full screen background image

“டிராபிக் ராமசாமி படம் மூலமாக என் நீண்டநாள் கனவு நனவாகியது…” – நடிகை அம்பிகாவின் சந்தோஷம்..!

“டிராபிக் ராமசாமி படம் மூலமாக என் நீண்டநாள் கனவு நனவாகியது…” – நடிகை அம்பிகாவின் சந்தோஷம்..!

வளர்ந்து வரும் ‘டிராபிக் ராமசாமி’ படம் தன் நீண்ட கால கனவை நிறைவேற்றியிருப்பதாக நடிகை அம்பிகா அகமகிழ்ந்து சொல்கிறார்.

75 வயதிலும் தமிழகத்தின் சமூகப் போராளியாக திகழும் பெரியவர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக வைத்து, அவருடைய பெயரிலேயே ஒரு திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் பிரபல இயக்குநரான எஸ்.ஏ.சந்திரசேகர் டிராபிக் ராமசாமி வேடத்தில் நடித்து வருகிறார். இதே படத்தில் நடிகை அம்பிகாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் விஜய் விக்ரம் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் தான் இத்தனை ஆண்டு காலமாக தவம் கிடந்து காத்திருந்து கிடைத்திருக்கிறது என்று பெரும் மகிழ்ச்சியுடன் சொல்கிறார் நடிகை அம்பிகா.

இது பற்றி அம்பிகா பேசும்போது, “நான் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இருநூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன்.

பல்வேறுபட்ட மொழிகளில் எவ்வளவோ பாத்திரங்களில் நடித்திருக்கிறேன். ஆனால், செண்டிமெண்டோடு கலந்த  நகைச்சுவையான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்பது என் நீண்ட நாள் ஆசையாக,  கனவாக இருந்து கொண்டிருந்தது. ‘டிராபிக் ராமசாமி’ என்கிற படத்தின் மூலம் அந்தக் கனவு நிறைவேறி இருக்கிறது. 

‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில்  ஒரு வக்கீல்  வேடத்தில்  நடித்தேன். அதை  எஸ்.ஏ.சந்திரசேகர் ஸார்தான் இயக்கியிருந்தார். சுமார் முப்பது ஆண்டுகள் கழித்து அவர்  நடிக்கும் இந்த ‘டிராபிக் ராமசாமி’ என்கிற படத்தில் பதவி உயர்வு பெற்று நீதிபதியாக நடிக்கிறேன்.

இது  நகைச்சுவை கலந்த கதாப்பாத்திரம். எனக்கு இது மிகவும் புதுமையான வேடமாக, மாறுபட்ட நடிப்பு  அனுபவமாக  இருந்தது. ஒரு வகையில் என் நீண்ட நாள் கனவு நிறைவேறிய திருப்தி எனக்கு இந்தப் படத்தின் மூலமாகக் கிடைத்துள்ளது. அந்தப் பாத்திரத்தில் நான் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்திருக்கிறேன்..” என்கிறார் சந்தோஷத்துடன்..!

Our Score