எங்களுக்கு உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்ததில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். 

ஒரு மனிதருக்குள் பல்வேறு சுபாவங்கள் உள்ளது. எனது வேடிக்கையான பக்கத்தை பற்றி எனக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே அறிவார்கள். எனது இந்த பக்கத்தை எங்களது நடன ஒத்திகையின்போது பிருந்தா மாஸ்டர் கவனித்திருப்பார் என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று அவர் உறுதியாக இருந்ததாக நினைக்கிறேன். எனது அந்த மறுபக்கத்தை இந்த படத்தில் ரசிகர்கள் நிச்சயமாகக் காணலாம்.

நான் இதுவரை இது மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்ததில்லை. இந்தப் படத்தை பொருத்தவரை திரைக்கதை, சூழ்நிலை மற்றும் அதை எழுதியவிதத்தில் பெரும்பாலான நகைச்சுவை அமைந்துள்ளது. மக்களை சிரிக்க வைப்பது மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்றாகும். நிறைய திறமையான நடிகர்கள் எங்களுடன் பணியாற்றியதால் அது எங்களது வேலையை இன்னும் எளிதாக்கியது.

ஒரு இயக்குநராக பிருந்தா மிகவும் திறமையானவர். இயக்கம் செய்தபோது அவர் நடன இயக்குநராக செயல்படவில்லை.  இரண்டு துறைகளையும் தனித்தனியாக அவர் கவனித்துக் கொண்டார். நடிகர்களை எப்படி கையாள்வது என்பதும் அவருக்கு இயல்பாகவே தெரிந்திருந்தது.

படப்பிடிப்பில்  உற்சாகமான ஒரு குழந்தையைப் போலவே அவர் இருந்தார். ஒவ்வொரு காட்சியையும் பிருந்தா ரசித்து இயக்கினார். அவருக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் தெளிவாக இருந்தார். அதே வேளையில் எங்களது கருத்துகளுக்கும் மதிப்பளித்தார். 

என்னுடன் நடித்த காஜல் அனுபவம் வாய்ந்த நடிகை. இப்படத்தில் அவருடன் எனக்கு அதிக காட்சிகள் இல்லை. சில முக்கிய காட்சிகளில் மட்டுமே இருவரும் இணைந்து நடித்தோம். அவரது வருகை ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்தது. எங்கள் அனைவருடனும் எளிதில் பழகியதற்காக காஜலை நான் பாராட்ட வேண்டும். மொழித் தடைகள் இருந்தபோதிலும் சிறந்த முறையில் அவர் பணியாற்றியது பாராட்டுக்குரியது.

படப்பிடிப்பின் போது பல சுவாரஸ்யமான பல அனுபவங்கள் எங்களுக்கு ஏற்பட்டது. ஒரு தடவை அனைவரும் புயலில் சிக்கினோம். நான் பீதியடைந்து அழ ஆரம்பித்ததை துல்கர் கிண்டல் செய்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

கொவிட் நோயின் ஆரம்ப கட்டத்தில், நாங்கள் ரசம் குடித்துவிட்டு படப்பிடிப்பைத் தொடர்ந்தோம். பின்னர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது, ஆனால் தளர்வுகள் செய்யப்பட்டவுடன் அதிக ஆற்றலுடன் நாங்கள் திரும்பினோம். இந்த படப்பிடிப்பு முடிவடைவதை நான் விரும்பவில்லை, படப்பிடிப்பின் கடைசி நாளில் நான் அழுதே விட்டேன்.

நான் ஏன் ஒரு படம் செய்கிறேன், அதில் எனக்கு என்ன பங்கு இருக்கிறது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். என்னைப் பொருத்தவரை பார்வையாளர்களைக் கவருவது முக்கியம்.

நான் காதல் கதையுள்ள படங்களில் நடிப்பதை அதிகம் விரும்புகிறேன். ஒரு காதல் கதையில் வித்தியாசமான போக்கு அல்லது பயணம் இருக்கும்போது, ​​அது எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும்.

நான் சினிமாவை மாயாஜாலமாகவும், காலத்தை கடந்ததாகவும் பார்க்கிறேன். நான் மதிக்கும் மற்றும் ரசிக்கும் இயக்குநர்களுடன் பணியாற்றுவது எனக்கு முக்கியம். காலம் தாண்டிய, அதே சமயம் காலத்திற்கு பொருத்தமான ஒருவராக இருக்கவே நான் விரும்புகிறேன்…” என்று சொல்லி முடித்தார் நடிகை அதிதி.

Our Score