நேற்றைக்கு திடீரென்று காலமான தமிழ்த் திரைப்பட நடிகரான விவேக் இயக்குநராகும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
நடிகர் விவேக்கிற்கு இரங்கல் தெரிவித்து சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இது தெரிய வந்துள்ளது.
தான் முதன்முதலாக இயக்கப் போகும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க வேண்டும் என்று விவேக் விரும்பியிருக்கிறார்.
இதனால் அவர்களை அணுகியிருக்கிறார் விவேக். அவர்களும் இதற்கு ஓகே சொல்ல.. கடந்த ஒரு மாத காலமாக விவேக் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்திற்கு தினமும் சென்று வந்திருக்கிறார்.

முழு கதை, திரைக்கதையையும் சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார் விவேக். படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகளை தேர்வு செய்வதில் கடந்த வாரம் முழுவதும் ஈடுபட்டிருக்கிறார் விவேக். நடிகை இந்துஜாவிடம்கூட இது பற்றிப் பேசி இந்த வாரம் அவரிடத்தில் கதை கேட்பதற்காக வரச் சொல்லியிருந்தாராம் விவேக்.
இந்தச் சூழலில்தான் எதிர்பாராதவகையில் விவேக்கின் இறப்பு நேரிட்டிருக்கிறது. காலனின் அவசரத்தால் விவேக்கின் இயக்குநர் கனவு நிராசையாகிவிட்டது.