அட ராமா.. இவுங்க கல்யாணம் முடியற நாளைய தினத்துக்குள் இன்னும் எத்தனை, எத்தனை டிவிஸ்ட்டுகளை பார்க்கப் போறோமோ.. தெரியலையே..?
சென்ற சனிக்கிழமையன்று கேரளாவில் நடைபெற்ற இயக்குநர் விஜய்-நடிகை அமலாபாலின் திருமண நிச்சய விழாவை, “அதுவொரு சாதாரண பிரார்த்தனை கூட்டம் மட்டும்தான். என் மகளின் நிச்சயத்தார்த்த விழா அல்ல…” என்று அமலாபாலின் தந்தையே கூறியிருப்பது இப்போதைய திடீர் திருப்பம்.
கிறித்துவ முறைப்படி சில நேரங்களில் திருமண நிச்சயத்தார்த்தத்தை சர்ச்சில் வைத்துக் கொள்வார்கள். சிலர் தங்களது வீடுகளில் விழாவை நடத்திவிட்டு செய்தியை அறிவிக்கச் சொல்லி திருச்சபையிடம் எழுத்து மூலமாகச் சமர்ப்பிப்பார்கள். அதன் பின்பு திருமணம் மட்டும் சர்ச்சுகளில் நடக்கும்.. இதில் மோதிரம் மாற்றுவது, மணமகளின் கழுத்தில் செயின் அணிவிப்பது என்பதெல்லாம் அந்தந்தப் பகுதி மக்களின் சம்பிரதாயமான சடங்குகள்.
சென்ற சனிக்கிழமையன்று கொச்சியில் உள்ள செயிண்ட் ஜூட் சர்ச்சில் நடிகை அமலாபாலுக்கும், இயக்குநர் விஜய்க்கும் திருமண நிச்சயத்தார்த்த விழா என்ற அறிவிப்புடன்தான் இந்த நிகழ்வு நடந்தது. இதில் இரு வீட்டாரும் கலந்து கொண்டனர். நெருங்கிய நண்பர்களும் வந்திருந்தனர். இதில் அமலாபாலும், விஜய்யும் மோதிரங்களை அணிவித்துக் கொண்டனர். அன்றைய இரவு மிகப் பிரமாண்டமான விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கேரள சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முதலில் இது நிச்சயத்தார்த்தமா? கல்யாணமா? என்றெல்லாம் சர்ச்சைகள் எழுந்து இணையவுலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக எழுதி வரும் வேளையில், அமலாபாலின் தந்தையான பால் வர்கீஸ் நேற்று செய்த ஒரு செயல் இன்னமும் குழப்பத்தைக் கூட்டியிருக்கிறது.
செயிண்ட் ஜூட் சர்ச்சின் நிர்வாகத் தலைமை பீடமான எர்ணாகுளம் மற்றும் வரப்புழா ஆர்ச் பிஷப்புக்கு பால் வர்கீஸ் எழுதியிருக்கும் கடிதத்தில், “சென்ற சனிக்கிழமையன்று செயிண்ட் ஜூட் சர்ச்சில் நடந்தது எனது மகள் அமலாபாலின் திருமண நிச்சயத்தார்த்த விழா அல்ல..” என்று கூறியிருக்கிறார். மேலும் “எனது மகள் அமலாபால், சிறு வயதில் இருந்தே அந்த ச்ர்ச்சில் பிரார்த்தனை செய்திருக்கிறாள். இதன் காரணமாய், அந்த சர்ச்சுடன் மன ரீதியாக நெருங்கிய நட்புடன் இருக்கிறாள். ஆகவே, தனது வருங்கால கணவருடன் அங்கே வந்து ஒரு பிரார்த்தனையை மட்டுமே நடத்தினாள்..” என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார் பால் வர்கீஸ்.
இதற்கான காரணமும் இப்போது தெரிய வந்திருக்கிறது. இந்த விழா நடந்த மறுநாளில் இருந்தே கேரளாவில் குறிப்பாக இத்திருச்சபையைச் சேர்ந்த கிறித்தவர்கள் மத்தியில் பலத்த கருத்து வேறுபாடுகளாம்.. “இந்துவாக இருக்கும் ஒரு மணமகன், இன்னமும் கிறித்துவராக மதம் மாறாத மணமகனை வைத்து நம் சர்ச்சில் எப்படி திருமண நிச்சயத்தார்த்த விழாவை நடத்தி வைக்கலாம்?” என்று அந்தச் சர்ச்சில் இருந்த பாதிரிமார்களை கேள்விக்கணைகளால் துளைத்துவிட்டார்களாம். அந்த மறைமாவட்ட தலைமை பாதிரியாருக்கு இது தொடர்பாக கண்டனக் கடிதங்களும், புகார்களையும் சிலர் தட்டிவிட்டிருக்கிறார்கள்.
இதன் எதிரொலிதான் அமலாபாலின் தந்தை பால் வர்கீஸின் இந்தத் தடாலடி பல்டி..!
இந்துத் திருமணச் சட்டத்தில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதால், நாளை அவர்களுக்கு நடக்கவிருக்கும் திருமணம், நிச்சயம் ஒரிஜினல் திருமணம் என்றே நாம் நம்பலாம்..!
மதங்களெல்லாம் மனுஷனை ஒண்ணு சேர்க்கத்தானய்யா இருக்கு..? இடைல நீங்க ஏன்யா இப்படி பிரிச்சு பிரிச்சே பார்க்குறீங்க..?!