full screen background image

நடிகை அபிநிதாவின் காதல் ஓட்டம்..!

நடிகை அபிநிதாவின் காதல் ஓட்டம்..!

தமிழ் சினிமாக்களில் தமிழ் பேசும் நடிகைகளையே நடிக்க வைப்பதில்லை என்று புகார் சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.. “நடிக்க வந்தால் நாங்களா நடிக்க வைக்க மாட்டேன்றோம்…” என்கிறார்கள் இயக்குநர்கள்.

வருகின்ற தமிழ்ப் பெண்களும் சில படங்களில் மட்டுமே நடிக்க முடிகிறது. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். இங்கே கவர்ச்சி காட்டினால்தான் தாக்குப்பிடிக்க முடியும்.. தமிழ்ப் பெண்களில் அதிகம் பேர் இதற்கு ஒத்துக் கொள்வதில்லை. இதனாலேயே திரையுலகில் அவர்கள் நீடிப்பதுமில்லை..

இருக்கின்ற சில பேரும் வேறு பல காரணங்களுக்காக விலகி ஓடுவதால் வெற்றிடம்தான் ஏற்படுகிறது. நேற்றும் ஒரு தமிழ் நடிகை இப்படித்தான் கோடம்பாக்கத்தைவிட்டு பட்டுக்கோட்டைக்கே சென்றுவிட்டாராம்.. பாவம்.. சினிமா காதல் போலவே.. அவருடைய காதலும் அவரை வீட்டைவி்ட்டு ஓட வைத்துவிட்டது.

அபிநிதா. சின்ன வயதுதான். நிறம் கருப்புதான். ஆனால் களையான முகம்.. சினிமா நிகழ்ச்சிகளுக்கு வரும் தொலைக்காட்சி பத்திரிகையாளர்களுக்கும், கேமிராமேன்களுக்கும் மிகவும் பிடித்த நடிகை..

ஏன் பிடிக்குமென்றால்.. ஒரு சில ஹீரோயின்களிடம் பேட்டி கேட்டு பெறுவதற்குள் நிருபர்களுக்கு நாக்குத் தள்ளிவிடும். ‘மை நேம் இஸ் சிம்ரன் கபூர்’ என்று சொல்லிவிட்டு ‘நெக்ஸ்ட்’ என்று நம் முகத்தையே பார்ப்பார்கள். திரும்பவும் அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்பதை ரிப்போர்ட்டர்கள் சொல்லிக் கொடுத்தால், அவர்கள் அதை மனப்பாடம் செய்து மீண்டும் கேமிரா முன்பாகவே சொல்வார்கள்.. இதுவேதான் அனைத்து கேமிராக்களிலும் நடக்கும்.. ‘கொடுமைடா சாமி’ன்னு தலைல அடிச்சுட்டு போக வேண்டியதுதான்..!

இந்த நடிகை அபிநிதா.. நான் ஸ்டாப்பாக பேசுவதில் வல்லவர். ‘எவ்வளவு நேரம் பேசணும்?’ என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டு பயமுறுத்துவார். ஆரம்பித்தால் நாம் போதும் என்று சொல்கின்றவரையில் பேசிக் கொண்டே போவார்.. எதுவும் சொல்ல வேண்டாம்.. மைக்கை ம்ட்டும் நீட்டினால் போதும் என்கிற அளவுக்கு கேமிராவுடன் வரும் பத்திரிகையாளர்களிடம் நன்கு பரிச்சயமானவர்..

‘மாமன் மச்சான்’ படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தபோது இவருடன் துணைக்கு வந்திருந்த இவரது தாயாரிடம் “பொண்ணு நல்லா பேசுதே.. நிச்சயம் ஒரு ரவுண்டு வரும்..” என்ற பத்திரிகையாளர்களிடம் ஒரு பாட்டு ஒப்பாரியே வைத்துவிட்டார் அவரது தாயார்.

“நீங்களே சொல்லுங்க தம்பி.. நல்லா வர வேண்டிய பொண்ணு.. இப்பதான் நாலு காசு சம்பாதிக்க வேண்டிய நிலைமைல இருக்கோம். இப்போ போய் லவ்வு, கிவ்வெல்லாம் தேவையா.. அவ ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டரை லவ் பண்றேன்னு சொல்லி பயமறுத்துக்கிட்டிருக்கா..” என்று  அழுதார்.

இது போதாதா..? அன்றைக்கு ‘மாமன் மச்சான்’ படத்தின் பிரஸ்மீட்டைவிட இவரது லவ் ஸ்டோரிதான் பெரிதாக எழுதப்பட்டது. கொஞ்ச நாளில் அதுவும் மறைந்து, அவ்வப்போது சில படங்களின் பிரஸ்மீட்டுகளில் தலையைக் காட்டிக் கொண்டிருந்தார்.

இவர் முதலில் நடித்த படம் ‘கற்பவை கற்ற பின்’. பின்பு ‘மாமன் மச்சான்’. இதன் பின்பு சில படங்களில் ஹீரோயினுக்கு தோழியாகவும் நடித்திருந்தார்.  ‘விழா’ படத்தில் 2–வது கதாநாயகியாகவும் நடித்திருந்தார். இவர் நடித்து இன்னமும் ரிலீஸாகாத படங்கள்தான் அதிகமாம். ‘மீனாட்சி காதலன் இளங்கோவன்’, ‘6 சக்கர குதிர’, ‘ஒரு தோழன், ஒரு தோழி’ உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

4 நாட்களுக்கு முன்பாக திடீரென்று காணாமல் போன அபிநிதாவை ‘காணவில்லை’ என்று சொல்லி அவரது தாயார் கற்பகம், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

காணாமல் போன நடிகை அபிநிதா, தனது காதலரான துணை இயக்குநர் மகேஸை திருமணம் செய்து கொண்டு அவரது சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் இருந்தாராம். இரு நாட்களுக்கு முன்பாக வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தான் தனது காதலரை திருமணம் செய்துவி்டடதாக எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டாராம்..!

எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்துகிறோம்..!

Our Score