full screen background image

நடிகர் விவேக்கின் உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

நடிகர் விவேக்கின் உடல் போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

இன்று காலை மருத்துவமனையில் காலமான நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தமிழ்த் திரையுலகத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான நடிகர் விவேக் திடீர் மாரடைப்பால் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் நேற்றைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அங்கு தீவிர சிகிச்சையளித்த நிலையிலும் அவர் இன்று விடியற்காலை 4.35 மணிக்குக் காலமானார்.

இதையடுத்து அவரது உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் திரையுலகத்தின் மூத்தக் கலைஞர்களும், நடிகர், நடிகைகளும், பத்திரிகையாளர்களும், பல்வேறு சமூகத்தினரும், பொதுமக்களும் திரளாக வந்திருந்து நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேரில் அஞ்சலி செலுத்தினார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் எம்.பி.க்கள் ஆ.ராசா,ஆலந்தூர் பாரதி, மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
 
மேலும் பா.ஜனதா முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன், அ.ம.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தமிழன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
 
நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஜய்சேதுபதி, நாசர், அர்ஜுன், பார்த்திபன், சந்தானம், அருண் விஜய், பரத், ஜெய், விஜய் ஆண்டனி, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், ஹரிஷ் கல்யாண், எஸ்.ஜே. சூர்யா, கணேஷ் வெங்கட்ராமன், கவுண்டமணி, யோகிபாபு, நட்ராஜ், சூரி, மயில்சாமி, கஞ்சா கருப்பு, சார்லி, அப்புகுட்டி, தலைவாசல் விஜய், தாமு, நரேன், இமான் அண்ணாச்சி, பாண்டியராஜன், வையாபுரி, ரமேஷ்கண்ணா, எம்.எஸ்.பாஸ்கர்,
 
நடிகர் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், நடிகைகள் ஜோதிகா, குஷ்பூ, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், கஸ்தூரி, ரேகா, சஞ்சனா சிங், பிரியா பவானி சங்கர், ரித்விகா, சி.கே.சரஸ்வதி, அஞ்சு, ஆர்த்தி, டைரக்டர்கள் ஷங்கர், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், லிங்குசாமி, ஏ.எல்.விஜய், எழில், சரண், விக்ரமன், கார்த்திக் சுப்புராஜ், தரணி, பாலு மலர்வண்ணன்,
 
கவிஞர்கள் வைரமுத்து, சினேகன், காசிமுத்துமாணிக்கம், எடிட்டர் மோகன், இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், தினா, பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் ஏ.எல்.அழகப்பன், கேயார், தேனப்பன், ஜாக்குவார் தங்கம், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

பெருந்திரளானா பொதுமக்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட கியூவில் நின்று காத்திருந்து விவேக்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

இதற்கிடையே நடிகர் விவேக்கின் பொது நல சேவையைப் பாராட்டி அவருக்கு போலீஸ் மரியாதை தரவிருப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

அஞ்சலி செலுத்த வந்தக் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதியம் 2.30 மணிவரையிலும்தான் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்பு அவரது இறுதிச் சடங்கிற்கான வேலைகள் நடந்தன.

மாலை 4 மணிக்கு அவரது வீட்டில் இருந்து ஊர்வலம் கிளம்பியது. முன்னும், பின்னும் நூற்றுக்கணக்கான அவரது ரசிகர்கள் படை சூழ விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மின் மயானத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.

அங்கே தமிழக அரசு அறிவித்திருந்தபடி போலீஸார் 78 முறை துப்பாக்கிக் குண்டுகளை வெடிக்க வைத்து நடிகர் விவேக்கிற்கு தங்களது மரியாதையை செலுத்தினார்கள்.

அதன் பிறகு விவேக்கின் இளைய மகள் தேஜஸ்வினி அவருக்கு இறுதிக் காரியங்களைச் செய்ய..  6 மணியளவில் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Our Score