வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் தமிழகமெங்கும் நாடகங்களை நடத்திக் கொள்ள அனுமதி தருமாறு தமிழக தேர்தல் ஆணையத்திடம் தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இதற்காக இன்று காலை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுபினர் A.L.உதயா, நியமன செயற்குழு உறுபினர்கள் லலிதா குமாரி, மனோபாலா, அஜய் ரத்தினம் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லங்கோனியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், “தமிழகமெங்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் நாடக துறையை சார்ந்தவர்கள். நாடகம் என்பது திருவிழா காலங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது. அதற்கான சூழல் வருடத்தில் ஆறு மாதங்கள் மட்டுமே இருக்கும். அக்காலக் கட்டத்தில் கிடைக்கும் வருமானத்தில்தான் நாடகக் கலைஞர்கள் வருடம் முழுவதும் தங்களது குடும்பம் நடத்த வேண்டும்.
நவீன பொழுது போக்கு சாதனங்களால் நாடகத் துறை பெரிதும் அழிந்து வருகின்ற இந்த காலகட்டத்திலும், அதையே நம்பி வாழும் நாடக கலைஞர்கள் மிகுந்த கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
ஆனால் கடந்த பொது தேர்தல் காலத்திலிருந்து இருந்து தேர்தல் காலங்களில் நாடகங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் அந்த மூன்று மாதங்களும் எங்கள் நாடகக் கலைஞர்கள் தங்களுடைய வேலை வாய்ப்பை இழக்க நேரிடுகிறது. இதன் விளைவாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வித் தொகை கட்டவும் முடியாமல் இருக்கிறது.
எனவே நாடகக் கலைஞர்களின் இந்த சிரமத்தை உணர்ந்து எதிர்காலத்தில் தேர்தல் காலகட்டங்களிலும் நாடகம் நடத்துவதற்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். இதற்காக தேர்தல் ஆணையம் விதிக்கும் எத்தகைய விதிகளுக்கும் எங்களது நாடகக் கலைஞர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள்..” என்று கூறப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்த பின், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பொன்வண்ணன், “எங்களது தலைமையிலான புதிய அணி நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்றவுடன், ஏற்கனவே நாடக நடிகர்கள் வைத்த மிக முக்கியமான இந்தக் கோரிக்கையை எங்களுடைய தலையாய பிரச்சனையாக எடுத்துக் கொண்டு, கடந்த முறை தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்தித்தபோது அவர்களிடம் இதை ஒரு கோரிக்கையாகவே முன் வைத்தோம்
.அப்போது, ‘நாடக நடிகர்களுக்கு எங்கள் அரசாங்கம் எப்போதும் முழு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறது. தேர்தல் காலகட்டத்தில் நாடக நடிகர்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை உள்ளதென்றால், இதை ஒரு கோரிக்கையாக வைத்து தேர்தல் அதிகாரியை சந்தித்து விண்ணப்பம் கொடுங்கள்’ என்று அம்மா அவர்கள் ஒரு வழிகாட்டுதலை சொன்னார்கள்.
அதன் அடிப்படையில் இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லங்கோனியை சந்தித்து மனு கொடுத்தோம், அதற்கு தேர்தல் அதிகாரி, ‘தேர்தல் காலங்களில் சுதந்திரமாக மக்கள் செயல்படுவதற்கு சட்டப்படி எந்த தடையுமில்லை. நான் இது பற்றி விசாரித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவிப்பதாக’ உறுதி அளித்துள்ளார். மேலும் ‘முறைப்படி அவர்கள் முழு சுதந்திரமாக நாடகம் நடத்த வழிமுறை செய்கிறேன்’ என்று உத்திரவாதமும் கொடுத்துள்ளார். எங்களுக்கு அது மிக சந்தோசமாக உள்ளது.
தேர்தல் நடைபெறுகின்ற காலக்கட்டத்தில் எங்களது நாடக நடிகர்கள் கட்சி ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ நாடகங்கள் போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை. அதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைக்க நாடக கலைஞர்களிடம் அறிவுறுத்துவோம்.
அத்தோடு தேர்தல் அதிகாரி எங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். ‘தேர்தலில் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் வாக்களிப்பதற்கான விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்தும் வகையில் நடிகர்களின் வீடியோ பதிவை ஷூட் செய்து தருமாறு’ கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது போன்ற பொது மக்களினுடைய பணியில் எங்களுடைய உழைப்பும், பங்களிப்பும் இருப்பதை நாங்கள் பெருமையாக நினைக்கிறோம். இந்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம் என்று உத்திரவாதம் கொடுத்துள்ளோம்..” என்றார்.